பாஜக-வுக்கு நிபந்தனையா? – சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!

மத்தியில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி-க்கள் தேவை. ஆனால், கடந்த தேர்தலில் 303 இடங்களைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறை 240 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறது. ஆகவே, ஆந்திராவில் 16 இடங்களில் வென்றிருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் 12 இடங்களில் வென்றிருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது.

கடந்த முறை பா.ஜ.க மட்டுமே 303 எம்.பி-க்களை வைத்திருந்தார்கள். இப்போது, இந்த இரு கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 293 எம்.பி-க்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமையவிருக்கிறது.

எப்படியோ மத்தியில் மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறோம், மீண்டும் பிரதமர் ஆகிறோம் என்று மோடி ஆசுவாசப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வைத்துவரும் நிபந்தனைகளால் பா.ஜ.க தலைவர்கள் விழிபிதுங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசின் அச்சாணிகளாக இருக்கப்போகும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனை நிறைவேற்றுவதைத் தவிர, பா.ஜ.க-வுக்கு வேறு வழியே இல்லை.

நிதிஷ்குமார்

சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

மிக முக்கியமாக தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் இருவரும் முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு மத்திய பா.ஜ.க அரசு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது என்ற சர்ச்சையில்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது. அந்தக் கோரிக்கையை 2019-ம் ஆண்டு பா.ஜ.க அரசு நிராகரித்தது. அப்போது விட்டதை இப்போது பிடிக்கிறார் சந்திரபாபு நாயுடு. தற்போது, அஸ்ஸாம், நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களவை சபாநாயகர் பதவி தெலுங்கு தேசத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் சந்திரபாபு நாயுடு முன்வைத்திருக்கிறார். மேலும், அமைச்சரவையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் வேண்டுமென்று அவர் வலியுறுத்திவருகிறார்.

நிதிஷ்குமார் 

சந்திரபாபு நாயுடுவைப் போலவே, நிதிஷ்குமாரும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி பீகாரில் நடைபெற்றுவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை பா.ஜ.க-விடம் அவர் நிபந்தனையான வலியுறுத்துகிறார்.

நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் இரண்டு கேபினட் அமைச்சர்கள், ஒரு இணை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கேட்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நிதிஷ்குமார் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர். இந்த முறை ரயில்வே அமைச்சர் பதவியை அவர் கேட்கிறார். ஆனால், நிதித்துறை, உள்துறை, ரயில்வே போன்ற சில முக்கியமான துறைகளை தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளின் இன்னொரு முக்கியமான நிபந்தனை. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பா.ஜ.க நினைத்தவற்றை எல்லாம் செய்தது. பிரிவு 370 நீக்கம் போன்ற தனது முக்கிய அரசியல் அஜெண்டாக்களை எல்லாம் பா.ஜ.க நிறைவேற்றியது. குறைந்தபட்ச பொது செயல் திட்டம் கொண்டுவரப்பட்டால் பா.ஜ.க தன் விருப்பப்படி திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

குமாரசாமி – தேவகவுடா

காரணம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனையாக இருக்கிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளராக ஜார்ஜ் ஃபெண்டான்டஸ் இருந்தார். தற்போது, அந்தப் பதவிக்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர் என்று ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இந்த இரு கட்சிகள் தவிர தலா இரண்டு எம்.பி-க்களைப் பெற்றிருக்கும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கேட்பதாக சொல்கிறார்கள்.

பவன் கல்யாண்

குமாரசாமி தனக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமென்றும், வேளாண் துறை வேண்டும் என்றும் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாண்டு காலம் சுதந்திரமாக இயங்கிய பா.ஜ.க-வின் கைககள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டப்பட்டிருக்குமா? பல ரிமோட் கன்ட்ரோல்கள் மூலம் இயங்கும் நிலையில்தான் பா.ஜ.க அரசு இருக்குமா? என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88