Modi: “என்.டி.ஏ கூட்டணியை மக்கள் மூன்றாவது முறையாக நம்பியிருக்கிறார்கள்!” – நன்றி தெரிவித்த மோடி

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும், தனிப்பெரும்பான்மையாக பா.ஜ.க 300 இடங்களைச் சுலபமாகத் தாண்டும், இந்தியா கூட்டணி 150 இடங்களைக்கூட தாண்டாது என்ற பா.ஜ.க-வின் பிரசாரமும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பதிவு செய்தன.

மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்

ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது. குறிப்பாக பா.ஜ.க-வின் கோட்டை எனக் கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைபற்றியது.

இந்த தேர்தலில், அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அழுத்தமாக பதிவு செய்தனர். ஆனால், அயோத்தி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பைசாபாத்தில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர், பா.ஜ.க வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில்,“மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்!

பிரதமர் மோடி

இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் அன்பிற்கு தலைவணங்குகிறேன். கடந்த பத்தாண்டுகளைப் போலவே, மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறேன். எங்கள் அனைத்து தொண்டர்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் கடின உழைப்புக்கு வார்த்தைகள் ஒருபோதும் போதுமாகாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர், “வடக்கு முதல் தெற்குவரை பாஜக மீது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். எனது தாயார் மறைவுக்குப் பிறகு நான் சந்தித்த முதல் தேர்தல் இது.

2019-ம் ஆண்டு பாஜக மீது மக்கள் வைத்து இருந்த நம்பிக்கையை 2024-ல் காப்பாற்றியுள்ளோம். இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. பாஜகவை வெற்றி பெற வைத்த ஒடிசா மக்களுக்கு நன்றி. டெல்லி, இமாச்சல் மற்றும் குஜராத் மக்கள் எங்களை முழுமையாக ஆதரிக்கின்றனர்” என்றார்.