`யூடியூபர் இர்ஃபான் குற்றவாளியே, சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால்..?’ எச்சரிக்கும் RTI வெரோணிக்கா

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொண்டு அதை பொதுவெளியில் பகிர்ந்ததன் மூலம் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்… யூடியூபரான இர்ஃபான். இன்ஃபுளுயன்ஸர் என்று சொல்லப்படும் அவருடைய இன்ஃபுளுயன்ஸ்… எந்த அளவுக்கும் போகும் என்பதை அரசு அதிகாரிகளே இப்போது வெளிச்சம் போட்டுள்ளனர்.

‘இதுதொடர்பாக இர்ஃபான் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவரை மன்னித்துவிட்டோம்’ என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.

இந்த விஷயம், பெண்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரையும் கொதிக்க வைத்திருக்கிறது. இதையடுத்து, ‘இர்ஃபான் குற்றமிழைத்திருக்கிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முதலைமைச்சர் மற்றும் சுகாதாரத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார், மதுரையைச் சேர்ந்த ‘ஆர்.டி.ஐ’ ஆர்வலரும் பெண்கள், -குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் வெரோணிக்கா மேரி.

இர்ஃபான்

சுகாதார உரிமை உள்ளிட்ட பல்வேறு பொதுநலன் சார்ந்த பிரச்னைகளுக்காக ஆர்.டி.ஐ ஆர்வலராக 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார் இந்த வெரோணிக்கா. பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் சமூகம் சார்ந்த செய்திகளைக் கவனித்து, அது சார்ந்த துறையினரிடம் முறையிட்டு, அதற்குத் தீர்வை ஏற்படுத்துவதையும் செய்துவருபவர்.

கடந்த காலங்களில் மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் வென்டிலேட்டர் செயல்படாததால் 5 அப்பாவி நோயாளிகள் மரணமடைந்த சம்பவம், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருத்தரிப்பு மையம் அமைப்பது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஜீரோ டிலே அட்மிஷனை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பொதுநல வழக்குகளை ஆதாரங்களுடன் தாக்கல் செய்து, மாநில சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்றம் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல்களைச் செய்திருக்கிறார். இந்த நிலையில்தான், யூடியூபர் இர்ஃபான் விஷயத்தைக் கையில் எடுத்துள்ளார்.

வெரோணிக்கா மேரி

இதுகுறித்து வெரோணிக்காவிடம் பேசியபோது, “மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்களும், ஃபாலோயர்களும் உள்ள யூடியூபர் இர்ஃபான் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் கிராமம் முதல் நகரம் வரை லட்சக்கணக்கான பேரால் பார்க்கப்படுகின்றன. அதிகமாகவும் பகிரப்படுகின்றன.

கடந்த 19.5.24 அன்று, தன் மனைவியின் கருவில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்பதை சமூக வலைதளத்தில் அறிவித்து, அந்தக் கொண்டாட்டத்தை தன் யூடிப் சேனலில் வெளியிட்டிருந்தார் இர்ஃபான். இது தமிழகம், இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் வைரலாகப் பரவி லட்சக்கணக்கான பேர் பார்வையிட்டுள்ளனர்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது இந்தியச் சட்டப்படி குற்றம் என்பதால், அவர் வெளிநாடு சென்று, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை தமிழ்நாட்டில் அறிவித்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த விஷயம் குறித்து நாடு முழுக்கவிருந்து கண்டனங்கள் குவியவே… ‘இது சட்டப்படி தவறு, இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்’ என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்போது அதிரடியாக அறிவித்தார்கள். ஆனால், அடுத்த சில நாள்களில் அதிகாரிகளைச் சந்தித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர், வீடியோவை நீக்கிவிட்டார். அதோடு, அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசுத் தரப்பிலிருந்து எடுக்கவில்லை.

யூடியூபர் இர்ஃபான்

இந்தியக் குடிமகனாக இர்ஃபான், சட்டத்தை மீறி, தன் மனைவியின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்துள்ளார். pc-pndt சட்டத்தின்படி குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது தண்டனைக்குரிய குற்றம். இந்தச் சட்டத்தின்படி, அல்ட்ரா சவுண்ட், அம்னியோஸ்சென்டசிஸ் போன்ற எந்தவொரு முறையிலும் பாலினத்தை கண்டுபிடிப்பது தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு. ஆனால், இதில் எந்த நடவடிக்கையும் யூடியூபர் இர்ஃபான் மீது சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரால் எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தங்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அரசு, இர்ஃபானுக்குக் காட்டும் இந்தச் சலுகையால், ஏற்கெனவே இது போன்ற குற்றத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு, தாங்கள் செய்த குற்றத்தின் மீது அலட்சியம் ஏற்படுவதோடு இர்ஃபான் போல் மன்னிப்பு கேட்டு வழக்கை ரத்து செய்ய முறையிடலாம். இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் போனால், வரும் காலங்களில் பொதுமக்களுக்கு இச்சட்டத்தின் மீது அச்சம் இருக்காது. மேலும், கருவில் இருக்கும் பாலினத்தை இர்ஃபான் வழியில் கண்டுபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண் சிசு என்று தெரிந்தால் கருக்கலைப்பு அதிகரிக்கும். பெண் குழந்தைகள் எண்ணிக்கை வெகுவாக குறையும் ஆபத்து சமூகத்தில் உண்டாகும்.

இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இர்ஃபான் மீது சட்டத்தின்படி (pc-pndt) நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைவர் ஆகியோருக்கு புகார் அனுப்பி உள்ளேன்” என்று கூறினார் வெரோணிக்கா.

தன்னுடைய புகார் மனு மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக நீதிமன்றப் படியேறவும் தயாராக இருக்கிறார் வெரோணிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம்தான் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக நம் சிற்றறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை. தெருவில் நின்று சிகரெட் குடித்தால் கூட சாமானியன் என்றால், அடுத்த நிமிடமே தூக்கி உள்ளே போடும் போலீஸ்… மில்லியன் கணக்கில் சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருந்தால், கொலை செய்தால்கூட கண்டுகொள்ளாது போலிருக்கிறது!

எல்லாம்… இன்ஃபுளுயன்ஸ் செய்யும் மாயம்!