NOTA: 2.2 லட்சம் வாக்குகள்… பாஜக வேட்பாளருக்கு டஃப் கொடுத்த நோட்டா! – இந்தூரில் நடந்தது என்ன?

29 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால், இந்த 29 தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்களைக் களமிறக்கியது. 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியை இந்தியா கூட்டணிக் கட்சியான அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்கியது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி, தன் வேட்புமனுவை வாபஸ் பெற்று, பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பாஜக, காங்கிரஸ்

உடனே காங்கிரஸ் தலைமை அந்த தொகுதிக்கு மூன்று பேரை பரிந்துரைத்தது. ஆனால், அந்த மூன்று பேரின் வேட்புமனுவும் இறுதி நேரத்தில் நிராகரிக்கப்பட்டன. இதனால், இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் சூழல் உருவானது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.க-வை கண்டிக்கும் விதமாக நோட்டாவுக்கு ஓட்டளிக்கும் படி பிரசாரம் செய்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் சங்கர் லவானி 12,26,751 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

அதே நேரம் பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்து, நோட்டாவுக்கு மட்டும் 2,18,674 ஓட்டுகள் பதிவாகியிருக்கின்றன. நோட்டாவுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க வேட்பாளர் சங்கர் லால்வானி 10,80,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்தூர் தொகுதியில்தான் முதன்முறையாக லட்சத்தைத் தாண்டி நோட்டாவுக்கு ஓட்டுகள் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.