பாஜக-வுக்கு சறுக்கல்… அண்ணாமலை மீது டெல்லி வைத்த நம்பிக்கை வீண் ஆனதா?! மாற்றம் இருக்குமா?!

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இதில் பா.ஜ.க களமிறங்கிய வேட்பாளர்கள் அனைவரும் வி.ஐ.பி-க்கள்தான். குறிப்பாக தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்துக்கு வந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதுதவிர அடிக்கடி தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் கருத்து கணிப்பு முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாக இருப்பது போலவே சொல்லப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் முடிவில் தமிழகத்தில் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. பா.ஜ.க வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் 9 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களும், 3 தொகுதிகளில் அதன் கூட்டணி வேட்பாளர்களும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மறுபக்கம் 26 இடங்களில் அ.தி.மு.க இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. இதன் மூலம் நாங்கள்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என பா.ஜ.க தலைவர்கள் சொல்லியதும் நடக்கவில்லை.

பாஜக

இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்பதை மக்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள். அடிக்கடி கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அண்ணாமலை என்னை பார்த்து கேட்பார். தற்போது இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக அண்ணாமலைக்கு பதில் அளிக்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இங்கு நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி – 46.97%, அ.தி.மு.க கூட்டணி – 23.05%, பா.ஜ.க கூட்டணி -18.28% வாக்குகளை பெற்றுள்ளனர். இந்தமுறை வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளனர். இருப்பினும் டெல்லி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாமலையை உடனடியாக மாற்றுவார்களா என்பதை தற்போது எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் மத்தியில் ஆட்சி அமைப்பதிலேயே அவர்களுக்கு பெரும் சிக்கல் இருக்கிறது. எனவே அதில்தான் முதலில் கவனம் செலுத்துவார்கள்.

கனிமொழி

அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய்வார்கள். அதில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து மாற்றம் செய்வது குறித்து யோசிப்பார்கள். அப்படி மாற்றம் இல்லை என்றால், 2026-ல் சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. அதில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும். அந்த நேரத்தில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், கட்சிக்குள் எழும் குரல்கள் ஆகியவற்றை வைத்து, இந்த விவகாரத்தில் டெல்லி நடவடிக்கை எடுக்கும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88