`திருடர்கள் பூமியில் மோடிக்கு என்ன வேலை?’ – கடுகடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாள்களாக தியானத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்கிறார். தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்வதாக இல்லை. ஏனென்றால், தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக மாறி பல காலம் ஆகிவிட்டது.

தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் செய்த மகாராஜாவின் நிலை என்ன ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே, தமிழ்நாட்டுக்குள் வந்து யாகமும், தியானமும் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தில் தவறு செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன் நிற்க வைக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடி

மகாத்மா காந்தியை 1982-க்கு முன்பு வரை யாருக்கும் தெரியாது எனக் கூறும் மோடி இந்தியாரா… ஒட்டுமொத்த தமிழர்களை திருடர்கள் என்று சொன்ன மோடி, எதற்காக இங்கு வந்து தியானத்தில் ஈடுபடுகிறார். திருடர்கள் பூமியில் அவருக்கென்ன வேலை… அடுத்த முறை மோடி தமிழகம் வரும்போது தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவர். அவரை குறுகிய வட்டத்துக்குள் அடைக்க பா.ஜ.க மாநிலத் அண்ணாமலை முயற்சிப்பது என்பது அவருடைய அறியாமையைக் காட்டுகிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் சேர்ந்து பிரதமர் யார் என்பதை முடிவெடுப்பார்கள். கண்டிப்பாக ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் நினைப்பவர்கள் பிரதமராக வருவார்கள். ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற நிலை வராது. அப்படியே வந்தாலும் நஷ்டம் ஒன்றும் இல்லை. 4-ம் தேதிக்குப் பிறகு அ.தி.மு.க இருக்காது என அண்ணாமலை பேசியுள்ளா். 4-ம் தேதிக்குப் பிறகு அண்ணாமலை தமிழகத்தில் இருப்பாரா என உறுதி செய்தபிறகு, மற்றவர்களைப் பற்றி அவர் பேசட்டும்” என்றார்.