“யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள், ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டும் கொடுக்காதீர்கள், மீறி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியினர் வேலை செய்ய மாட்டார்கள்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி சத்தியமூர்த்தி பவனிலும் டெல்லியிலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

கார்த்தி சிதம்பரம்

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டெல்லித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இவரை எதிர்த்து அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் ஆதரவாளர் சேவியர் தாஸ், பா.ஜ.க கூட்டணியில் தேவநாதன் யாதவ், நாம் தமிழரில் எழிலரசியும் போட்டியிட்டனர்

சொந்தக் கட்சியினர் தன்னை எதிர்த்தாலும் கார்த்தி சிதம்பரம் உற்சாகமாகவே வலம் வந்தார். காரணம், திமுகவினரின் ஆதரவும், எதிராக நிறுத்தப்பட்ட இருவருமே பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்துள்ள கட்சியினருக்கே அதிகம் தெரியவில்லை என்பதுதான்.

கார்த்தி சிதம்பரம்

சேவியர்தாஸுக்கு மணல் வியாபாரம் செய்யும் அவர் உறவினர்கள் ஆங்காங்கு வைட்டமின்களை இறக்க, சாதி ரீதியான வாக்குகள் அனைத்தையும் வளைத்துவிடும் திட்டத்தில் சென்னையிலிருந்து சிவகங்கையில் முகாமிட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் பாஜக சார்பில் வந்தார். எனினும் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வைட்டமின்களை பெற்றுக்கொண்டு அல்வா கொடுத்தனர்.

தொகுதி வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை, தேர்தலுக்கு மட்டும் மக்களைத் தேடி வருகிறார் என்ற குற்றச்சாட்டை நேரடியாக மக்களும், ஊடகத்தினரும் வைத்தாலும், ‘ஒவ்வொரு ஊரிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற  உறுப்பினர்கள் செய்கின்ற பணியை செய்வது எம்.பி-யின் வேலை அல்ல’ என்று வெளிப்படையாகவே பதில் அளித்தார்.

`சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள அரசியல்வாதிகள் பலரும், அவரவர் சார்ந்த சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூக ரீதியாக அதகளம், செய்து வந்த நிலையில், மிகவும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவராகவும், வேறு எந்த அட்ராசிட்டியும் செய்யாமல் அரசியல் செய்கிறவர் என்ற பெயர் அவர் தந்தையைப்போலவே இவருக்கும் இருந்ததால் தொடர்ந்து வெற்றி பெற அதுவும் காரணம்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால்தான் சாதிப்பின்புலமுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

வெற்றிச் சான்றிதழுடன்

அது மட்டுமின்றி தொகுதியிலுள்ள சிறுபான்மை மதத்தினர் வாக்குகள் முழுமையாக காங்கிரஸுக்கு விழுந்ததும், முக்கிய சமூகங்களான முக்குலத்தோர், யாதவர், உடையார், முத்தரையர், வல்லம்பர், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற அமைச்சர்கள் பெரியகருப்பன், ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ தமிழரசி ஆகியோர் கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு தீவிரமாக பணியாற்றியதும் கார்த்தி வெற்றிக்கு ஒரு காரணம்.

அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மட்டுமே சேவியர்தாஸுக்காக பணி செய்தார். வேறு யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவை பா.ஜ.க அறிவித்ததில் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுக்கு ஏக வருத்தம். ஆனாலும் வேறு வழியில்லாமல் தேவநாதன் யாதவிடமுள்ள வைட்டமினுக்காக வேலை செய்தாகள்.  ஆனால், ஆழமாக வேலை செய்யவில்லை.

சீமானின் சொந்த மாவட்டம் என்பதால் அக்கட்சியில் போட்டியிட்ட எழிலரசிக்கு பெரிய பின்புலமில்லாவிட்டாலும் தம்பிகள் தீவிரமாக பணியாற்றியதால் 1,63,412 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பெற்றிருக்கிறார்

இவையெல்லாவற்றையும் கடந்து கார்த்தி சிதம்பரம் 4,27,677 வக்குகள் பெற்று 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் :

காங்கிரஸ் – 4,27,677
அதிமுக       – 2,22,013
பாஜக           -1,95,788
நாம் தமிழர் – 1,63,412

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.