மதுரை வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக-வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த இருக்கிறார்.

எல்.முருகன்

இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் எங்கு சென்றாலும் மோடி மோடி என்று பெரிய ஆதரவு அலைகளை கொடுக்கிறார்கள். நம் தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற மோடியை மக்கள் பாராட்டுகிறார்கள். மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

பிரதமர் மோடி தியானம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள், நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சிப்பது குறித்து கேட்டதற்கு, “நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நம் நாட்டின் நன்மைக்காக தியானம் செய்கிறார் பிரதமர் மோடி. சிறு வயது முதல் ஆன்மிகத்தில் மிகவும் பற்று கொண்டவராக இருந்திருக்கிறார்.

எல்.முருகன்

சென்ற முறை தேர்தலின் போதுகூட இமயமலையில் தியானம் செய்தார், தற்போது மூன்று நாள்களாக கடும் தவம் செய்து வருகிறார், முனிவர்போல தவம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி 100 சீட் கூட தாண்ட மாட்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு போகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு செல்வதில்லை.

அந்த அளவிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒர் மூலையில் திரும்பி இருந்தார்கள் என்பது தெரியும். காங்கிரஸ் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவோம். இரட்டை இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம்” என்றவரிடம்,

“மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்போது 15 லட்சத்தை பிரதமர் மோடி தருவாரா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “15 லட்சம் தருகிறேன் என்று பிரதமர் மோடி சொல்லவே இல்லை. இது எதிர்க்கட்சிகளின் கட்டுக் கதையாகும். அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது, ஹிந்தி தெரியாதவர்கள் ஹிந்தி படிக்க வேண்டும்.

பிரதமர் மோடி!

ஏற்கனவே கருப்பு பணம் வைத்திருந்தவர்கள், ஊழல் செய்தவர்களெல்லாம் சிறையில் இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இருக்காது. கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமில்லை டிஜிட்டல் டிரான்ஸ்பர் சாதாரண மக்களையும் சென்று சேர்ந்திருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் முன்னெடுப்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதி பாஜக கூட்டணியில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரகாஷ் ராஜ் ஒரு நடிகர், கர்நாடகா நடிகர் அவ்வளவுதான். அவருடைய கருத்துகளை நாம் இங்கே பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.