`அரசு வேலை வேணுமா?’ – ரூ.2 கோடி மோசடிசெய்த 80 வயது முதியவர்… போலீஸாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஈரோடு, மூலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (82). இவரது மகன் அருள்வேல், தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராமசாமிக்கு கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (80) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியுள்ளார். கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் இருப்பதாகவும், ராமசாமியின் மகன் அருள்வேலுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் தங்கவேல் கூறியுள்ளார்.

இதை நம்பி தங்கவேலிடம் மகன் வேலைக்காக ரூ.5 லட்சத்தை ராமசாமி கொடுத்துள்ளார். `உங்கள் உறவினர் யாருக்காவது அரசு வேலை தேவை என்றாலும், வாங்கித் தருகிறேன்’ என தங்கவேல் கூறியுள்ளார். இதை நம்பி ராமசாமி, தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என 44 பேரிடம் ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்கி தங்கவேலிடம் கொடுத்துள்ளார்.

தங்கவேல்

பணம் கொடுத்த அனைவருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தங்கவேல் கூறியுள்ளர். நீண்ட நாள்களகியும் தங்கவேல் கூறியது போன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தரவில்லை. ராமசாமி பணத்தை திருப்பிக் கேட்டபோது, தங்கவேல் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி, இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தங்கவேலிடம் விசாரிக்க கோவை சென்றனர்.

கைது

அங்கு சென்று பார்த்தபோது, கோவை வடவள்ளியில் இதே போன்று அரசு வேலை வாங்கி தருவதாக தங்கவேல் பலரிடம் ரூ. 29 லட்சம் மோசடி செய்துள்ளதும், இது தொடர்பாக கோவை போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது ஈரோட்டில் மோசடி செய்த வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.2 கோடிக்கு மேல் முதியவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb