Tamil News Live Today: இறுதிகட்ட தேர்தல்; மோடியின் வாரணாசி உட்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவைப் பொது தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதியும், 93 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 13-ம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. அதேபோல 49 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20-ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும், 58 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி ஆறாம் கட்ட தேர்தலும் நடைபெற்றன.

மோடி

இந்த நிலையில், 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமாக ஏழாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம் (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலப் பிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது.

இந்த இறுதிகட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெறும். அதைத் தொடர்ந்து ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும், வரும் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் வெளியாகவிருக்கின்றன.