மயிலாடுதுறை: பிரிந்த வாக்குகள்… `கை’கொடுத்த கூட்டணி – லேட்டாக வந்தும் சுதா வாகை சூடியது எப்படி?

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சுதா, அ.தி.மு.க-வில் பாபு, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.கவை சேர்ந்த ம.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்ற சுதா

இத்தொகுதிக்குள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் (தனி), மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி (தனி) உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மாயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதி என்பதால் கூட்டணியில் திமுக-விடம் இத்தொகுதியை கேட்டு பெற்றது காங்கிரஸ்.

எனினும் உடனடியாக வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது. ஒரு வழியாக சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழகத்திலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இவராகத்தான் இருப்பார். இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொடக்கத்தில் சோர்வடைந்து காணப்பட்டனர்.

அதன் பின்னர் தொகுதிக்குள் அறிமுகம் இல்லாத சுதா வேட்பாளர் ஆனதற்கு காங்கிரஸுக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியது. வெளியூர் வேட்பாளர் என சொந்தக் கட்சியினர் செய்த விமர்சனங்கள் சுதாவை திக்கு முக்காட செய்தன. எல்லாவற்றையும் தாண்டி கூட்டணி பலம் தனக்கு ’கை’ கொடுத்து கரை சேர்க்கும் என்று நம்பினார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

தொகுதியில் வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். சுதா, பாபு, ம.க.ஸ்டாலின் மூன்று பேருமே அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் சமூக வாக்குகளை அறுவடை செய்ய ஒருவரொக்கொருவர் மெனக்கெட்டனர். இதில் ம.க.ஸ்டாலின் தன் சொந்த செல்வாக்கால் சாதி பாகுபாடினின்றி வாக்குகளை சேகரித்தார்.

சுதா

வன்னியர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலினம், சிறுபான்மையினர் வசிக்கின்றனர். இவர்களது ஆதரவு திமுக கூட்டணிக்கே பெரும்பாலும் கிடைத்துள்ளன. இதனால் திமுக-வும், அதிமுக-வும் சம பலம் கொண்டிருந்தாலும் கூட்டணியில் திமுகவே வலுவாக இருந்தது. தேமுதிக-விற்கு என குறிப்பிட்ட வாக்கு வங்கி இல்லாததால் தொகுதிக்குள் அதிமுக பலவீனமாக காணப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜின் மகன் என்கிற அடையாளம் மட்டுமே பாபுவுக்கு இருந்தது. அதுவே அவருக்கு மைனஸாக மாறியது. அவர் மீது அதிருப்தி கொண்ட கட்சியினர் பாபுவுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தனர். அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ம.க.ஸ்டாலின் அவர்களது வாக்குகளை தன் பக்கம் திருப்பினார்.

களத்தில் பம்பரமாக சுழன்ற காளியம்மாளும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்ததால் சொந்த செல்வாக்கு இருந்தும் ம.க.ஸ்டாலின் பின்னடைவையே சந்தித்துள்ளார். ஆனாலும் மக்களிடம் தொடர்பில் இருந்து அவர்களது பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் அவரும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளார். இந்த சூழலில் உள்கட்சி பூசலை சமாளித்து, தனக்கு எதிரான விமர்சனங்களை தவிடு பொடியாக்கி கூட்டணி பலத்தின் உதவியுடன் சுதா வாகை சூடியிருக்கிறார். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சுதாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பெற்ற வாக்குகள்:

காங்கிரஸ் சுதா– 5,18,459

அ.தி.மு.க பாபு – 2,47,276

பா.ம.க – ம.க.ஸ்டாலின் – 1,66,271,

நாம் தமிழர் கட்சி – காளியம்மாள்– 1,27,642

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88