கோவை: வேலுமணியின் வியூகத்தை உடைத்தெறிந்த திமுக – அதிமுக-வை ஓவர்டேக் செய்த அண்ணாமலை!

தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசியளவில் உற்று நோக்கும் தொகுதியாக கோவை இருக்கிறது. திமுக-வில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐ.டி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

கோவை

கல்வி, தேர்தல் வியூகங்கள் என எல்லாவற்றிலும் சமபலம் உள்ள வேட்பாளர்கள் களமிறங்கியது கோவை களத்தை பரபரப்பாக்கியது. நடந்து முடிந்தத் தேர்தலில் கோவை தொகுதியில் 64.81 சதவிகிதம் வாக்கு பதிவாகியிருந்தது.

தேர்தல் பிரசார களத்தைப்போலவே, வாக்கு எண்ணிக்கையிலும் கடுமையான போட்டி நிலவியது. மும்முனைப் போட்டி என்பதால் எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிந்து திமுக வெற்றி பெற முக்கிய காரணமாகிவிட்டது. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா  கோவை தொகுதி திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

டி.ஆர்.பி. ராஜா, கணபதி ராஜ்குமார்

தொகுதிக்குள் கணிசமாக உள்ள சிறுபான்மை சமுதாயம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், மத்திய பாஜக அரசு எதிர்ப்பு வாக்குகள் திமுக-வுக்கு ஆதரவாக விழுந்துள்ளன. ஆங்காங்கே உள்கட்சி பூசல், சுணக்கம் இருந்தபோதும் தொகுதி முழுக்க காட்டிய தாராளம், இந்த கடுமையான போட்டியில் திமுக-வை கரைசேர்த்துள்ளது.

தேர்தல் அறிவித்து குறுகிய காலம் என்றாலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ட்ரெண்டை மாற்றி, கோவையில் அண்ணாமலை அலையை பா.ஜ.க உருவாக்கியது. பூத்கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத நிலையில், தன்னார்வலர்கள் மூலம் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பாஜக இறங்கி வேலை பார்த்தது. பிரதமர் மோடியை 3 முறை கோவை அழைத்து வந்தனர். அது தொகுதிக்குள் பிரதானமாக உள்ள கவுண்டர் சமுதாயம் வாக்குகளுடன், இளைஞர்கள் வாக்குகளையும் கவர்ந்தது.

மோடி, அண்ணாமலை

முக்கியமாக அதிமுக வாக்குகள் பாஜக-வுக்கு அதிகளவு கிடைத்துள்ளது. இதனால் நகர் பகுதி மட்டுமல்லாமல்  சூலூர், பல்லடம் உள்ளிட்ட கிராமப்பகுதியிலும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொகுதியில் பலமான அதிமுக-வை ஓவர்டேக் செய்து, அண்ணாமலை 2ம் இடம் பிடித்துள்ளார்.

இதேபோல 2014 நாடாளுமன்ற தேர்தல் மும்முனைப் போட்டியில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வியூகங்கள் உள்ளிட்டவற்றால் அதிமுக-வுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் பணிகளில் அதிமுக-வில் வழக்கமாக காட்டப்படும் வேகம் இந்தமுறை இல்லை.

வேலுமணி, சிங்கை ராமச்சந்திரன்

வேலுமணியே பொள்ளாச்சி தொகுதியில் தலைகாட்டிய அளவுக்கு, கோவை தொகுதியில் ஆர்வம் காட்டவில்லை. திமுக, பாஜக இருவரும் செலவில் காட்டிய தாராளம் அதிமுக-விடம் இல்லை. இதனால் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கடுமையான போட்டியிலும் இளைஞர் மற்றும் நடுநிலை வாக்குகளை கவர்ந்து, நாம் தமிழர் டீசன்ட்டான வாக்குகளை பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 24 சுற்றுகள் முடிவில்,

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,17,561 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்…

திமுக – 564662

பாஜக – 447101

அதிமுக – 235313

நாம் தமிழர் – 82273

தபால் வாக்குகள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை…