‘அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும்’ என்கிற முதுமொழிக்கு ஏற்ப இந்த நாட்டின் தெய்வங்கள் (விவசாயிகள்), நடந்துமுடிந்திருக்கும் தேர்தலில் ‘தெய்வக் குழந்தை’யையே அடித்து நொறுக்கிப் போட்டிருக்கிறார்கள். மோடியின் ‘ஆப் கி பார் சார் ஷோ பார் (400)’ என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த 303-ல், 63 இடங்களைப் பறித்துக் கொண்டு, 240க்குள் முக்காடு போட்டுவிட்டனர். கூட்டணியாகவே 300க்குள் முடங்கி விட்டது மோடியின் தேசிய ஜனநாயக கோஷ்டி. 

மோடி பிரசாரம்

மோடியின் ஆட்டத்தை முடித்து வைத்ததில் முக்கிய பங்கு பஞ்சாப் விவசாயிகளுடையது என்றால், அதை யாராலும் மறுக்கவே முடியாது. எப்படி முடித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, விவசாயிகளின் முதலாம் மகாயுத்தம் 2020 பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது… எதிராளியாகிய டெல்லி சுல்தான்… மகாபிரபு மோடி எப்படியெல்லாம் திமிருத்தனமாக நடந்து கொண்டார்… கொடுமைகளை இழைத்தார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தால் மட்டுமே, மகாபிரபு சரிக்கப்பட்ட கதை தெளிவாகத் தெரியவரும்.

காலங்காலமாக எங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படி ஆகாத விலைதான் கிடைத்துவருகிறது. இதனால், கடன்பட்டு தற்கொலையில் தங்கள் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்வதுதான் தொடர்கதையாகவே இருக்கிறது. இத்தகைய கொடுமையான சூழலில் மோடி அரசு மேலும் ஒரு புதிய சுமையாக 3 புதிய கொடிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, எங்களை கார்ப்பரேட்டுகளின் கூலிகளாக மாற்ற சதித் திட்டம் போட்டது. இதைக் கண்டு வெகுண்டு எழுந்த எங்கள் பஞ்சாப் தோழர்கள், 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போர்க்கோலம் பூண்டனர். நவம்பர் 26-ல் டெல்லி மீது போர் தொடுக்க முடிவு செய்தனர். பெரிய அளவில் விவசாயிகளைத் திரட்டினர். மத்திய- மாநில அரசுகள் பேச்சு வார்த்தைகள் நடத்தின. ஆனால், பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்குச் சாதகமான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

`டெல்லி சலோ’ போராட்டம்

‘டெல்லி சலோ’ என்று கோஷத்தோடு போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் முன்நின்று நடத்தினர். போராட்டக்காரர்கள் ஹரியானா எல்லையைத் தொட்டபோது, பஞ்சாப் விவசாயிகள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது, ஹரியானாவை ஆண்டுகொண்டிருந்த பா.ஜ.க அரசு. டெல்லி சுல்தான் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, விவசாயிகளை ரத்தவிளாறாக்கி வேடிக்கைப் பார்த்தது.
பாதையில் பள்ளம் வெட்டி, ஆணிகளை அடித்து, தடுப்புச் சுவர்களை எழுப்பி, கற்களையும் முட்களையும் போட்டு என வண்டி, வாகனங்களில் மட்டுமல்ல… நடந்துகூட டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் கால் வைத்துவிடக்கூடாது என்று தடுத்து நிறுத்தப் பார்த்தனர் டெல்லி சுல்தான் மோடியின் அடிமைகள்.

சுல்தான் பரிவார் நடத்தும் அநியாயத்தை கண்டு கொதித்தெழுந்த உத்தரப் பிரதேசம், ஹரியானா விவசாயிகள் லட்சக்கணக்கானோர்… ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டனர். நாடு முழுக்க பல மாநிலங்களில் இருந்தும் ரயில் மார்க்கமாக விவசாயிகள் குவிந்தனர். அத்தனை ரயில்களையும் சோதனையிட்டு, விவசாயிகளைக் கண்டுபிடித்து ஆங்காங்கே இறக்கிவிட்டது ரயில்வே போலீஸ். அதையும் மீறி, அவர்கள் கண்களில் மிளகாய்ப் பொடி தூவியதுபோல தப்பி, டெல்லிக்குள் நுழைந்தனர் விவசாயிகள் பலரும்.
போலீஸ் மற்றும் துணைராணுவப்படை வேறுவழியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கவே… டெல்லியின் அத்தனை சாலைகளும் விவசாயிகளால் கைப்பற்றப்பட்டன. அதேசமயம், மேற்கொண்டு போலீஸ் மற்றும் துணைராணுவப்படையை இறக்கிவிட்டு, நகருக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பரண்களை அமைத்தார் மோடி.

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

அழைத்துப் பேசியிருந்தால் எளிதாக முடிந்திருக்க வேண்டிய கோரிக்கைப் போராட்டம். ஆனால், டெல்லி சுல்தான் மோடி தொடர்ந்து இறுமாப்போடு… திமிரோடு… விவசாயிகள் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருந்ததால்… 381 நாள்களுக்கு படுஉக்கிரமாக நீடித்தது. ஆகஸ்ட் 2020-ல் தொடங்கிய போர்… 2021 டிசம்பரில் முடிவுக்கு வந்தது.

வேறுவழியே இல்லாமல் முட்டிப்போட்டு, மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அந்தக் கொடிய மூன்று வேளாண் சட்டங்களையும் மோடி வாபஸ் பெற்றதால், முடிவுக்கு வந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டம். ஆனால், அதன் பின்னணியிலும் அரசியல் காரணம் இருந்தது… ஆம். 2022 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரபிரதேம் ஆகிய ஐந்து மாநில சட்ட மன்றங்களுக்குத் தேர்தல். எங்கே தோற்கடிக்கப்படுவோமோ என்கிற பயத்தில்தான் அப்போதைக்கு மண்டியிட்டார் டெல்லி சுல்தான்.

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

அப்போது, விவசாயிகள் முன்வைத்த ‘விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசியல் சட்ட அங்கீகாரம்’ என்கிற கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் கொடுத்தார் மோடி. ஆனால், அந்தத் தேர்தல் முடிந்த பிறகு, அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

விவசாயிகள்

‘ஐந்து மாநில தேர்தலுக்காக மோசடியாகப் பேசி மோடி நம்மை ஏமாற்றி விட்டார்’ என்று கொதித்த விவசாயிகள், மீண்டும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகினர். 2024 பிப்ரவரி 13 போராட்டத்துக்கு நாள் குறித்த பஞ்சாப் விவசாய தோழர்கள், வீராவேஷமாக டெல்லியை நோக்கிப் புறப்பட்டு ஹரியானா வந்தடைந்தனர். ஆனால், எல்லையிலேயே பழையபடியே மீண்டும் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதோடு, இந்த முறை கூடுதலாக ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளையும் புதுவிதமான குண்டுகளையும் வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். அவை விஷக்குண்டுகளோ என்கிற அளவு விவசாயிகளை உடல்ரீதியில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கை, கால்களில் அடிபட்ட விவசாயிகள் 450 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் இன்னொரு எல்லையான கணேரியில் 21 வயது சுப்கரன் சிங் என்ற விவசாயி குண்டடிப்பட்டு வீரமரணமடைந்தார். விவசாயிகள் கொதித்து எழுந்த விவசாயிகள், கொல்லப்பட்டவரின் சாம்பலை உ.பி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு என அனைத்துப் பகுதிகளுக்கும் அஞ்சலிக்காக கொண்டு சென்றனர்.

விவசாயிகள் போராட்டம்

‘கொலைகார அரசு’ என்று மேலும் கொந்தளித்த விவசாயிகள்… டெல்லி சுல்தானுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டத் தீர்மானித்தனர். அதன் விளைவு… பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களால் பிரசாரத்துக்குச் செல்லமுடியவில்லை. குறிப்பாக, பஞ்சாப்பில் எங்குமே நுழையமுடியவில்லை. விவசாயிகள் விரட்டி விரட்டி அடிக்க, விக்கித்து நின்றனர் பா.ஜ.க வேட்பாளர்கள். இது தேர்தல் முடிவுகளில் மரண அடியாகவே விழுந்தது பா.ஜ.க-வுக்கு. ஆம், அங்கே அவர்களுக்குக் கிடைத்தது பூஜ்யம் மட்டுமே.

Farmers Protest | விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டம்

அரியானாவில் பாதிக்கு மேல் பங்கமாகி ஐந்து இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்ததுமொத்தம். 80க்கு 80 என்று கொக்கரித்த உத்தரப் பிரதேசத்தில் 35க்குள் விவசாயிகள் மோடியை முடக்கிப் போட்டனர். விளைவு… அரசியல் சட்டத்தையே மாற்றிப்போட்டு, அதிபராகும் கனவோடு 400 எதிர்பார்த்த டெல்லி சுல்தான், 240க்குள் சுழற்றியடிக்கப்பட்டுள்ளார். ஆட்சி அமைப்பதற்காக கூட்டணிக் கட்சிகளிடம் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறார். இனி, சொந்தக் காலில் நிற்க முடியாது. வாடகைக்கு இரண்டு பந்தல் கால்கள் தேவை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகிய இருவரை நம்பித்தான், இவர்களின் பேச்சைக் கேட்டுதான் இனி மோடி நடமாடவே முடியும்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உத்தர பிரதேச மாநில விவசாயிகள் ஊர் திரும்பியபோது, கேரி தொகுதியின் லக்கிம்பூர் பகுதிக்கு வந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க-வின் துணைமுதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர். அவருடன் கூடவே வந்திருந்தார் அந்தத் தொகுதியின் எம்.பி-யும் மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷீஸ் மிஸ்ரா. அமைச்சரின் மகனுடைய கார், விவசாயிகள் கூட்டத்தில் ஆக்ரோஷமாகப் பாய்ந்து, நான்கு விவசாயிகளின் உயிரைப் பறித்தது. இதையடுத்து எழுந்த கலவரத்தில் போலீஸ் நடத்திய தாக்குதலில் மேலும் நான்குபேர் கொல்லப்பட்டனர்.

சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

மொத்தத்தையும் வேடிக்கை பார்த்தாரே தவிர, குறைந்தபட்சம் கண்டனம்கூட தெரிவிக்கவில்லை நாட்டை ஆண்டுகொண்டிருந்த பிரதமர் மோடி. அதுமட்டுமா, நடந்தது விபத்து, திட்டமிட்ட தாக்குதல் அல்ல. இதற்கும் அமைச்சர் மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாதித்து பா.ஜ.க. ஆளும் உ.பி- மாநில போலீஸ். கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் நடவடிக்கைகள் ஆரம்பமாயின. அமைச்சரின் மகன் முதல்குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார்.
வழக்கை நடத்திய சி.பி.ஐ, அதாவது மோடியின் கைப்பாவையாக எதிர்க்கட்சியினர் மீது மட்டும் பாய்ந்து குதறும் அதே சி.பி.ஐ. கரடியே காரித்துப்பிய கதையாக… ‘அமைச்சர் மகன் குற்றவாளி. நடந்தது விபத்தல்ல….. திட்டமிட்ட தாக்குதல்’ என்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அப்படியும்கூட அதே தொகுதியில் கொலைகார ஆஷீஸ் மிஸ்ராவுக்கு அடைக்கலம் கொடுத்த அவனுடைய அப்பா அஜய் மிஸ்ராவுக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட தற்போது வாய்ப்பளித்தார் மோடி. ஆனால்,  அன்று அங்கே சிந்திய ரத்தத்துக்கும் பலி தீர்க்கப்பட்டு விட்டது. ஆம், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ர தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

லக்கிம்பூர்

தோல்வியில் பாடம் படிப்பவன் புத்திசாலி. ஆனால், வன்மம் வைப்பவன் கொலைகாரன். கூட்டணி தயவோடு ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி புத்திசாலியாக இருக்கப் போகிறாரா… அல்லது கொலைவாளினை ஏந்தப் போகிறாரா என்பதில்தான் இருக்கிறது இனி அவருடடைய… அவர் சார்ந்த கட்சியினுடைய எதிர்காலம்.

எங்கே கோட்டை விட்டோம்… ஏன் சறுக்கினோம்… எதற்காகத் திமிர் காட்டினோம்… என்பதையெல்லாம் யோசித்து, அதிலிருந்தெல்லாம் பாடம் படிக்க வேண்டும். விவசாயிகளின், மக்களின் எதிர்பார்ப்புகளை, கோரிக்கைளைத் தீர்ப்பது பற்றி யோசிக்க முன்வரவேண்டும். பல லட்சம் கோடிகளை கார்ப்பரேட் கேடிகளுக்குத் தள்ளுபடி செய்த மோடி, நாட்டின் முதுகெலும்பு என்று பேச்சுக்காக மட்டும் பெருமையோடு சொல்லப்படும் விவசாயிகள்தான் உண்மையான முதுகெலும்பு என்பதை ஏற்று, அவர்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை (எம்எஸ்பி) விலையை உறுதி செய்யவேண்டும்.

modi

கடைசிநேரத்தில், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்து, விவசாயிகள் ஓட்டெல்லாம் நமக்குத்தான் என்று கண்ட கனவை மாற்றிக்கொண்டு, அதே சுவாமிநாதன் தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டியின் ஆராய்ச்சி முடிவுகளின்படி சி2+50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது, உற்பத்தி செலவைக் கணக்கிட்டு, அந்தத் தொகையில் 50 சதவிகி தொகையையும் சேர்த்து விளைபொருள்களுக்கு விலையாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு சட்ட அங்கீகாரமும் கொடுக்கவேண்டும்.

மோடி அலை… மோடி அலை என்று மாயாஜாலம் காட்டியவர்கள், அதற்கு கொடுத்த விலைதான், இந்த மரண அடி. இதிலிருந்து பாடம் படித்தால்… மீளலாம். இல்லையென்றால்… மீளவே முடியாத இடத்துக்குத் துரத்தியடிக்க ஒருபோதும் தயங்கமாட்டார்கள் விவசாயிகள்!

தூரன் நம்பி .

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.