சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் இரு தொகுதிகளில் வெற்றியும், 2 சதவீத வாக்குகளையும் கடந்திருக்கிறது வி.சி.க. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவிகித வாக்குகளையும் பெற்றால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெறலாம். அதன்படி தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரத்தை பெறுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தல் அரசியலில் வெள்ளி விழாவை கொண்டாடிவரும் நிலையில் வி.சி.க-வுக்கு மாநில அங்கீகாரம் கிடைக்க இருப்பது குறிப்பிடதக்கது.
1989-ல் `தலித் பாந்தர்’ என்ற அமைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி என மாற்றியமைத்த திருமாவளவன் முதன்முதலாக 1999 மக்களவை தேர்தலில் களம்கண்டார் ஜி.கே மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனிக்க தகுந்த அரசியல் பிரமுகரானார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஜக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிதம்பரத்தில் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றார். 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் முதன்முறையாக வென்றார் திருமாவளவன்.
இதற்கிடையில் 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2 எம்.எல்.ஏ-க்களை பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 2014 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளிலும் விசிக தோல்வி அடைந்தது. பிறகு 2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த வி.சி.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
2019-ல் தி.மு.க கூட்டணியில் இணைந்த போது 2 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டாலும் 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது வி.சி.க. குறைந்தது 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில் 2021-ல் 6-ல்,போட்டியிட்டு 4-ல் மட்டுமே வென்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்நிலையில் தேர்தல் அரசியலில் 25வது ஆண்டில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் 2 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 2 எம்.பி-க்களை பெற்றதோடு 2 சதவீத வாக்குகளையும் உறுதி செய்திருக்கிறது
இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “1999-ல் இருந்து இந்த இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் களத்தில் நாங்கள் பணியாற்றி வந்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது” என நெகிழ்ந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88