கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிட்டனர். கன்னியாகுமரி வருவாய் மாவட்டம் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி.

பசிலியான் நசரேத்

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றிபெற்று கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி ஆனார். வசந்தகுமார் மரணத்தைத் தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் 2021-ம் ஆண்டு நடந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆனார். காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன் இந்த பொதுத்தேர்தலில் களம் இறங்கினார் விஜய் வசந்த். தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் அமைப்பு ரீதியாக பலமாக உள்ளன. கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறையும் காங்கிரஸ்-க்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்கள்தான். விட்டமின் ‘ப’ மூலம் தேசியகட்சிகளுக்கு டஃப் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை தேர்தலுக்கு முன்பே ஏற்படுத்தியிருந்தார் அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத். ஆனால், தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பசிலியான் நசரேத்துக்கு சீட் கொடுத்ததால் கட்சிக்குள் கலகம் ஏற்பட்டது. பி.ஆர் ஏஜென்சிமூலம் பிரசாரம் மேற்கொண்ட பசிலியான் நசரேத்துக்கு அவரது சொந்த சமூகமாக மீனவர்கள் வாக்குகளே கிடைக்காமல் அவர் 4-ம் இடத்துக்குப் போனதுதான் பரிதாபம். 

மரிய ஜெனிபர்

கடந்த தேர்தல்களில் தன் காலைவாரிய வர்த்தக துறைமுகத்திட்டத்தைப் பற்றி இந்த தேர்தலில் வாய்திறக்கவில்லை பொன்னார். அதே சமயம், மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள், நான்கு வழிச்சாலைத்திட்டம் என 58,000 கோடிக்கு வளர்ச்சிப்பணி கொண்டுவந்ததாக சிறுபான்மையினர் மக்களின் மனதை கரைக்க முயன்றார் பொன்.ராதாகிருஷ்ணன். அதுமட்டுமல்லாது பார்ட் டைம் எம்.பி, டம்மி எம்.பி என விஜய்வசந்தை அட்டாக் செய்து களத்தை சூடாக்கினார் பொன்னார்.

அ.தி.மு.க, நா.த.க கட்சிகள் மீனவர் வேட்பாளர்களை களம் இறக்கியதால், அவர்கள் காங்கிரஸுக்கு செல்லும் வாக்குகளை பிரிப்பார்கள். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற கோஷம் தனக்கு கைகொடுக்கும் என தெம்புடன் களமாடினார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், தி.மு.க துணையோடு பா.ஜ.க வியூகத்தை உடைத்து விஜயத்தை வசமாக்கியுள்ளார் விஜய் வசந்த்.

விஜய் வசந்த்

விளவங்கோடு சட்டசபை தொகுதி  இடைத்தேர்தலில் மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக்கி மீனவர்களை சமாதானப்படுத்தியது காங்கிரஸ்.  அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத் சிறுபான்மையினரை நெருங்கவிடாமல் சிறுபான்மையின தலைவர்கள் கவனித்தும்கொண்டனர். சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரஸின் மோடி எதிர்ப்பு பிரசாரம் எடுபட்டது. அதே சமயம் 10-வது முறையாக வேட்பாளராக களம் இறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் மீதான கட்சியினரின் அதிருப்தி தேர்தல் களத்தில் பிரதிபலித்தது. கட்சி வாக்குகளுடன், மீனவர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக கிடைத்ததால் விஜய் வசந்த் வெற்றிக்கனியை பறித்துள்ளார். பா.ஜ.க இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தையும், அ.தி.மு.க 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

பெற்ற வாக்குகள் (இறுதி நிலவரம்)

காங்கிரஸ் – 5,46,248

பா.ஜ.க – 3,66,342

அ.தி.மு.க – 41,393

நாம் தமிழர் கட்சி – 52,721

வித்தியாசம்– 1,79,907

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.