நிறைவேறிய K.N நேரு சபதம் – மீண்டும் `வந்தாரை வெற்றிபெற வைத்த திருச்சி’ – துரை வைகோ வென்றது எப்படி?

திருச்சி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் துரை வைகோ, அ.தி.மு.க தரப்பில் கருப்பையா, பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த தொகுதியில், திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருச்சி மேற்கு தொகுதி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய தொகுதிகள் அடங்கியுள்ளன.

திருச்சி தொகுதிக்கு, ‘வந்தாரை ஜெயிக்க வைக்கும் தொகுதி…’ என்று பெயர் இருக்கிறது. காரணம், இந்த தொகுதியில் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றவர்கள் பலரும் வெவ்வேறு மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். அந்த வகையில், இந்த முறையும் வெளி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் புதல்வரான துரை வைகோவை திருச்சி தொகுதி மக்கள் வெற்றிப்பெற வைத்திருக்கிறார்கள்.

துரை வைகோ (திருச்சி ம.தி.மு.க எம்.பி)

தனி சின்னத்தில் நிற்க உறுதிக்காட்டியது, அதனையொட்டி துரை வைகோவுக்கும், தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மேடையில் இருக்கும்போதே ‘உரசல்’ ஏற்பட்டது, அதன்பிறகு ‘செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன்’ என்று மேஜையை குத்தி துரை வைகோ கண்ணீர் விட்டது என்று ஆரம்பபே அல்லோலப்பட்டது. ஆனால், தி.மு.க தலைமை கண்டித்தபிறகு, பள்ளி மாணவர்கள் பிரேயரில் உறுதிமொழி எடுப்பதுபோல் கே.என்.நேரு, ‘துரை வைகோவை அமோகமாக ஜெயிக்க வைப்பேன்’ என்று சபதமேற்றார். அது, நிறைவேறியிருக்கிறது.

தொகுதியில் அதிகம் உள்ள முத்தரையர், முக்குலத்தோர், பட்டியல் சமூக சமூக வாக்குகள், அந்த சமூகங்களை சாராத துரை வைகோ வெற்றியை பாதிக்கவில்லை. அப்படிப் பாதித்திருந்தால், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களான அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையாவோ அல்லது அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதனோ தான் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் துரை வைகோ, லேட்டாக கிடைத்த தீப்பெட்டி சின்னம் ஆகியவை மக்கள் மத்தியில் புதிது என்றாலும், தி.மு.க கூட்டணி, வைகோவின் மகன், கே.என்.நேரு உள்ளிட்ட அடையாளங்கள், துரை வைகோவை பட்டித்தொட்டியெங்கும் ‘ரீச்’ செய்தது.

கருப்பையா (திருச்சி அ.தி.மு.க வேட்பாளர்)

ஆரம்பத்தில், தி.மு.க கூட்டணி தான் பின்னடைவாக தெரிந்தது. அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா ஊருக்கு முன் முதல் ஆளாக பிரசாரத்தை தொடங்கியதோடு, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று ‘டோர் டு டோர்’ வரையில் இறங்கி அடிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார். அதோடு, இவர் ஊதிய ‘தாராளமய மகுடி’யில் சொந்தக் கட்சியினர், கூட்டணிக் கட்சி ஆட்கள் மட்டுமின்றி, மாற்றுக்கட்சி ஆட்களும் மயங்கிபோனார்கள். ‘பசையை வேண்டியமட்டும் இறக்கி, எம்.பி-யாகிவிட வேண்டும்’ என்று அவர் நினைக்க, அடுத்தடுத்த பிரசார எபிசோடுகளில் துரை வைகோவுக்கு கள நிலவரம் மாறுவதை பார்த்து, ‘மகாபிரவுவாக’ இருந்த கருப்பையா ‘சிக்கனம் தேவை இக்கணம்’ என்று ‘சிக்கன சிகாமணி’யாக மாறிப்போனார். மாறாக, தி.மு.க-வினர் கடுமையாக களமாட, துரை வைகோ வெற்றிப்பெற்றிருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா இரண்டாவது இடம் வந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷ் இளைஞர்களிடம் அறிமுகமானவர் என்பதால், புதுமுக வாக்காளர்களின் வாக்குகளை கணிசமாக பெற்று, மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதனோ, தான் சார்ந்த சமூக வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், நான்காம் இடத்தில் இருக்கிறார். வெற்றிப்பெற்றபின் அதற்கான சான்றிதழைப் பெற்றபின், தனக்கு வாக்களித்த திருச்சி தொகுதி மக்களுக்கு துரை வைகோ கண்ணீர்மல்க நன்றி கூறினார். இந்நிலையில், ‘அழுது தேர்தலை ஆரம்பித்து அழுதே தேர்தலை முடித்த துரை வைகோ’ என்றுசமூக வலைதளங்களில் சிலர் பதிவு போட்டு வருகிறார்கள்.

பெற்ற வாக்குகள்:

மதிமுக (திமுக கூட்டணி) வேட்பாளர் துரை வைகோ: 5,42,213

அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா : 2,29,119

அமமுக (பாஜக கூட்டணி) வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘ஜல்லிக்கட்டு’ ராஜேஷ் : 1,07,458

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88