பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி… இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்!
“தொழில்நுட்பங்களின் உதவியால் உலகம் உள்ளங்கைக்கு வந்துவிட்டது. எனவே, நோக்கமும் உழைப்பும் சிறப்பாக இருந்தால் எங்கிருந்தும் பிசினஸில் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்” என்கிறார் சேலம் மாவட்டத்தில் உள்ள புக்கம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த தமிழரசி. dhiren_fashion என்ற பெயரில் ஆன்லைன் புடவை வணிகம் செய்துவரும் இவரது பிசினஸ் அனுபவங்கள் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு எனர்ஜி பூஸ்டராக அமையும்.
“சேலம் மாவட்டத்தில் உள்ள கம்மம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவள் நான். அடிப்படையில் நான் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சேலம் மாவட்டத்தில் உள்ள புக்கம்பட்டி என்ற ஊரில் வசித்து வருகிறேன். என்னுடைய புகுந்த வீடு நெசவுத் தொழிலை பிரதானமாகக் கொண்டது. சொந்தமாகத் தறி வைத்து பட்டுப் புடவை நெய்யும் தொழிலை நாங்கள் செய்து வந்தோம்.
ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வெளியில் எங்குமே செல்ல முடியாத சூழல் இருந்ததால் எங்களது நெசவுத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அந்தச் சூழலில் எங்கள் தறியில் நெய்த புடவைகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து வந்தேன். தேவைப்படுவோர் அதனை விலைக்கு வாங்கிக் கொண்டனர். இப்படியே நாள்கள் நகர, ஒருகட்டத்தில் பக்கத்தில் இருக்கின்ற கடைகளிலிருந்து புடவைகளை ரீசெல்லிங் (reselling) செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது’’ என்கிறார் தமிழரசி.
அதென்ன ரீசெல்லிங்?
உற்பத்தி செய்வோர் அல்லது சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருள்களை வாங்கி, அதன் அடிப்படை விலையைக் காட்டிலும் சற்று கூடுதலாக மார்ஜின் வைத்து அப்பொருளை விற்கவேண்டும். இப்படிக் கூடுதலாக வைத்து விற்கும் பணத்தை ரீசெல்லிங் செய்வோர் கமிஷனாக எடுத்துக்கொள்வர். இதுவே ரீசெல்லிங்கின் அடிப்படை கான்செப்ட்.
“என்னிடம் வந்த இந்த ரீசெல்லிங் வாய்ப்பை நம்பிக்கையுடன் எடுத்துச் செய்யத் தொடங்கினேன். விற்பனையாளர்கள் என்னிடம் அனுப்பிவைக்கும் புடவைகளை டிஸ்ப்ளே செய்து ஆர்டர்களை எடுப்பேன். ஆர்டர்களுக்கான பணத்தை வாடிக்கையாளர்கள் அனுப்பியதும் எனக்கான மார்ஜின் அமௌன்ட்டை எடுத்துக்கொண்டு புடவைக்கான விலையை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன்.
அதன் பின்னர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் dhiren_fashion என்ற பெயரில் அக்கவுன்ட்டைத் தொடக்கி அதன் வழியாகவும் இந்த ரீசெல்லிங் தொழிலை நான் செய்துவந்தேன்” என்கிற இவர் இந்த ரீசெல்லிங் பிசினஸ் மூலமாகத்தான் புடவைகள் குறித்த ஏ-டு-இசட் தகவல்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.
“இந்த அனுபவம் கொடுத்த நம்பிக்கையின் விளைவாக புடவைகளை நேரடியாகக் கொள்முதல் செய்து அவற்றை சமூக ஊடகங்களின் வழியாக விற்பனை செய்யத் தொடங்கினேன். குறிப்பாக, நான் நடத்திவரும் வாட்ஸ்அப் குரூப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் வழியாகவும் என்னுடைய இந்த பிசினஸ் சிறப்பாக நடந்துவருகிறது. எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த இந்த பிசினஸ் வழியாக என்னைச் சுற்றி இருப்பவர்களையும் கைதூக்கிவிட நினைக்கிறேன். எனவே ஆர்வமுள்ளவர்களுக்கு ரீசெல்லிங் வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறேன்“ என்று சொல்லி வியப்பூட்டுகிறார் தமிழரசி.
“என்னிடம் தற்போது 2000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வழக்கமான நாள்களில் ஒரு மாதத்திற்கு 150 முதல் 200 புடவைகள் விற்பனையாகும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்” என்கிற இவர் கல்யாணி காட்டன் புடவைகளை பிரதானமாக விற்பனை செய்கிறார். இதுதவிர கட்வால் காட்டன் சில்க் உட்பட பல்வேறு புடவைகளையும் விற்பனை செய்துவருகிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை என்ற ஊரில் உருவாக்கப்படும் ‘இளம்பிள்ளை புடவைகளையும்’ விற்பனை செய்யும் எண்ணமிருப்பதாகக் கூறுகிறார்.
“திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் துறை சார்ந்த வளர்ச்சி என்பது அப்பெண்ணின் கணவர் கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவின் அடிப்படையிலேயே அமையும் என்பது நூறு சதவிகிதம் உண்மை. எனக்கு அப்படிப்பட்ட சப்போர்ட் சிஸ்டமாக என் கணவர் கார்த்தி இருக்கிறார். ’எத்தனை சிக்கல்கள் வந்தாலும் நீ முன்வைத்த காலை பின்வைக்கக்கூடாது’ என்று அவர் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். புடவைகளை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் டிஸ்ப்ளே செய்வது முதல் புடவைகளை கொரியர் அனுப்புவதுவரை அனைத்திலும் அவர் பங்கு மிக முக்கியமானது” என்பவர் தற்போது புடவைகளை வீட்டில் வாங்கிவைத்து ஆன்லைன் வணிகம் செய்து வருகிறார். எதிர்காலத்தில் புடவைகளுக்கென்று தனது ஊரில் கடை ஒன்றை அமைக்கவேண்டும் என்ற கனவு தனக்கிருப்பதாகவும் கூறுகிறார்.
எண்ணம் யாவும் கைகூடட்டும்!