அதிருப்தி பழனிமாணிக்கத்திடம் அறிவுறுத்திய தலைமை… தஞ்சையில் முரசொலி முந்தியது எப்படி?

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் ச.முரசொலி, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், பா.ஜ.க-வில் கருப்பு எம்.முருகானந்தம், நாம் தமிழர் கட்சியில் ஹீமாயூன் கபீர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்குள் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி

முரசொலி தொகுதிக்கு புதியவர் என்றாலும் கட்சியினரிடையே நன்கு அறிமுகனாவர். திமுகவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் நட்பு பாராட்டி வந்தவர். சர்ச்சைகளில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டுனு இருந்தவர். ஆடம்பரம் இல்லாமல் வலம் வந்தவர். அதுவே முரசொலிக்கு தொகுதிக்குள் ப்ளஸாக அமைந்தது.

பிரச்சாரத்திற்க்கு வந்த ஸ்டாலின், `முரசொலி, கலைஞரின் மூத்தப்பிள்ளை’ என்றார். உதயநிதி ஸ்டாலின், `முரசொலியை ஐந்து லட்சம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார். இவை கட்சியினர் மத்தியில் முரசொலியின் பெயரை உயர்த்தியது. எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு பத்தாவது முறை போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்கள் முரசொலிக்கு சீட் கிடைத்தை முதலில் விரும்பவில்லை.

பின்னர் ஸ்டாலின் முரசொலியை வெற்றி பெற வைத்து அழைத்து வர வேண்டும் என பழனிமாணிக்கத்திடம் அறிவுறுத்த, அதிருப்தியை மறந்து முரசொலிக்காக வேலை செய்தார். தனக்கு தான் சீட் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் முரசொலிக்காக முழு மனதுடன் வேலை செய்யவில்லை. இது போல் சில சில பூசல்கள் தொடர்ந்தன. ’செழிப்பான’ விஷயத்தில் படு வீக்காக இருந்தார் முரசொலி. இது கட்சியினரை கொஞ்சம் சோர்வடைய செய்தது. இவையெல்லாம் முரசொலிக்கு தொடக்கத்தில் மைனஸாக இருந்தது.

எனினும் தொகுதியில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடாதது தொடக்கத்திலேயே முரசொலியின் வெற்றியை உறுதி செய்தது. தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் தொகுதிக்கு பரிச்சயமில்லாதவர். பிரசாரத்தில் வாய்க்கு வந்தபடி பேசினார் இதை அதிமுகவினரே கமெண்ட் அடித்தனர். அதிமுகவினருக்கும், சிவநேசனுக்கு சுத்தமாக ஒர்க்அவுட் ஆகவில்லை. தொகுதிக்குள் தேமுதிக-வுக்குனு பெரிய வாக்கு வங்கி இல்லாததும் குறை. அதிமுக வாக்கு வங்கியை நம்பியே களம் கண்டார். விஜகாந்த் மீதான அனுதாப அலை தனக்கு ப்ளஸாக மாறும் என நம்பியிருந்தார்.

இன்னொரு பக்கம், மோடிக்கு அறிமுகமானவர் என்ற அடைமொழியுடன் வலம் வந்த கருப்பு முருகானந்தம் ’செழிப்பாக’ விட்டமின் ’ப’வையும் ஜோராக இறக்கி தொகுதிக்குள் வலம் வந்தார். அடித்தட்டு மக்களின் வாக்குகள், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் வசிக்கும் தன் சமுதாய வாக்கான அகமுடையர் வாக்குகளை கொத்தாக அறுவடை செய்வதற்கு அந்த தொகுதிகளில் முழு கவனம் செலுத்தி பம்பரமாக சுழன்றார். திமுகவில் நிலவிய கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. திமுகவினரே தேர்தல் அலுவலகம் திறக்காமல் சால்சாப்பு காட்ட, பிரமாண்ட தேர்தல் அலுவலம் திறந்து தேர்தல் பணிகளை கவனித்தார். தொகுதிக்குள் இருக்கும் அமமுக வாக்கு வங்கி தனக்கான ப்ளஸ். அதுவே தன்னை கரைசேர்க்கும் என கணக்கு போட்டார்.

தஞ்சாவூரில் பட்டாசு வெடித்த திமுகவினர்

எனினும் பா.ஜ.க மீது நிலவும் வெறுப்பலை இவருக்கான மைனஸ். தஞ்சாவூர் தொகுதி திமுக-வின் கோட்டை. யார் நின்றாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்ற நிலை இங்கு ஆரம்பம் முதல் இருந்தது. சட்டமன்றத்தில் ஆறு தொகுதிகளில் ஒரத்தநாட்டை தவிர மற்ற ஐந்து தொகுதிகள் திமுக கையில்தான் உள்ளது. இதனால் இடையூறு ஏதுமின்றி எளிதாக முரசொலி முந்துவார், உதய சூரியன் உதிக்கும் என்ற எண்ணத்தால் கட்சியினரும் வெற்றிக்காக பெரிதாக மெனக்கெடவில்லை. அதுபோல், தொகுதிக்கு புதியவரான முரசொலி 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி கனியை பறித்த முரசொலியிடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்க, மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் , பழனி மாணிக்கத்துடன் வந்து பேட்டி தருவதாக சொல்லி பவ்யம் காட்டினார். எதிர்பார்த்தபடியே தஞ்சாவூரில் முரசொலி வென்றுள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர் தொகுதியில் ஒன்பதாவது முறை திமுக வெற்றி பெற்றுள்ளது என்ற சிறப்பும் கட்சிக்கு கிடைத்துள்ளது.

பெற்ற வாக்குகள்

முரசொலி- திமுக – 5,02,245

சிவநேசன்- தேமுதிக (அதிமுக கூட்டணி) – 1,82,662

கருப்பு முருகானந்தம்- பா.ஜ.க – 1,70,613

ஹூமாயூன் கபீர்- நாம் தமிழர் கட்சி – 1,20,293

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88