விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க- கூட்டணியில் தே.மு‌.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. தரப்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியில் கௌசிக் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தொகுதிக்குள், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி மற்றும், மதுரை வருவாய் மாவட்டத்திலுள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை எகிறவிட்ட விருதுநகர் தொகுதியில், உறுதிபடுத்தப்பட்ட வேட்பாளர்‌ பட்டியல் தொகுதியின் வேல்யூவை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

பிரசாரம்

ஏற்கெனவே இரண்டுமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெம்பில், மூன்றாவது முறையும் வெற்றிவாகை சூடும் முனைப்பில் போட்டியிட்டார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர். தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், அதிகாரப்பூர்வ அரசியல் செய்வதற்கான அறிமுக களமாக விருதுநகர் தொகுதி ஆனது. அதுபோல் நடிகை ராதிகா சரத்குமாருமே, பா.ஜ.க. வேட்பாளராக தேர்தலை சந்தித்தது இதுவே முதல்முறை.

மத்திய அரசின் முன்னேற விழையும் மாவட்டங்களில் வரிசையில் விருதுநகரும் உண்டு. எனவே, மத்தியில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கையில் தொகுதிக்கான திட்டங்களை எளிதாக பெற்றுத்தரலாம் என்பதே பா.ஜ.க.வின் அல்டிமேட் விஷன். தொகுதிக்குள் மாவட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்‌.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய இருபெரும் துருவங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, சமூக வாக்குகளை நம்பி களத்தில் குதித்தது காங்கிரஸ். கணிசமான சமுதாய வாக்கு, அதிருப்தி வாக்குகள், அடுத்ததாக அனுதாப ஓட்டு, கூடுதலாக, கட்சிக்கான வாக்கும் வந்தாலேபோதும் வெற்றிபெற்றுவிடலாம் என மனக்கோட்டை கட்டியது அ.தி.மு.க‌.

பிரசாரம்

வேட்புமனு தாக்கலின்போதே, மாட்டுவண்டியில் ஆதரவாளர்களை வரவழைத்து எதிர்கட்சியினருக்கு அதிரடி காட்டினார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. கொய்யபாழம் விற்பது, பரோட்டா தயார்செய்து சாப்பிடுவது, வெள்ளரி விற்பது என களத்தில் விஜயபிரபாகரனுடன் கதகளியும் ஆடினார். ஆனால் கட்சியினரை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதில், ஆரம்பத்தில் இருந்த சுணக்கத்திற்கு இறுதிவரை எந்த தீர்வும் இல்லை. நாடார் சமுகத்தின் முக்கிய நபரான, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஓரங்கட்டிவிட்டு தனி ஆளாக ‘ஒன்மேன் ஷோ’ காட்டினார் கே.டி‌.ராஜேந்திரபாலாஜி. சீனியர்கள் அல்லாமல் தனது அபிமானிகளுக்கே கட்சி பொறுப்பு என வழங்கியிருக்கிறார் என அடுத்தடுத்து வந்த குற்றச்சாட்டுகள் அ.தி.மு.க.வின் வெற்றிப்பாதையில் விழுந்த தடைக்கற்கள்.

வலுவில்லாத தே.மு.தி.க. கட்டமைப்பு, அ.தி.மு.க.வுக்கு அமைப்பு பலமிருந்தும் முடுக்கிவிடாத அலட்சியம் அ.தி.மு.க.வின் சறுக்கலுக்கான காரணமாக அமைந்துவிட்டது. நகரங்கள் தவிர்த்து கிராமங்களில் தேமுதிகவுக்கு கோனார், ரெட்டியார், நாயக்கர் சமுகத்தினரிடையே இருந்த வரவேற்பும், தபால் ஓட்டுகளில் பெருவாரியான ஆதரவும், அனுதாப அலையில் பதிவான வாக்குகளுமே விஜயபிரபாகரனை இறுதிவரை டஃப் பைட் கொடுக்க கைதூக்கிவிட்டிருக்கின்றன. ஆனால் அது, வெற்றி‌ கரையினை எட்டும் அளவுக்கு இல்லை என்பதுதான் வருத்தம்.

மாணிக்கம் தாக்கூர்

பா.ஜ.க. வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார், கோனார் மற்றும் தெலுங்கு பேசும் நாயக்கர் சமுக மக்களின் வாக்குகளைத்தான் பெரிதும் நம்பியிருந்தார். பா.ஜ.க. நிர்வாகிகள் மூலமாக இந்த வாக்குகள் கிடைத்துவிட்டால் கணவர் சரத்குமார் மூலமாக நாடார் சமுக மக்களின்‌ வாக்குகளையும் வளைத்துவிடலாம், வெற்றியை நெருங்கி விடலாம் என நினைத்திருந்தது பா.ஜ.க. ஆனால், விஜய பிரபாகரனும், இதே சமுக வாக்குகளை பிரிக்கக்கூடியவர் தான். அதுபோல் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்கினை பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

கூட்டணிக் கட்சியின் பலம், நாடார் சமூகத்தின் கணிசமான வாக்குகள், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவையே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை முன்னிலைக்கு நகர்த்தியது. எம்.பி. மீதான அதிருப்தி காரணமாக கிராமங்களில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்த ஆதரவு, அ.தி.மு.க. பக்கமாக சாய்ந்திருக்கின்றன. இருப்பினும், மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் மாணிக்கம் தாகூர் உள்ளூர்க்காரர் என்ற அறிமுகமும், மெஜாரிட்டி சமுகத்தவர் (முக்குலத்தோர்) என்ற பற்றும் மாணிக்கம் தாகூரின் வெற்றிக்கு தேவையான வாக்குகளை தேடி தந்திருக்கிறது.

வேட்பாளருக்கு, தமிழ் வாசிக்க தெரியாது என்பதால் ஆரம்பமே நாம் தமிழர் கட்சிக்கு முழம் சறுக்கியது. ஆனால் இளம்தலைமுறை மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்களின் ஓட்டுகளை கணிசமாக பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே கௌசிக் பாண்டியன் வாக்குகளை பெற்றிருக்கிறார்.

இந்த தேர்தலில் தே.மு.திக 2-வது இடத்தையும், தொடக்கத்தில் இருந்தே சறுக்கலைச் சந்தித்த பா.ஜ.க 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

பெற்ற மொத்த வாக்குகள் (இறுதி முடிவு):

மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) -3,85,256

விஜய பிரபாகரன் (தே.மு.தி.க) – 3,80,877

ராதிகா சரத்குமார் (பா.ஜ.க.) – 1,66,271

கௌசிக் பாண்டியன் (நாம் தமிழர் கட்சி) – 77,031

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.