“எனக்குள் பதற்றமும், பரவசமும் இருக்கிறது என்றாலும், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராகக் களமிறஙகுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று விபத்தில் சிக்கி, மீண்டு மறுபடியும் கிரிக்கெட் உலகிற்கும் டெல்லி அணிக்கும் திரும்பிய ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் சீசன் குறித்து தன் ஆர்வத்தைத் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் இன்று மோதின.

PBKS vs DC | Dhawan, Pant

பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப்பின் ஷிகர் தவான், “புதிய ஹோம் கிரவுண்டு என்பதால், முதலில் பந்துவீசுகிறோம்” என்ற தகவலைக் கூறி பந்துவீச முடிவு செய்தார்.

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தப் போகும் மிட்ஷல் மார்ஷ், ‘வாண வேடிக்கை நாயகன்’ வார்னர் ஆகிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர்கள் டெல்லி அணிக்குத் தொடக்கம் தந்தனர். முதல் ஓவரை வீசிய ‘சுட்டிக் குழந்தை’ சாம் கரணுக்கும், இரண்டாம் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கும், மூன்றாவது ஓவர் வீசிய ரபாடாவிற்கும் சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் வணக்கம் வைத்தது இந்த வார்னர் – மார்ஷ் கூட்டணி.

மூன்று ஓவர்களிலேயே 33 ரன்கள் எடுக்க, “220+ எடுத்து வைங்கடா” என டெரர் காட்டியது டிசி. ஆனால், அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் சிங்கின் பந்தைத் தூக்கியடித்து, சாஹர் கையில் கேட்ச் ஆகி 20 ரன்களில் வெளியேறினார் மார்ஷ்.

Pant

மேற்கிந்திய ‘சிக்சர் சிங்கம்’ ஹோப்பும், வார்னரும் இணைந்து பவர்ப்ளே முடிவில் ஒரு பல்க்கான ரன்களைச் சேர்த்தனர். ஹர்ஷல் பந்தில் வார்னர் கேட்சாக, டிசி ரசிகர்கள் முகத்தில் டல்லடித்தது. டல்லடித்த முகங்களில் டார்ச் அடித்தபடி வந்தார் கேப்டன் ரிஷப் பண்ட். ‘மல… நல்லா இருக்கீயா மல…’ என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் குதூகலமானார்கள்.

பிராரின் சுழலில் திணறிய பண்ட் – ஹோப் கூட்டணி, 10 ஓவர் முடிவில் 86/2 என்ற பாதுகாப்பான ஸ்கோருக்கு டிசியைக் கொண்டு சேர்த்தது. மீண்டும் ரபாடாவை எடுத்து வந்த ஷிகருக்கு நல்ல பலன் கிடைத்தது. ரபாடா பந்தில் வெளியேறினார் ஹோப். தன்னுடைய முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 2 சிக்ஸ், 2 ஃபோர் என 33 ரன்கள் எடுத்து, இந்த சீசனில் டெல்லி அணியின் பேட்டிங்கிற்கும் ஒரு நல்ல ‘ஹோப்’ கொடுத்துள்ளார்.

ஒன்றிரண்டு பவுண்ட்ரிகளால் அணியைக் கொஞ்சம் அதிரடி பக்கம் திருப்பிய கேப்டன் பண்ட், ஹர்ஷல் பந்தில் ஏடாகூடமாக அடித்து கேட்ச் ஆனார். தடதடக்க ஆரம்பித்த மிடில் ஆர்டரை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ரிக்கி புய் – ஸ்டப்ஸ் கூட்டணியின் கைகளில் விழுந்தது.

கைகளில் விழுந்த கையோடு, “சட்டி சுட்டதடா கைவிட்டதடா” என பொறுப்பை கீழே போட்டுவிட்டு, பிரார் சுழலில் சிக்கி வெளியேறினார் ரிக்கி புய். ராகுல் சஹார் பந்துவீச்சில் ஸ்டப்ஸ்ஸும் நடையைக் கட்ட, குருவி சேர்ப்பது போல ரன் சேர்த்துக்கொண்டிருந்த அக்‌ஷரும் ரன் அவுட் ஆனார். ரன்-ரேட்டோடு சேர்ந்து, விக்கெட்களும் சரிந்து, 138/7 என்ற நிலையில் திணறிக்கொண்டிருந்தது டெல்லி.

PBKS vs DC | David Warner

ஸ்டெம்புகளுக்குப் பேச்சுத் துணைக்கு வந்தவர் போல விளையாடிக்கொண்டிருந்த சுமித்தும் அவுட்டாக, அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட வைக்க வேண்டிய பொறுப்பு, ‘இம்பாக்ட் ப்ளேயராக’ வந்த போரலுக்கும் குல்தீப் யாதவ்விற்கும் சென்றது.

ஹர்ஷல் பட்டேலின் கடைசி ஓவரில் 4, 6, 4, 4, 6 எனப் பந்தை நாலாபுறமும் சிதறவிட்டார் போரல். வலுவான பவர்ப்ளே ஸ்கோர், மார்ஷ் – வார்னர் – ஹோப் – பண்ட் என அதிரடி வரிசை உள்ளிட்ட தரமான காரணங்கள் இருந்தும், அதை தாங்கும் மிடில் ஆர்டர் இல்லாமல் போகவே, மிகப் பெரிய டார்கெட்டை டெல்லியால் வைக்க முடியவில்லை. இருந்தும் போரலின் அதிரடியால் 175 என்ற சுமாரான டார்கெட்டை செட் செய்தது டெல்லி அணி. பிரித்வி ஷாவை ஒருபக்கம் மிஸ் செய்தார்கள் டெல்லி அணி ரசிகர்கள்.

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான் என்ற அனுபவமிக்க கூட்டணி, கலீல் வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் குவித்து பஞ்சாப்பிற்கு அட்டகாசமான தொடக்கத்தைக் கொடுத்தது. இரண்டாவது ஓவரின் 3 ஒயிடுகளால் தன்னுடைய டெல்லி அணியைச் சோதித்த இஷாந்த் சர்மா, நான்காவது ஓவரில் ஷிகர் தவானை போல்டு ஆக்கி, அவரை 22 ரன்களில் சுருட்டினார். பேர்ஸ்டோவும் அதே ஓவரில் எதிர்பாராமல் ரன் அவுட் ஆனார்.

PBKS vs DC | Sam Curran

அடுத்து இம்பாக்ட் ப்ளேயராகக் களமிறங்கிய பிரப்சிம்ரனும், ‘சுட்டிக் குழந்தை’ சாம் கரணும் பழைய ரன் ரேட்டைத் தக்க வைக்க அடுத்தடுத்து பந்துகளை பவுண்டரி லைனுக்குத் துரத்திவிட்டனர். மூத்த வீரரான வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட, அவர் வெளியேறினார். பஞ்சாப் அணி பலமான ரன்ரேட்டுடன் விளையாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தக் காயம் டெல்லி அணிக்குப் பெரும் சிக்கலாக மாறியது.

அக்சர் மற்றும் குல்தீப்பின் வருகை, அக்கூட்டணியின் ரன் ரேட்டை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தியது. 9வது ஓவரை வீசிய குல்தீப்பிடம், பிரப்சிம்ரன் வாண வேடிக்கை காட்ட முயன்று, வார்னரின் கைகளில் மாட்டிக்கொண்டார். ஆனாலும், 10 ஓவர்களில் 88 ரன் என்ற எளிய இலக்கையே கொண்டிருந்தது பஞ்சாப் அணி.

Kuldeep

டெல்லி அணிக்குச் சிக்கலாக மாறிக்கொண்டிருந்த ஜித்தேஷ், குல்தீப்பின் 12வது ஓவரில் பண்ட்டின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் அவுட் ஆனார். பழைய பன்னீர்செல்வம்தான்!

அதற்குப் பின் மூன்று ஓவர்கள் பவுண்டரிகள் இல்லாமல் பஞ்சாப் அணி போராட, குல்தீப்பின் அனுபவம் கைக்கொடுக்க, டெல்லி தலையெடுக்கத் தொடங்கியது. “விடுவேணானானு…” எனப் பந்தை வாங்கி 15வது ஒவரை வீசிய மார்ஷ், 18 ரன்களை வாரி வழங்கினார். சாம் கரண் – லிவிங்ஸ்டன் என இங்கிலீஷ் பேட்ஸ்மேன்கள் கூட்டணி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. தன் பொறுப்பான ஆட்டத்தால் 39 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் ‘சூப்பர் குழந்தை’ சாம் கரண்.

டெல்லியின் பந்துவீச்சாளர்கள் யாருமே விக்கெட்டைப் பற்றியே யோசிக்காமல் பவுண்டரிகளை வழங்கினர். தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 47 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, கலீல் பந்தில் போல்டு ஆனார். அடுத்த பந்தே ஷஷாங்க் சிங்கும் பண்ட்டிடம் கேட்ச் ஆகி வெளியேற, ஒரே பக்கமாக சென்றுக்கொண்டிருந்த போட்டி கொஞ்சம் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு பினிஷிங் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் லிவிங்ஸ்டன். 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்போடு இலக்கை 177 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

PBKS vs DC

அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு சாம் கரண் – லிவிங்ஸ்டன் கூட்டணி 42 பந்துகளுக்கு 67 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் தனது முதல் வெற்றியையும், இன்று திறக்கப்பட்ட புதிய மைதானத்தின் முதல் வெற்றியையும் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.