‘பாஜக தலைவர்களுக்கு தோல்வி பயம்..!’ – சொல்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

” ‘காங்கிரஸால் 40 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது. தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் மூலமாகவே காங்கிரஸ் கட்சியை தேட வேண்டும்’ என்கிறாரே அமித் ஷா?

“2024 தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மைக்ராஸ்கோப் வைத்து பார்த்தால்கூட தெரியாத அளவுக்கு பா.ஜ.க சுருங்கிவிடும். இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும். ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவும் ராகுல் காந்திக்குத்தான் இருக்கிறது. இதை உணர்ந்ததால், பா.ஜ.க தலைவர்கள் தோல்வி பயத்தில் இப்படியெல்லாம் பேசி வருகிறார்கள்.”

பாஜக

“ஆனால் ‘காங்கிரஸ் கட்சிக்குத்தான் தோல்வி பயம். அதனாலேயே அமேதியில் ராகுல் போட்டியிடவில்லை’ என ஸ்மிருதி இராணி சொல்கிறாரே?”

“நேரு குடும்பத்துக்கும் ரேபரேலி தொகுதிக்குமான உறவு காலங்காலமாக நீடித்து வருகிறது. எனவே அந்த தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே ராகுல் அங்கு போட்டியிடுகிறார். மோடி தலைமையிலான பா.ஜ.க செய்து வரும் பிரிவினைவாத அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே, ‘இந்த முறை மக்களை ஏமாற்ற முடியவில்லையே…’ என அவர்கள்தான் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.”

ராகுல் காந்தி

” ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வர  வேண்டும்’  என்கிறார் செல்வப்பெருந்தகை. ஆனால், நீங்களோ ‘ஸ்டாலின் காமராஜர் ஆட்சியைத் தருகிறார்’ என்கிறீர்களே… என்னதான் பிரச்னை?”

“என்னுடைய கருத்தை நான் சொல்லியிருக்கிறேன். அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். என்னைப்  பொறுத்தவரையில், எல்லா நல்ல ஆட்சிகளும் காமராஜர் ஆட்சிதான். எவ்வளவோ நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.”

செல்வப்பெருந்தகை Vs ஈ.வி.கே.எஸ்

“ஈரோடு கிழக்கில், ‘உங்களை தி.மு.க வெற்றி பெற வைத்ததற்கு கைமாறாகத்தான் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்’ என காங். கட்சிக்குள்ளிருந்தே விமர்சனங்கள் எழுகின்றனவே?”

“சுதந்திரத்துக்குப் பிறகு நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் காமராஜர். அதைத்தொடர்ந்து தற்போது ஸ்டாலின் நல்லாட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் நான் அப்படி தெரிவித்தேன். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, இந்த கருத்தை நான் ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது!”

முதல்வர் ஸ்டாலின்

” ‘டாஸ்மாக் விவகாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறைப்பு’ என பிரச்னைகள் தொடரும் இன்றைய சூழலில், ‘இதுதான் காமராஜர் ஆட்சியா…’ என்ற கேள்வி எழுகிறதே?”

“சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். போதை,  கொலை,  கொள்ளை எல்லாம் இன்றைக்குத்தான் தமிழகத்திற்கு வந்தது  கிடையாது. மனிதர்கள் என்று தோன்றினார்களோ,  அன்றிலிருந்தே இந்த பிரச்னைகள் இருக்கின்றன. இதை முழுவதுமாக கட்டுப்படுத்துவது கடினமான காரியம். பிரச்னைகள் அளவுக்கு அதிகமாக சென்று விடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருக்க வேண்டும்.”

டாஸ்மாக் கடை

“தமிழக பா.ஜ.க., தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் இன்னும் தி.மு.க தோளில் சவாரி செய்து கொண்டிருப்பதாக விமர்சனம் உள்ளதே?”

“பா.ஜ.க வைத்துள்ள கூட்டணியை எப்படி கூட்டணி என்று சொல்வது? அவர்களுடன் இருக்கும் கட்சிகளுக்கு என்ன செல்வாக்கு இருக்கின்றது? எடுத்துக்காட்டுக்கு த.மா.கா-வில் தொண்டரும் ஒருவரே; தலைவரும் ஒருவரே. பா.ம.க-வுக்கு இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான் செல்வாக்கு இருக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் யாருக்கும் பலம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க என மாநிலம் முழுவதும் பரவியுள்ள கட்சிகள் இருக்கின்றன!”

மோடி

“ராகுல்காந்தியைப் பாராட்டி பதிவிட்ட செல்லூர் ராஜூ,  எடப்பாடி, வேலுமணி போன்றவர்களின் மிரட்டலால்தான் அந்தப் பதிவை பிறகு நீக்கிவிட்டார் என்கிறார்களே”

“செல்லூர் ராஜுக்கு விவரம் பத்தாது. அ.தி.மு.க-வைப்  பொறுத்தவரையில் நிலையான புத்தி இல்லாதவர்கள். மாறி, மாறி பேசக்கூடியவர்கள். இன்று பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பார்கள்; நாளைக்கு கூட்டணி என்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திசை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்!”

செல்லூர் ராஜு

” ‘கமலாலயத்தில், மாட்டிறைச்சி சமைத்து வையுங்கள்’ என நீங்கள் கூறிய கருத்துக்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?”

“நான் ஆட்டுக் கறியும், மாட்டுக்கறியும் விரும்பி சாப்பிடுவேன். எனவே தான் அப்படி கூறினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.”

கமலாலயம்

“மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தால், தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்கக் கோருவீர்களா?”

“இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. தி.மு.க, காங்கிரஸ் இடையேயான உறவு மிகவும் சுமுகமாக இருக்கிறது. இந்த கூட்டணியை எந்த பிரச்னையும் இல்லாமல் எங்கள் தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கொண்டு செல்கிறார்கள்.”