இர்ஃபான் விவகாரத்தில் இடி மேல் இடி… விழிபிதுங்கும் தமிழக அரசு… மத்திய அரசிடம் சரணாகதி?!

பிரபல யூடியூபரான இர்ஃபான், தன் கர்ப்பிணி மனைவியுடன் துபாய்க்குச் சென்று பரிசோதனை செய்து, கருவிலிருப்பது என்ன குழந்தை என்பதை வீடியோவாகப் பதிவிட்டார். இதனால் கடும் சர்ச்சை எழுந்தது. பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் பாய்ந்தன. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்தது. ஆனால், இப்போது விஷயத்தை தமிழக அரசு ‘சுமூக’மாக முடித்து வைத்திருப்பதாக வரும் செய்திகள், அதிர்ச்சிக் கிளப்புகின்றன.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது குற்றம் என்கிறது இந்திய சட்டம். பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, அபார்ஷன் செய்வதால் ஏற்படும் தாயின் உயிரிழப்பைத் தடுப்பது போன்ற பல காரணங்களுக்காக கடுமையான இந்தச் சட்டம் இங்கே அமலில் உள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனையும் உண்டு. பரிசோதனை செய்த மருத்துவருக்கு தண்டனை வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட பரிசோதனை நிலையம் அல்லது மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

சிசு – சித்தரிப்பு படம்

அதேசமயம், ‘இர்ஃபான் பரிசோதனை செய்தது இந்தியாவில் இல்லை. துபாயில்தான். எனவே, அவர் மீது இந்திய சட்டப்படி தண்டனை விதிக்க முடியாது… கூடாது’ என்று சிலர் இர்ஃபானுக்கு ஆதரவு காட்டுகிறார்கள். ஆனால், ‘இந்தியாவில் செய்தால்தான் தவறு. வெளிநாட்டில் செய்தால் தவறில்லை என்று தெரிந்தே துபாய்க்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். ஆனால், அதை வீடியோவாக வெளியிட்டது தமிழகத்தில்தான். சட்டத்தை ஏமாற்றப் பார்க்கும் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஆரம்பத்தில், கடும் நடவடிக்கை எடுப்போம் என்று சீறிய தமிழக அரசு, ஒரு கட்டத்துக்கு மேல் பம்ம ஆரம்பித்தது. இர்ஃபானுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியிலிருக்கும் பலரும் நெருக்கடி கொடுத்ததுதான் காரணம். இதையடுத்து, ‘சுமூக’மாக முடிக்கத் திட்டமிட்டவர்கள், விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை அமைத்தனர். இதைத் தொடர்ந்து குழுவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததோடு, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கிவிடுவதாகவும், குழந்தையின் பாலினத்தை அறிவிக்கக்கூடாது என்ற விழிப்பு உணர்வு வீடியோ ஒன்றையும் பதிவிடுவதாக சொன்னார் இர்ஃபான்.

சொன்னபடி விழிப்பு உணர்வு வீடியோவை இதுவரை போடாத இர்ஃபான், வழக்கம்போல ‘விழிபிதுங்கத் தின்றுத் தீர்க்கும் உணவு’ வீடியோக்களை மட்டும் தவறாமல் போட ஆரம்பித்துவிட்டது தனிக்கதை!

தமிழ்நாடு அரசு

இர்ஃபானின் இந்த விளக்கங்கள் ‘பரம’திருப்தியைக் கொடுத்திருப்பதால், அத்தோடு பிரச்னையை ‘சுமூக’மாக அரசாங்கம் முடித்து வைத்திருப்பதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, இர்ஃபான் மீதான அரசின் மென்மையான இந்தப் போக்கை பெண் உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் வெரோணிக்கா, சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்லப் போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ‘தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்குக் கருணை காட்டக்கூடாது. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படி பல பக்கங்களிலிருந்தும் தொடர்ந்து இடி விழுவதால், இந்த விஷயத்திலிருந்து இர்ஃபானை மட்டுமல்ல, தன்னையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தக்கட்டமாக மத்திய சுகாதாரத் துறையிடம் தமிழக அரசு சரண்டர் ஆகப்போவதாக கூறப்படுகிறது. அதாவது, என்னதான் மாநில அரசு முடிவெடுத்தாலும், மத்தியில் இந்த விஷயங்களைக் கண்காணிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு வாரியம்தான் இறுதி முடிவெடுக்க முடியும். எனவே, அங்கிருப்பவர்களிடம் பேசி சரிக்கட்டிவிட்டால், பிரச்னை முடிந்தது என்கிற யோசனையோடு டெல்லிக்குக் காவடி தூக்க ஆரம்பித்திருப்பதாகக் கேள்வி.