கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.

தேர்தல் ஆணையம்

அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.