தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 240 இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தபோதிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 293 இடங்களை பெற்றிருக்கிறது. இதனால், கடந்த முறை போல பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மை ஆட்சியல்லாமல் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது. அதேபோல், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மொத்தமாக 234 இடங்களைப் பெற்றிருக்கிறது.

குறிப்பாக 99 இடங்களை வென்றிருக்கும் காங்கிரஸ், கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தை தற்போது பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குழு தலைவராகச் செயல்பட்டு வந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மேற்கு வங்கத்தில் பஹரம்பூர் தொகுதியில் தான் தோற்றதற்குப் பின், தனக்கு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரியாது என்றும் இனிவரும் நாள்கள் தனக்கு கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய தோல்விக்குப் பிறகு உள்ளூர் ஊடகத்திடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “இந்த அரசை எதிர்த்துப் போராடுவதற்கான எனது முயற்சியில் நான் எனது வருமானத்துக்கான வழிகளைப் புறக்கணித்து வந்தேன். நான் என்னை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள எம்.பி என்றுதான் கூறிவந்தேன். எனக்கு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரியாது.

இனிவரும் நாள்கள் எனக்கு கடினமாக இருக்கும். அதிலிருந்து எப்படி வெளிவரப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் மகள் ஒரு மாணவி. டெல்லியில் எம்.பி என்ற முறையில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு இல்லத்தை தனது படிப்புக்காக என் மகள் பயன்படுத்தி வந்தார். ஆனால், அது இப்போது இல்லாததால் வேறு இடத்தை தேடவேண்டும்” என்று கூறினார்.

1999 முதல் பஹரம்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக ஐந்து முறை எம்.பி யாக இருந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட்டருமான யூசுஃப் பதானிடம் 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும், இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும், மாநிலத்தில் தனித்து நின்ற திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமாக 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல், பா.ஜ.க 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரேயொரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88