நீலகிரி: கலப்பட‌ மது, கூடுதல் விலை… 13 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்!

டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மதுபானக் கடைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.‌ நீலகிரி மாவட்டத்தில் 73 கடைகள் இயங்கி வருகின்றன. நீலகிரியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை‌விட கூடுதலாக வசூலிப்பதாகவும், மது வகைகளில் தண்ணீர் மற்றும் ஒரு சில பொருள்களை கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நீலகிரிக்கு விரைந்த டாஸ்மாக் பறக்கும் படையினர், ஊட்டியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஊட்டி, மணிக்கூண்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை‌ ஒன்றில் மது‌ பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதைக் கண்டறிந்து, 5 ஊழியர்களைப் பணியிடை நீக்கம்‌ செய்துள்ளனர்.

டாஸ்மாக்

இந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டும், முறைகேடுகள் குறையாத நிலையில், டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இரண்டு கடைகளில் தண்ணீர் கலக்கப்பட்ட மது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதைக் கண்டறிந்து 13 ஊழியர்களை அதிரடியாக பணியிடை நீக்கம்‌ செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், “மதுபானக் கடைகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்தோம். ஊட்டி லோயர் பஜார் கடை மற்றும் ஸ்டேட் வங்கி எதிரில் இயங்கி வந்த கடைகளில் முறைகேடு நடப்பதை உறுதி செய்து , 4 மேற்பார்வையாளர்கள் 9 ஊழியர்கள் என‌ 13 பேர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb