NDA கூட்டணி தலைவராக மோடி தேர்வு; மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு துண்டுபோடும் நிதிஷ், சந்திரபாபு?

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 240 இடங்களை மட்டும் பெற்றதால் தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியிருக்கிறது. இருப்பினும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மொத்தமாக 293 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் உரிமை கோரலைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்கவிருப்பவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகிய இருவரும்தான்.

மோடி

என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்கள் மற்றும் இரட்டை இலக்கத்தில் இடங்கள் பெற்ற கட்சிகள் இவை இரண்டு மட்டுமே. இவர்கள் இருவரிடமும் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நேற்று பேச்சுகள் எழ, நாங்கள் என்.டி.ஏ கூட்டணியில்தான் இருக்கிறோம் என இருவரும் தெளிவுபடுத்திவிட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணிக் கூட்டத்தில், அந்தக் கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், `இதற்கு மேல்தான் என்.டி.ஏ கூட்டணியில் ஆட்டமே இருக்கிறது’ என்கிறார்கள் தேசிய அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

காரணம், கடந்த ஆட்சியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக இருந்ததால், பிரதமர் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் அனைத்தும் பா.ஜ.க வசமே இருந்தது. இந்தமுறை அப்படியில்லை, 240 இடங்கள் மட்டுமே பா.ஜ.க வைத்திருப்பதால், பிரதமராக மோடியே மீண்டும் தேர்வுசெய்யப்பட்டாலும், அவரின் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டும் உரிமை கோரும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு – நிதிஷ் குமார்

என்.டி.ஏ கூட்டணியில் தங்களுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து முக்கியமான இலாகாக்களை சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கேட்டுப் பெறுவார்கள் என்று பேச்சுகள் வரும் வேளையில், அதில் முதல் வேலையாக மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு இருவரும் துண்டுபோடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. பிரதாமரின் அமைச்சரவையில் இல்லாத சபாநாயகர் பதவிக்கு இத்தகைய முக்கியத்துவம் இருப்பதற்கும் காரணமும் இருக்கிறது…

நாடாளுமன்றத்துக்கு வெளியில் வேண்டுமானால் பிரதமர், அமைச்சர்கள் என பல முக்கியத்துவம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்குள் அத்தகைய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் அவையை வழிநடத்துவதே சபாநாயகர்தான். அவையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் நடுநிலையானவர் சபாநாயகர் என்று கூறப்பட்டாலும், ஆளுங்கட்சி அல்லது ஆளும் கூட்டணி தரப்பிலிருந்தே சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மோடி – சந்திரபாபு நாயுடு

அத்தகைய சபாநாயகருக்கு, கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் எம்.பி-க்களை தகுதிநீக்கம் செய்யலாம் என்ற இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. கூட்டணி ஆட்சியாக இருக்கும் பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளிலிருந்து திடீரென விலகி வேறு கட்சிக்குத் தாவும் எம்.பி-க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகர் கையில் இருக்கிறது. இது ஒருவகையில், கூட்டணியிலிருந்து சிலர் வெளியேறுவதை சபாநாயகர் மூலம் ஆட்சியிலிருக்கும் அரசு அவ்வாறு நிகழாமல் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே பல எம்.எல்.ஏ-களுடன் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க, அவர்கள்மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றமே, இதில் விசாரித்து நடவடிக்கையை எடுக்குமாறு சட்டமன்ற சபாநாயகரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது. இப்படியாக, இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகர் வசம் இருக்கிறது.

மோடி – சந்திரபாபு நாயுடு

அதேபோல், அவையில் விதிமீறல் என்ற காரணத்தைக் கூறி எம்.பி/எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரமும் சபாநாயகருக்கு இருக்கிறது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, 140-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்கள் சஸ்பெண்ட் செய்தது நினைவிருக்கலாம்… இத்தகைய அதிகாரங்கள் நிறைந்த சபாநாயகர் பதவிக்குத்தான் இப்போது நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் போட்டிபோடுவதாக பேச்சுகள் அடிபடுகின்றன. எனவே, என்.டி.ஏ கூட்டணியில் யாருக்கு அந்த சபாநாயகர் அரியாசனம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb