“இந்தியா கூட்டணி பற்றிய பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம்..” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ பேசியுள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட துரை வைகோ செய்தியாளரிடம் பேசும்போது, “தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இது நூறு சதவீதம் நடக்கும், தேர்தல் பிரசாரத்தின்போது சென்ற இடங்களிலெல்லாம் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஆகையால் 100 சதவிகிதம் தமிழகத்தில் வெற்றி பெறுவோம்.
ஆனால், மத்தியில் பிஜேபி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பிற்கு இன்னும் 48 மணி நேரம் பொறுத்திருக்க வேண்டும். பிறகுதான் சொல்ல முடியும்.
ஆனால், இந்திய அளவில் இந்தியா கூட்டணியே 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். இன்னும் 48 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த உண்மை தெரிய வரும். மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றவர், “தேர்தல் முடிவுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போய்விடும் என்ற அண்ணாமலை கூறியது குறித்து, “அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துகளையும் வதந்திகளையும் மட்டுமே சொல்லி வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி பற்றி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும், ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது, அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு” என்றார்.
“இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறுமா?” என்றதற்கு,
“அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் மத்திய அமைச்சரவையில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது” என்றார்.