Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் – கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?!

கோவையில் அண்ணாமலை:

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.  கோவை தொகுதி தேசியளவுக்கு கவனம் ஈர்த்திருந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டனர். “கோவையில் 60% வாக்குகளுடன் வெற்றி பெறுவேன்.” என்று அண்ணாமலை கூறினார்.

கோவை

“அண்ணாமலை அலை”, “நம்ம கோவை நம்ம அண்ணா” உள்ளிட்ட முழக்கங்களுடன், சிறுபான்மை மக்கள் தவிர மீதம் உள்ள அனைவரும் அண்ணாமலைக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக சமூகவலைதளங்களில் வேகமாக பரப்பினர்.

தேர்தல் முடிவுகளில் அண்ணாமலையால் கோவையில் வெற்றி பெற முடியவில்லை. 4.50 லட்சம் வாக்குகளுடன் அவர் இரண்டாமிடம் பிடித்துள்ளார். ஒருபக்கம், “தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக வாக்கு ( எண்ணிக்கை) வாங்கியுள்ளார். அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

அண்ணாமலை

இதுவே பெரிய வெற்றி.” என கொண்டாடுகின்றனர். மறுபக்கம், “2014ம் ஆண்டு இதே கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்கு சதவிகிதத்தை விட இது குறைவு. எனவே, அண்ணாமலை பாஜக வாக்கு வங்கியை உயர்த்தவில்லை.” என்றும் கூறுகின்றனர்.

குறைந்த வாக்கு சதவிகிதம்:

இதுகுறித்து கோவை அரசியல் களத்தை நன்கு தெரிந்த அரசியல் வல்லுநர்களிடம் கூறுகையில், “இதேபோல 2014-ம் ஆண்டு மும்முனைப் போட்டி நிலவியபோது, கோவை தொகுதியில் பாஜக 33% வாக்குகளை வாங்கியிருந்தது, இப்போது அண்ணாமலை 32% வாக்குகளை தான் பெற்றுள்ளார். அப்போது 11,76,626 பேர் வாக்களித்திருந்தனர்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

இப்போது 13,73,529 பேர் வாக்களித்துள்ளனர். 2014  சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்று, பாஜக இரண்டாமிடம் பிடித்தது. 2014 தேர்தலை விட, இந்தமுறை சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தும் கூட  அண்ணாமலை 1.18 லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2014-ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதியில் பாஜக தான் அதிக வாக்குகளை வாங்கியது. இந்தமுறை 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட திமுகவை விட பாஜக அதிக வாக்குகளை பெறவில்லை.

கோவை

கோவை வடக்கு, தெற்கு தொகுதிகளில் மட்டும்தான் பாஜவை விட திமுக  பெற்ற முன்னிலை சுமார் 10,000 வாக்குகளுக்கு கீழ் இருந்தது. மற்ற தொகுதிகளில் சுமார் 20,000 – 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

2014 தேர்தலில் மோடி அலை, அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளஸ் ஆக இருந்தது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர். இந்தமுறை ஏ,பி வாக்காளர்கள், சாதிய வாக்குகளை டார்கெட் வைத்து பாஜக சுருங்கிவிட்டது. சமூகவலைதளங்களில் அவர்கள் பரப்பிய அண்ணாமலை அலை பாமர மக்களிடம் சென்று சேரவில்லை. சி வாக்காளர்களிடம் அண்ணாமலைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அண்ணாமலை

 தொழில் நகரம் என்பதாலும், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது பரவலாக அதிருப்தியும் இருந்தது. பாஜக சார்பில் மற்ற வேட்பாளர்கள் நின்றிருந்தால், தற்போது வந்ததை விட சுமார் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாக கிடைத்திருக்கும். அண்ணாமலை என்பதால் சற்று அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை வைத்துக் கொண்டு பாஜக இங்கு  பெரியளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88