‘விவசாயிகள் வாழ்ந்து விடக்கூடாது’ என்று இந்தியத் திருநாட்டில் ஒருவர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார் என்றால், அவர்… `தெய்வக் குழந்தை’ பாரதப் பிரதமர் மோடியாகத்தான் இருக்கும்!
பின்னே… ‘இந்திய விவாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவேன்’ என்று வாய்கிழிய ஒருபக்கம் பேசிக்கொண்டே… கோதுமை இறக்குமதிக்கு அனுமதி கொடுத்திருக்கும் இரக்கமற்ற குழந்தையாக இருக்கிறதே இந்தத் தெய்வக் குழந்தை?
சர்வதேச அளவில் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ. 3,000-க்குக் கீழ் எங்குமே கிடையாது. அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உலக அளவிலான விவசாயிகள், ஒரு குவிண்டால் கோதுமையை முதல் 4,000 ரூபாய் வரை விற்று லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய விவசாயிகளுக்குக் கிடைப்பதோ… 2,400 முதல் 2,600 ரூபாய் வரைதான். இந்திய அரசு வழங்கியுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) வெறும் 2,275 ரூபாய் மட்டுமே.
உலக அளவில் கோதுமையின் விலை எகிறிக் கிடக்கும்போது, ஏற்றுமதியில் இறங்கினால்… இந்திய விவசாயிகளுக்குத் தானாகவே இரண்டு மடங்கு வருமானம் கிடைத்துவிடும். ஆனால், இதுபொறுக்கவில்லை… தெய்வக் குழந்தைக்கு. கடந்த மூன்று ஆண்டுகளாகவே கோதுமை ஏற்றுமதிக்குத் தடை போட்டு வைத்திருக்கிறது.
‘நல்ல விலை கிடைத்துவிட்டால், விவசாயிகள் நம் பேச்சைக் கேட்கமாட்டார்கள். குறிப்பாக, கோதுமை அதிகமாக விளையும் வடநாட்டு விவசாயிகள். அவர்களை எப்பொழுதும் கடனிலேயே அழுத்தி வைத்திருந்தால்தான், பிரதமர் நிதி உதவி திட்டம் என்கிற பெயரில் நாம் விசிறியடிக்கும் 6000 ரூபாய்க்காக நம் காலடியிலேயே காத்துக் கிடப்பார்கள்’ என்று நினைக்கிறார் மோடி.
இந்தத் தெய்வக்குழந்தையின் திட்டங்களை மீறி, இந்த ஆண்டு விவசாயிகளுக்கு சிறிது கூடுதல் விலை கிடைக்கச் செய்யும் வகையில், ஓரளவுக்கு உதவி செய்திருக்கிறது இயற்கை. அதிக சேதாரமில்லாமல விளைந்திருக்கிறது. கோதுமை இறக்குமதியை ஊக்குவிக்காமல் இருந்தால், இந்திய விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். ஆனால், ரஷ்யாவிலிருந்து ஐந்து மில்லியன் டன் கோதுமை இறக்குமதிக்கு அனுமதி வழங்கி இருக்கிறார் மோடி.
சரி, இறக்குமதி செய்து தொலைக்கட்டும். உலக கோதுமை விவசாயிகளுடன் இந்திய கோதுமை விவசாயிகளும் போட்டிப் போடட்டும் என்று பார்த்தால்… வரியே இல்லாமல் இறக்குமதிக்கு அனுமதி கொடுத்து, இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார் மோடி.
உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) ஷரத்துகளின்படி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு 40% வரியை இந்தியா விதிக்கலாம். ஆனால், வணிகர்களுக்காகவே அவதாரமெடுத்து வந்ததிருக்கும் தெய்வக்குழந்தை எப்படி வரிவிதிக்கும்? கார்ப்பரேட் கம்பெனிகளான பிஸ்கட் தயாரிப்பு மற்றும் கோதுமை மாவு மில் முதலாளிகள் லாபம் கொழிக்கும் வகையில், வரியில்லாமல் கோதுமையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.
இப்படி வரியில்லாமல் இந்திய சந்தைக்கு வெளிநாட்டுக் கோதுமை வருமேயானால், இங்கே கோதுமை விலை குவிண்டால் 2000 ரூபாய்க்கும் கீழே கூட சரிந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதுதான், இந்த ‘தெய்வப் பிறவி’ விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் லட்சணம்.
விவசாயிகளிடமிருந்து, 32 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்ய வேண்டிய இடத்தில், 26 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே இந்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
கோதுமை உற்பத்தியில் இந்தியா உலகில் அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த 2024-25 ஆண்டு இலக்கான 112 மில்லியன் டன் உற்பத்தியில் சிறிது சரிவு. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயம் ஆகியவை விளைச்சலை பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். வரலாற்றில் முதல் முறையாக புதுடெல்லியில் 52.9 சி வெப்பம் எகிறி இருக்கிறது என்றால், வருங்காலத்தில் இன்னும் மோசமான விளைவுகளை இந்தியா சந்திக்க வேண்டிவரும்.
இதுபற்றியெல்லாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல், ‘தெய்வக் குழந்தை’ கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மீது அமர்ந்து தியானம் செய்கிறாராம்… காலக்கொடுமை.
அவதார புருஷரான கிருஷ்ண பகவான், தாயின் வயிற்றில் பிறந்தவர்தான். மற்றொரு அவதார புருஷர் ராமர்கூடத் தாயின் வயிற்றில் பிறந்தவர்தான். ஆனால், நமது தெய்வக் குழந்தை மோடிஜி, தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததை ஏற்க மறுத்து, ‘வானத்திலிருந்து குதித்தவன் நான்’ என்கிறார்.
இப்படி மண்டைக் காய்ந்து கிடப்பவரிடமெல்லாம் என்ன பேசி… என்ன ஆகப்போகிறது?
வாழ்க… பாரதம்
-தூரன் நம்பி