குறைந்த வாக்கு சதவிகிதம்!
சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் மிகவும் சிறிய தொகுதி மத்திய சென்னை தான். இருந்தபோதிலும், தமிழக தலைமைச் செயலகம் தொடங்கி, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நகரின் முக்கிய அடையாளங்களும் இந்த தொகுதியில் தான் இடம்பெற்றிருக்கின்றன. முக்கிய இடங்களைத் தாண்டி, இந்த தொகுதியில் மேல்தட்டு மக்கள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் நிறைந்து வாழும் தொகுதியாக மத்திய சென்னை விளங்குகிறது.
மத்திய சென்னையைப் பொறுத்தவரை, ஆண் வாக்காளர்கள் 6,67,465, பெண் வாக்காளர்கள் 6,82,241, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 455 பேர் என மொத்தம் 13,50,161 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் நடந்து முடிந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 3,70,660, பெண் வாக்காளர்கள் 3,57,819, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 135 பேர் என 7,28,614 பேர் அதாவது 53.96 விழுக்காடு வாக்குப் பதிவாகியிருந்தது. வாக்குப் பதிவு முடிந்ததுமே வாக்கு பெட்டிகள் அனைத்தும் சென்னை லயோலா கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் மாறன்!
நேற்று காலை மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. தேர்தல் அலுவலர் தொடங்கி காவலர்கள் எனக் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் முன்னிலையில் இருந்து வந்தார், இறுதியில் 4,13,848 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வெறும் 72,016 வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் வகிக்கிறார். அதேபோல, பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.
நடந்து முடிந்த தேர்தலில் தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணம், நடப்பு எம்.பி-யாக அவர் தொகுதி முழுவதிலும் மிகவும் நன்கு அறிமுகமானவர். இதே தொகுதியில் இதற்கு முன்பாக மூன்று முறை எம்.பி-யாக இருந்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி, அவரை தொகுதி மக்கள் அணுக முடிகிறது என்கிறார்கள். கடந்த முறை எம்.பி தேர்தலில் தொகுதிக்கு அளித்திருந்த வாக்குறுதிகளில், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைச் சரிசெய்யவில்லை என்றாலும், தொகுதிக்குத் தேவையான சிலவற்றைச் செய்து முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரகாசமான வெற்றி!
மத்திய சென்னை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக-வை சேர்ந்தவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பது இவருக்கு மேலும் பக்கபலமாக இருந்தது. தயாநிதி மாறன் திமுக முதல் குடும்ப உறுப்பினர் என்பதைத் தாண்டி, தனது தொகுதியில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவராக இருக்கிறார். இதனால், உட்கட்சி பூசல் எதுவும் இல்லாது அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் பணி பார்த்தது இவரின் வெற்றி வாய்ப்பை மிகவும் பிரகாசமாகியது.
மாவட்டச் செயலாளர் சிற்றரசு, அமைச்சர் சேகர்பாபு என அனைவரின் தேர்தல் பணியும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் மாறனை மீண்டும் எம்.பி-யாகியிருக்கிறது. விகடன் வெளியிட நச் நிலவரத்திலும் தயாநிதி மாறன் வெற்றிபெறுவர் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாம் இடத்தில் பாஜக-வைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், மூன்றாவது இடத்தில் தேமுதிக-வைச் சேர்ந்த பார்த்தசாரதி பிடிப்பார்கள் என்று சொல்லியிருந்தோம். அதன்படியே இன்றைய தேர்தல் முடிவுகளும் வந்திருக்கின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88