ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டி20 உலகக்கோப்பைத் தொடர் பக்கம் திரும்பியிருக்கிறது.
கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற்று வருகிறது. நியூயார்க் நகரத்தில் இந்திய அணி இன்று அயர்லாந்துடன் தனது முதல் போட்டியை ஆடவிருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் பயிற்சி வசதிகள் குறித்து இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய ராகுல் டிராவிட், “இங்குள்ள மைதானம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் உலகக் கோப்பை தொடர் என்றால் நீங்கள் ஒரு பெரிய மைதானத்தில் இருப்பீர்கள், அல்லது பாரம்பரியமான ஒரு மைதானத்தில் இருப்பீர்கள். ஆனால் நாங்களோ ஒரு பூங்காவில் இருக்கிறோம். இங்குதான் பயிற்சி செய்கிறோம்.
அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு நாட்டிற்கு மட்டும் டி20 உலகக் கோப்பையில் 16 போட்டிகள் கொடுக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதில் 8 போட்டிகள் இந்த நியூயார்க் மைதானத்தில் நடக்கவிருக்கின்றன.
இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இல்லை. நாங்கள் எங்கள் விளையாட்டைத் தொடங்கிய பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் போட்டிக்குத் தயாராவது, பயிற்சி செய்வது போன்ற எங்களின் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.