சாகித்ய அகடாமி விருதுபெற்ற இலக்கியவாதியான மதுரை சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசனுக்கு திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

இவரை எதிர்த்து அ.தி.மு.க-வில் டாக்டர் சரவணன், பா.ஜ.க-வில் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், நாம் தமிழரில் சத்யா தேவி ஆகியோருடன் சுயேட்சைகளும் போட்டியிட்டார்கள்.

இனிப்பூட்டிய பி.டி.ஆர்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் செலவு செய்து அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யனை 1,40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சு.வெங்கடேசனுக்கு இந்தமுறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணனும் பா.ஜ.க வில் போட்டியிட்ட இராம ஸ்ரீநிவாசனும் பல வகையிலும் டஃப் கொடுத்தார்கள்.
மதுரைக்கு எந்த ஒரு தொழிற்சாலையும், திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்று அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் தொடர்ந்து பிரசாரம் செய்த போதிலும், கடந்த 5 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது, கோவிட் காலத்தில் எம்.பி நிதி மூலம் அரசு மருத்துவமனையில் அவசரகால நவீன மருத்துவக் கருவிகள் வாங்கி கொடுத்தது, கோவிட் காலத்தில் மக்களுக்கு உணவிட்டது, ஆண்டுதோறும் 100 கோடிக்கு மேல் கல்விக்கடனை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைத்து கொடுத்தது, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கு முயற்சி எடுத்தது, மதுரை தொகுதிக்கு மட்டுமின்றி நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால், உத்தரவுகளால் பாதிக்கப்படும், மாணவர்கள், பெண்கள், முதியோர், விவசாயிகள், அரசு ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலாளர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அதற்கு தீர்வும் கண்டுள்ளார். இது சு.வெ-க்கு நல்ல பெயரை தொகுதிக்குள் பெற்றுக்கொடுத்தது,

எப்போதும்  ஊழியர்களுடன் இயங்கும் எம்.பி அலுவலகத்தில், சாமனிய மக்களும் எம்.பி-யை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது எல்லாம் அவருக்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. மேலும் மதுரைத் தொகுதிக்கு தான் செய்த பணிகளால் கிடைத்த வெற்றிகளை புத்தகமாக வெளியிட்டார்.

வெற்றி சான்றிதழை பெற்றபோது

அதனால் எதிர்க்கட்சியினர் என்னதான் அவருக்கு எதிராக பரப்புரை செய்தபோதும் தி.மு.க தலைமையிலான பலமான கூட்டணியும், கடந்த தேர்தலில் 85,000 வாக்குகள் பெற்ற ம.நீ.ம கூட்டணியில் சேர்ந்ததும், சிறுபான்மை மதத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவும்  அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவும் சு.வெ-க்கு சாதகமாக அமைந்தன.

அ.தி.மு.க-வில் முக்கிய நிர்வாகிகள் யாரும் போட்டியிட முன்வராத நிலையில், டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டதை தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட  அ.தி.மு.க புள்ளிகள் டாக்டர் சரவணனுக்கு வேலை செய்வதில் பெரிய ஆர்வம் காட்டாமலும், செலவு செய்யாமலும் இருந்தார்கள். அதனால்தான் தற்போது பாஜகவுக்கு அடுத்து மூன்றாம் இடம் வந்துள்ளார். அடிக்கடி  கட்சி மாறுபவர் என்ற அடையாளமும் அதிமுக தொண்டர்களை அவருக்கு எதிராக வாக்களிக்க வைத்துள்ளது. சு.வெங்கடேசனை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்த சரவணன், சமூக ரீதியாக வாக்குகளை பெற திட்டமிட்டது ஒர்க் அவுட் ஆகவில்லை.

விருதுநகரை எதிர்பார்த்து ஒருவருடம் அங்கு தேர்தல் வேலைகளை செய்த பா.ஜ.க வேட்பாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனுக்கு, `வேண்டாம் வெறுப்பாக’ மதுரை திணிக்கப்பட்டதால், பெரும்பாலான நிர்வாகிகளின் சப்போர்ட் இல்லாததாலும், ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்களின் பங்களிப்பு இல்லாத நிலையிலும் குறிப்பிட்ட சில சமூகத்தினரின் வாக்குகளையும், டாக்டர் சரவணனை ஏற்றுக்கொள்ளாத அதிமுகவினரின் வாக்குகளாலும், புது வாக்காளர்களின் வாக்குகளால் இரண்டாம் இடம் வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் உதவியுடன் டாக்டர் சரவணன் இரண்டாம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படட் நிலையில், மதுரை மக்கள் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனுக்கு அந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.

டாக்டர் சரவணன்

நாம் தமிழர் கட்சியில் சத்யாதேவியும் அவர்களின் தனித்த பிரசாரத்தின் மூலம் கணிசமான வாக்குகளை பெற்று 4-வது இடம் வந்துள்ள நிலையில் 25 சுற்றின் முடிவில் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழும் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிகளின் தீவிர களப்பணியாலும், இயல்பாக கிடைத்து விடும் சிறுபான்மை சமூகங்கள், தொழிலாளர்களின் வாக்குகளாலும் வெற்றி எனும் பரிசை 2,09,409 வாக்கு வித்தியாசத்தில் பெற்றுள்ளார் வேள்பாரி எழுத்தாளர்.

சு.வெங்கடேசன்

தபால் வாக்குகள் சேர்த்து கட்சிகள் பெற்ற வாக்குகள் நிலவரம்

சிபிஎம் : 4,30,323
பாஜக   : 2,20,914
அதிமுக : 2,04,804
நா.த.க    :92, 879
சிபிஎம் 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.