தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்கள் பெற்றதன் மூலம், கூட்டணி ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கட்சித் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைத் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி பிரதமராகவிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் இலக்கு வைத்து வேலைசெய்தோம். சில மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்கவில்லை. இதேநேரத்தில் தமிழ்நாட்டில் எங்கள் இலக்கை அடைய முடியவில்லை என்பது வருத்தம்தான். ஆனால் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மக்களின் தீர்ப்பைத் தமிழ்நாட்டில் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.
சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். எப்போதும் இல்லாத அளவுக்கு 23 இடங்களில் தாமரைச் சின்னம் பதிந்திருக்கிறது. தமிழ்நாட்டில், 20 சதவிகித வாக்குகள் இலக்கு வைத்திருந்தோம். 11 சதவிகிதம் கிடைத்திருக்கிறது. அடுத்து இந்தக் கட்சி வேண்டும் என்பதை மக்கள் இந்தத் தீர்ப்பின் மூலம் கூறியிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் நான் வாங்கியிருக்கும் நான்கரை லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் வாங்கியிருக்கும் வாக்குகள். இங்கு அதிமுக டெபாசிட்டுக்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. கோவையில் 10-ல் 9 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க. இது அ.தி.மு.க-வின் கோட்டை என்று உங்களுக்கே தெரியும். இங்கு இவ்வளவு வாக்குகள் பெற்றது வெற்றி.
தமிழ்நாட்டில் மூன்றுமுனைப் போட்டி நடத்தியிருக்கிறோம். பெரிய கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் குறைத்திருக்கிறோம். இவையெல்லாம் எங்களுக்கு கிடைத்த வெற்றி. நான் இன்றைக்கும் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான். 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம். அதுதான் எங்களின் இலக்கு. தமிழ்நாட்டில் மூன்றுமுனைப் போட்டி இரண்டுமுனைப் போட்டியாக மாறவேண்டும். அப்போதுதான், தென்மாவட்டங்களில் பா.ஜ.க வெற்றி சாத்தியமாகும். இன்று அது நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களே 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ஐந்துமுறை ஆட்சியிலிருந்த கட்சியினர் டெபாசிட் இழந்திருக்கின்றனர். அதை நடத்திக்காட்டியது பா.ஜ.க. 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் முதல்வராக இருந்த ஒடிசாவில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இது ஒருநாள் நடக்கும். 2026-ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும். ஒரு கட்சி மட்டும் ஆட்சியமைக்க முடியும் என்பதைத் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.
2019-ல் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் 33.52 சதவிகிதம். அதே திமுக 2024-ல் 6 சதவிகிதம் குறைந்து 26.93 சதவிகிதத்துக்கு வந்திருக்கிறது. அந்த 6 சதவிகிதம் எங்கள் பக்கம் வந்திருக்கிறது. தெற்கில் அரசியல் மாற்றம் வந்திருக்கிறது. பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. அதேபோல், இந்திய அளவில் நிறைய இடங்களில் வருவோம் என்று எதிர்பார்த்தோம். நான் சொல்வதெல்லாம் நடந்துவிட்டால் நான் கடவுளாகிவிடுவேன். நான் கடவுள் அல்ல சாதாரண மனிதன்.” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து கனிமொழியின் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, `என்னுடைய அப்பா அரசியல்வாதியல்ல. அதனால் நான் ஜெயிப்பதற்கு நேரமாகும். என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டும் என்று கனிமொழி கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் பா.ஜ.க-வுக்கு வருகிறாரென்றால் அதை நான் பரிசீலனை செய்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb