Aircel: “என்னைக் கட்டாயப் படுத்தியதால், குறைந்த விலைக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்றேன்’’ – சிவசங்கரன்

ஏர்செல் நிறுவனம் பற்றி செல்போன் பயன்படுத்துபவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானதாக இருந்தது ஏர்செல் நிறுவனம். தமிழகத்தைச் சேர்ந்த சிவசங்கரன்தான் இந்த செல்போன் நிறுவனத்தை நடத்தி வந்தார்!

“ஏர்செல் நிறுவனத்தை குறிப்பிட்ட ஒருவருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கும்படி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இப்போதெல்லாம் எந்த நிறுவனத்தையும் இன்னாருக்குதான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது’’ என்று ராஜ் சமானி என்பவருக்கு அளித்த பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் சிவசங்கரன்.

யார் இந்த சிவசங்கரன்..?

திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சின்னகண்ணன் சிவசங்கரன், 1985-ம் ஆண்டு பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைத்தார். டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜின் தந்தை ராபர்ட் அமிர்தராஜ் தொடங்கி நடத்தி வந்த ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை வாங்கி சிவசங்கரன், குறைந்த விலையில் மக்களுக்கு கம்ப்யூட்டரைத் தந்தார்.

போட்டியாளர்களைவிட மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கம்ப்யூட்டரைத் தந்ததால், ஸ்டெர்லிங் நிறுவனம் இந்தியாவின் முக்கியமான கம்ப்யூட்டர் நிறுவனமாக குறுகிய காலத்திலேயே மாறியது.

ஏர்செல் நிறுவனம்…

இதன் அடுத்தகட்டமாக செல்போன் அறிமுகமாகி, இந்திய மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் ஏர்செல் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் மிக மிகச் சில நிறுவனங்களே செல்போன் சேவையைத் தந்து வந்தன.

AIRCEL

இந்த நிறுவனம் நன்கு வளர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், 2006-ம் ஆண்டு வாக்கில் மலேசியாவை சேர்ந்த இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான மாக்ஸிஸ் பெர்ஹாட் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்கியது. ஆனால், கட்டாயத்தின் பெயரில் இந்த நிறுவனம் விற்கப்பட்டதாக 2011-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இணைப்பு சிக்கலுக்கு உள்ளானது! அதன்பிறகு, இந்த நிறுவனத்தை நடத்த எவ்வளவோ முயற்சி நடந்தும் நிறுவனத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

8 பில்லியன் டாலருக்கு விற்றிருப்பேன்…

ஏர்செல் விற்பனை விவகாரம் பற்றி சமீபத்தில் ராஜ் சமானிக்கு அளித்த பேட்டியில் பதில் சொல்லி இருக்கிறார். அது பற்றி அவர் கூறியதாவது…

“ஏர்செல் நிறுவனத்தை நான் விற்றதால் எனக்கு வெறும் ரூ.3,400 கோடி மட்டுமே கிடைத்தது. ஆனால், ஏடி&டி (AT&T) நிறுவனத்துக்கு நான் ஏர்செல் நிறுவனத்தை விற்றிருந்தால், எனக்கு 8 பில்லியன் டாலர் கிடைத்திருக்கும். குறிப்பிட்ட ஒருவருக்கு நான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது தான் இதற்குக் காரணம்’’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தியது யார் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லைவில்லை!