பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனது சொந்த தொகுதியான மாண்டியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில்மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் (CISF) சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக புதிய எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது தொடர்பான ஒரு வீடியோவும் இணையத்தில் பரவியது.
ஆனால், அந்த வீடியோவில் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைவாங்குவது போல உறுதியான காட்சிகள் எதுவும் இல்லை. முன்னதாக கங்கனா ரனாவத், சண்டிகரிலிருந்து டெல்லிக்கு தனக்கான நாடாளுமன்ற அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) தொடர்பான கார்டு வாங்க இன்று சென்றார். பின்னர் அவற்றை வாங்கியது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விமான நிலையத்தில் எனக்கு சோதனை முடிந்த பிறகு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், நான் அவரை கடப்பதற்காக வேறு கேபின் அருகே காத்துக்கொண்டிருந்தார்.
பின்னர், பக்கவாட்டிலிருந்து திடீரென என் முகத்தில் அடித்தார். ஏன் என்ற கேட்டபோது, இது `விவசாயிகள் போராட்டத்துக்கானது’ என்று அவர் கூறினார். பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. இதைச் சரிசெய்ய வேண்டும்” என்று கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார். இப்படி கூறினாலும், உண்மையில் இவர் அந்த இடத்தில் தாக்கப்பட்டதற்கான உறுதியான சிசிடிவி காட்சிகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.