Exit Poll-ல் 350-ஐ தாண்டிய பாஜக கூட்டணியும்… பிரசாந்த் கிஷோரின் முதல் ரியாக்சனும்!

பாஜக இந்த நாடாளுமன்றத் தேர்தலை, `400 இடங்கள் வெல்ல வேண்டும்’ என்ற முழக்கத்தோடு வரவேற்றது. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் `ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. அதைத்தொடர்ந்து மார்ச் பாதியில் தொடங்கி கடந்த இரண்டு மாதங்களாக 7 கட்டங்களாக நடைபெற்றுவந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நேற்றோடு நிறைவடைந்தது. இந்த இரண்டு மாதங்களுக்குள் மத ரீதியிலான பிரசாரங்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப்பெறுதல், பல வாக்குச்சாவடி மையங்களில் பா.ஜ.க நிர்வாகிகளின் அடாவடிகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என பல சம்பவங்கள் அரங்கேறின.

மோடி

அதேபோல், 400 இடங்கள் உறுதி என பா.ஜ.க-வும், நிச்சயமாகப் பெரும்பான்மையைப் பெறுவோம் என இந்தியா கூட்டணியும் நம்பிக்கை தெரிவித்து வந்தன. இப்படியிருக்க நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட 150 இடங்கள் பெறும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த கால தேர்தல்களில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அடுத்த தேர்தலில் தேவையற்ற பேச்சுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்

குறிப்பாக, தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான அடுத்த சில மணிநேரங்களில் முதல் ரியாக்சனாக பிரசாந்த் கிஷோர், “அடுத்த முறை தேர்தல் மற்றும் அரசியலைப் பற்றி பேசப்படும்போது, ​​போலி பத்திரிகையாளர்கள், சத்தம் போட்டு பேசும் அரசியல்வாதிகள், சமூக ஊடக வல்லுநர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தேவையற்ற பேச்சுகள் மற்றும் பகுப்பாய்வுகளில் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கிடையில் தனியார் ஊடகங்களில், பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இடங்கள் அல்லது அதற்கும் சற்று அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தென்னிந்தியாவில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.