மின்னணு வாக்குப்பதிவு முறையில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக நாளை தொடங்குகிறது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 4 நான்கு யூனியன் பிரதேச குடிமக்கள் நாளை வாக்களிக்கவிருக்கின்றனர். இன்னொருபக்கம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) ஹேக் செய்யப்படக்கூடியவை, அதனால் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் VV PAT இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை முழுவதுமாக எண்ண வேண்டும் என பல நாள்களாக பல தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வந்தவண்ணமே இருக்கிறது.

EVM மற்றும் VV PAT இயந்திரம்

இந்த VV PAT இயந்திரம் என்பது, நாம் வாக்களிக்கும் EVM உடன் இணைக்கப்பட்டிருக்கும். EVM-ல் நாம் வாக்களித்ததும், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்று VV PAT இயந்திரத்தில் 7 நொடிகளுக்கு காட்டும். அதோடு, யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச்சீட்டும் அந்த VV PAT இயந்திரத்துக்குள் விழும். இந்த நடைமுறை முன்பிருந்து பின்பற்றி வந்தாலும், ஒரு தொகுதியில் 5 VV PAT இயந்திரங்களில் மட்டுமே ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்பட்டு வந்தது. இப்படியிருக்க, நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன், VV PAT இயந்திரத்தில் விழும் ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவிகிதம் ஒப்பிட்டு எண்ண வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுமீதான முதல் நாள் விசாரணை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது, `நாம் தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இது போன்ற அமைப்பை வீழ்த்த முயற்சிக்காதீர்கள். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும்படி வேட்பாளர்கள் கேட்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறிவிட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

இத்தகைய சூழலில், கேரளாவில் நேற்று நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது அந்த இயந்திரத்தில் பா.ஜ.க சின்னத்துக்கு ஒரு முறை வாக்களித்தால், VV PAT இயந்திரத்தில் பா.ஜ.க-வுக்கு இரண்டு ஒப்புகைச்சீட்டுகள் விழுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. இது குறித்து மனோரமா ஊடகத்தின் ஆன்லைன் தளத்தில் வெளியான செய்தியின்படி, கேரளாவின் காசர்கோடு தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் மற்ற சின்னங்களுக்கு நேராக பொத்தானை ஒருமுறை அழுத்தும்போது, VV PAT இயந்திரத்தில் சரியாக ஒரு ஒப்புகைச் சீட்டு விழுவதாகவும், அதுவே தாமரை சின்னத்துக்கான பொத்தானை ஒரு முறை அழுத்தினால் VV PAT இயந்திரத்தில் இரண்டு ஒப்புகைச்சீட்டுகள் விழுவதாகவும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் தரப்பும், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் தரப்பும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கின்றனர்.

பாஜக – அமலாக்கத்துறை

இந்த நிலையில், VV PAT ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவிகிதம் எண்ண வேண்டும் என்று ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று இரண்டாம் நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மனோரமா ஊடகத்தின் ஆன்லைன் தளத்தில் வெளியான செய்தியை மேற்கோள்கட்டினார். அதற்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மனிந்தர் சிங்கிடம், இந்த விவகாரத்தை சரிபார்க்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

உச்ச நீதிமன்றம்

அதன்பின்னர், மதியம் 2 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, `கேரளா காசர்கோடு தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறானது’ என நீதிமன்ற அமர்வில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பு கூறிவிட்டது.

இறுதியில், இரண்டாம் நாள் விசாரணை முடிவில் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.