Assembly Elections 2024: அருணாச்சலில் பாஜக… சிக்கிமில் SKM – ஆட்சியைத் தக்கவைக்கும் ஆளுங்கட்சிகள்!

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில், இந்த மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதியில் 10 தொகுதியில் பா.ஜ.க ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றதால், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது.

பாஜக

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சலப் பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், போட்டியின்றி வெற்றிபெற்ற 10 இடங்களையும் சேர்த்து பா.ஜ.க 46 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

முதல்வர் பேமா காண்டு நான்காவது முறையாக முக்தோ தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.க சார்பில் இவரே முதல்வராகத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

இவை தவிர, பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. எதிர்தரப்பில், சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி (PPA) இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

சிக்கிம்

சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, மொத்தமுள்ள 32 இடங்களில் 31-ல் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. கடந்த தேர்தலில் 17-ல் மட்டுமே வெற்றிபெற்றிருந்த எஸ்.கே.எம் இந்த முறை அதைவிட 14 இடங்கள் கூடாதலாக வென்று அபார வெற்றிபெற்றிருக்கிறது. முதல்வர் பிரேம் சிங் தமாங் முதல்வராகத் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்

அதேசமயம், கடந்த முறை 15 இடங்களை வென்று நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி இந்தத் தேர்தலில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.