NDA-வை கரைசேர்த்த நிதிஷ், சந்திரபாபு நாயுடு – கூட்டணி ஆட்சியில் என்ன முக்கியத்துவம் கிடைக்கும்?!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் தொடங்கியதும், கருத்துக்கணிப்பு தந்த நம்பிக்கையுடன் எப்படியும் 543 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையோடு கிட்டத்தட்ட 370 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி கிடைத்துவிடும் என்று பா.ஜ.க நம்பிக்கொண்டிருந்தது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க, தனிப்பெரும்பான்மையையும் பெறவில்லை, 370 என்ற இலக்கையும் எட்டவில்லை. மொத்தமாகவே 240 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க தனியாக வென்றது. இருப்பினும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கூட்டணி, 293 தொகுதிகளுடன் ஆட்சியமைக்கப் போதுமான அளவில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.

மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற இந்த எண்ணிக்கையானது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனியாகப் பெற்ற 303 என்ற மார்ஜினை விடவும் 10 இடங்கள் குறைவு. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த வெற்றியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடிய இருக்கும் முக்கிய காரணிகள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திராவில் முதல்வராகப்போகும் சந்திரபாபு நாயுடு.

இந்தக் கூட்டணியில் இவர்கள் இருவரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் JD(U), தெலுங்கு தேசம் கட்சி (TDP) மட்டும்தான் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க-வுக்கு இணையாக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற கூட்டணி கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன.

காங்கிரஸ்

அதேசமயம், காங்கிரஸ் தலைமையில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி மொத்தமாக 231 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு 42 இடங்கள் தேவை என்ற சூழல் நேற்று உருவாக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இருவரும் இந்தியா கூட்டணியில் சேர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைப்பார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் மிக முக்கிய பங்காற்றியவர், நிதிஷ் குமார். இவர், 1998 – 1999 காலகட்டங்களில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தில், மத்திய ரயில்வே அமைச்சராகவும், பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, 2000 – 2004 வரையுலான வாஜ்பாய் அரசாங்கத்திலும் மீண்டும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக முக்கிய நபராகக் கருதப்பட்ட இவர், 2009-ல் நடைபெற்ற தேர்தலில், பீகாரில் பா.ஜ.க, 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

நிதிஷ் குமார்

இருப்பினும், அதற்கடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அந்தக் கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டார். அதற்கு காரணமும் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த மோடி தலைமையிலான ஆட்சியே என்று அவர் கூறினார். ஆனால், அந்தத் தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே இவரின் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, 2015-ல் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து வெற்றி பெற்றார்.

ஆனால், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றார். 2020-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியோடு வெற்றிபெற்றார். பிறகு வழக்கம்போல நிதிஷ் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியோடு இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைத்தார். எதிர்கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி உருவாக அச்சரமும் போட்டார்.

நிதிஷ் குமார்

`பிரதமர் ஆகவெல்லாம் ஆசையில்லை பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டும்’ என்று கூறிய நிதிஷ் குமார், இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்ற பேச்சில் கார்கே பெயர் அடிபட, திடீரென மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். நிதிஷ் குமாரின் இந்த செயல் நிச்சயம் பீகாரில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேச்சுகள் எழ, அதையெல்லாம் பொய்யாக்கும் வண்ணம் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எத்தனை முறை கூட்டணி மாறினாலும், பீகாரில் நிலையாக இருக்கும் இவரின் செல்வாக்கே தற்போது இவருக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவில் 2019-ல் ஒன்றாக நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸிடம் படுதோல்வியடைந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. சந்திரபாபு நாயுடு ஜன சேனா மற்றும் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து களம் கண்டிருந்தாலும், 134 சட்டமன்றத் தொகுதிகளையும், 16 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநிலத்தில் முதலிடத்திலும், மத்தியில் பா.ஜ.கவுக்கு அடுத்த இடத்திலும் இருக்கிறது.

சந்திரபாபு நாயுடு

இதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பவன் கல்யான், ஜெகன்மோகன் ரெட்டியை மாநிலத்தில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளி 21 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இவ்வாறிருக்க, தற்போது சந்திரபாபு நாயுடு மீது கவனம் திரும்பக் காரணம்,1999-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர், 2018-ல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியடத் தொடங்கிய சந்திரபாபு நாயுடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து,16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி கண்டிருக்கிறார்.

இப்போதைக்கு இவர்கள் இருவரும் இருந்தால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்ற சூழலில், இருவருமே இந்தக் கூட்டணியில்தான் நீடிப்போம் என உறுதியாகக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், நிதிஷ் குமாருக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் மத்தியில் எந்தளவுக்கு முக்கியத்துவம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது…

அமித் ஷா, மோடி

காரணம் கடந்த முறை பா.ஜ.க தனியாக 303 இடங்கள் வென்றதால் பிரதமரின் கேபினட்டில் பா.ஜ.க அமைச்சர்களே அங்கம் வகித்தனர். ஆனால், இந்த முறை அப்படியில்லை. எப்படியும் முக்கியமான அமைச்சர் பதவிகள் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்களுக்கு செல்லும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அது உள்துறையா, நிதித்துறையா அல்லது வேறு முக்கிய துறைகளா என்பது போக போக தெரியும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88