மாநில அரசின் கீழ் செயல்படும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. ஆகவே, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரை அடிப்படையில், மாநில ஆளுநர்கள் நியமனம் செய்வார்கள். இதுதான், நீண்டகால நடைமுறையாக இருந்துவருகிறது.

அமைச்சர் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநர் இருக்கும் நிலையில், பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

உதாரணமாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால், துணைவேந்தர் நியமன விவகாரத்தில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்கத்தில் மாநில அரசின் கீழ் இயங்கிவரும் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம், மேற்கு வங்கத்தில் ஆறு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகத் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமித்தார் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் 22 பல்கலைக்கழகங்களுக்குத் தற்காலிக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருக்கிறார் என்கிறது மேற்கு கல்வி அமைச்சக வட்டாரம். ஆகவே, ‘மாநிலத்தின் கல்வி முறையை சீர்குலைக்க ஆளுநர் முயல்கிறார்’ என்று குற்றம்சாட்டிய மேற்கு வங்க மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மம்தா பானர்ஜி

அந்த வழக்கில், ‘மாநில அரசு வழங்கும் பட்டியலிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமனம் செய்யுங்கள்’ என்று மேற்கு வங்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது. மேலும், காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவிகளுக்கு, பெயர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்புமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்திலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுடன் மல்லுக்கட்டிக்கொண்டே இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும், மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் செயல்படுவதுமாக தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. எனவே, பல்கலைக்கழகங்கள் மீது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை காலிசெய்வதற்கான நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்கியது.

ஆர்.என்.ரவி

வழக்கமாக, பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேர்வுசெய்வதற்கு செனட், சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர், ஆளுநர் தரப்பில் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் தேர்வுக்குழு, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து மூன்று பேரைத் தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அந்த மூவரில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.

அந்த நடைமுறையை மாற்றும் வகையில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது, தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்வதற்கான இறுதி முடிவை மாநில அரசே எடுப்பது என்பதற்கான மசோதாக்கள் 2022-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியது.

துணைவேந்தர்களை மாநில அரசே நேரடியாக நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி, மசோதா குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக ஒரு செய்தி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், அப்படி கடிதம் எதையும் எழுதவில்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்தது. ஆனாலும், இன்றுவரையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சிக்கல் நீடிக்கவே செய்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து அறிவிப்பாணைகளை வெளியிட்டிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இன்னொரு புறம், தமிழக அரசும் இந்த மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து, மூன்று அறிவிப்பாணைகளை வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் அறிவிப்பாணைகள் யு.ஜி.சி விதிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்கவில்லை என்று ஆளுநர் தரப்பு விமர்சித்தது. திடீரென்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அறிவிப்பாணைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ஆர்.என்.ரவி

ஆனாலும், துணைவேந்தர் நியமனம், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பிரச்னை நீடிக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஏனெனில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசால் நிர்வகிக்கப்படுபவை. எனவே, பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.