நகர்ப்புறங்களில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக கட்டப்பட்ட மூன்று / நான்கு கழிப்பறைகள் கொண்ட வீடுகளில் நடுத்தர குடும்பத்தினர் பலரும் வசித்து வருகிறோம். ஆனால், துவக்க காலத்தில் எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களுக்கு வாய்த்ததென்னவோ திறந்தவெளி கழிப்பிடங்களே.

1970களின் பிற்பாதியில் எஸ்டேட்டில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வீட்டிற்கு ஒன்றென, ஒவ்வொரு லயனுக்கும் மொத்தமாக ஒரே இடத்தில் பொதுவெளியில் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்தது கம்பெனி. குடியிருப்புகளை ஒட்டி போதிய இடம் இல்லாத காரணத்தாலும், சுகாதாரம் கருதியும், இக்கழிப்பறைகள் லயனிலிருந்து கொஞ்சம் தள்ளி அமைக்கப்பட்டன.

கழிப்பறைகள் கட்டப்பட்டவுடன் அவைகளைப் பராமரிக்கவும், குடியிருப்புப் பகுதிகளை சுத்தமாக வைக்கவும், ஒவ்வொரு எஸ்டேட்டிலும் அதற்கென தனியே தொழிலாளர்களை நியமித்தது கம்பெனி. தனித்தனி கழிப்பறையாக இருந்தாலும், எல்லா கழிவுகளும் ஒன்றாகவே வெளியேறும். கழிப்பறைக்கு வெளியே பொதுவில் ஒரு தண்ணீர் குழாய் இருக்கும். தொழிலாளர் குடியிருப்புக்கு அன்றாடம் தண்ணீர் திறந்து விடப்படும் நேரமான காலை 6 – 7 மற்றும் மாலை 5 –6 வரை கழிப்பறை குழாயிலும் தண்ணீர் வரும். தினமும் துப்புரவுப் பணியாளர்கள் கழிப்பறைகளையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள்.

வீட்டுக்கு ஒரு கக்கூஸ் என கட்டப்பட்டிருந்தாலும் 1970 / 1980 களில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 8 முதல் 10 பேர் வரையிலும் இருந்தார்கள். எங்கள் வீட்டில் நான்கு குழந்தைகள். அந்த நாட்களில் சில இடங்களில் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வரை தங்கியிருந்தன. எப்போது யாருக்கு கழிவறைக்குப் போகும் தேவை ஏற்படும் என்று சொல்லமுடியாது. அந்த சமயத்தில் திண்டாட்டம் தான்.

அதே நேரத்தில் கழிப்பறையில் அமரும் இடம் பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் அகலமாகவும், கழிவுகள் செல்லுமிடம் பள்ளமாகவும் இருந்தன. அதனைப் பயன்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், அவசர நேரத்திலும், சிறுவர்கள் கழிவறைக்கு வெளியே மலம் கழிப்பது வழக்கம். அப்போது நடப்பில் இருந்த எடுப்பு கக்கூஸ் முறையில், அதனையும் துப்புரவுப் பணியாளர்களே அன்றாடம் காலையில் சுத்தம் செய்வார்கள்.

இந்த அவலநிலையை மாற்றி, எஸ்டேட் அதிகாரிகள் வீட்டிலிருப்பதைப் போன்று, ஒவ்வொரு தொழிலாளி வீட்டுக்கும், வீட்டை ஒட்டி தனித்தனியே கழிவறை வேண்டுமென்று கோரிக்கை வைத்தார் எனது அம்மாவின் தாய்மாமாவான தாசன் தாத்தா. திமுக தொழிற்சங்கத் தலைவராக நீண்டகாலம் பொறுப்பு வகித்ததால், 1970 – 2000 வரையிலான காலகட்டத்தில் மாஞ்சோலையின் முகமாக வெளியில் அறியப்பட்டவர். தாசன் தலைவரின் தொடர் போராட்டத்தின் விளைவாய் 1990களின் இறுதியில் தொழிலாளர் குடியிருப்புகளில் தனித்தனியே நவீன கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்தது கம்பெனி. வீட்டிற்குப் பின்னே, தனிக்கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத எங்கள் லயன் போன்ற சில லயன்களுக்கு மட்டும், நவீனமாக்கப்பட்டாலும் கடைசி வரையிலும் கழிப்பறைகள் வெளியில் தொடர்ந்தன.

ஆரம்ப காலங்களில் யாராவது அங்கு இறந்துபோனால், எஸ்டேட்டில் எல்லா பகுதிகளுக்கும் சென்று அதனை பொதுவில் அறிவிப்பதும், இறந்தவர்களுக்கு கள்ளிக்காட்டில் குழி தோண்டுவதும் துப்புரவுப் பணியாளர்களின் பணியாக இருந்தது. தனித்தனியாக கழிவறை கட்டிக்கொடுக்க ஆரம்பித்த 1990களின் துவக்கத்தில் இந்த நிலையும் அடியோடு மாறியது. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் / உறவினர்களே துஷ்டி சொல்ல ஆரம்பித்தனர்.

கழிவறைகளை சுத்தம் செய்தபின்னர் பகல் பொழுதில் தொழிலாளர் / அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகளை பெருக்கி சுத்தப்படுத்துவர் துப்புரவுப் பணியாளர்கள். 1990களின் பிற்பகுதியில் கக்கூஸ் கழுவும் வேலை முடிவுக்கு வந்ததுடன், அவரவர் கக்கூசை அவரவரே பராமரித்துக் கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அதற்கு முன்னர் வரையிலும் மாஞ்சோலை மற்றும் ஊத்து பகுதிகளில் இல்லாத வகையில், நாலுமுக்கு எஸ்டேட்டில் மட்டும், ஒன்றாம் காடு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களுக்கும், பப்பு கங்காணி முக்கில் மலையாளிகளுக்கும், பத்தாம் காடு மற்றும் மேல் கடை முக்கில் இதர மக்களுக்கும் வீடு ஒதுக்கி வந்தது கம்பெனி. இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. எல்லா பகுதிகளிலும் எல்லா தரப்பு மக்களும் குடியேறத் துவங்கினர். துப்புரவுப் பணி பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஓரிருவர் அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் தேயிலைக்காட்டில் வேலை வாங்கும் அதிகாரம் கொண்ட கங்காணியாகவும் நியமிக்கப்பட்டனர். எவ்வித போராட்டமும், கிளர்ச்சியும் இல்லாமல் வெகு இயல்பாக நடந்தது இந்த சமூக மாற்றம். சிலர் ஜாதி / மதம் கடந்து, பெரிய அளவில் சண்டை சச்சரவு எதுவுமின்றி திருமண உறவுக்குள்ளும் சென்றனர்.

நாடெங்கிலும் உள்ளது போல எஸ்டேட்டிலும் துப்புரவுப் பணியானது மிகவும் கடினமானவே இருந்தது. மாஞ்சோலை எஸ்டேட்டில் 1982ஆம் ஆண்டு எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்த முத்து (பதிவு எண். 1451), அங்குள்ள சுண்ணாம்பு (லைம்ஸ்டோன்) டிவிஷனில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். 53 வயது நிரந்தரத் தொழிலாளியான அவர், 05.10.2004 அன்று வழக்கம் போல் தொழிலாளர் குடியிருப்பில் துப்புரவுப் பணிகளை செய்துகொண்டிருந்த போது, காலை சுமார் 10 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலிருந்த அவரது உறவினர் ஜெயச்சந்திரன் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை உடனடியாக எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

எஸ்டேட்டில் அந்த சமயத்தில் அடித்த கடும் குளிர், வேலைப்பளுவினாலான மன அழுத்தம் காரணமாகவே தனது கணவர் இறந்துபோனார் என்று சொல்லி, எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த அவரது மனைவி லட்சுமி, தனது கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்கிடக்கோரி 2005ஆம் ஆண்டில் திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் முன்பாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் பதிலுரை தாக்கல் செய்த கம்பெனி, எஸ்டேட்டில் எந்த தொழிலாளிக்கும் மன அழுத்தம் உருவாகக்கூடிய அளவில் வேலை கொடுப்பதில்லை என்றும், எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்துவரும் சூழலில், தொழிலாளர்களுக்கு மதிய உணவு இடைவேளை, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை என போதிய ஓய்வு கொடுக்கப்படுகிறது, அதனால் முத்துவின் மரணமானது இயற்கையான ஒன்று, அவரது மரணத்துக்கும் அவரது வேலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியது.

இருப்பினும் வழக்கின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைப் பரிசீலித்து, எஸ்டேட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, அந்த வேலையின் காரணமாகத்தான் முத்து இறந்து போனார் என்று தீர்ப்பிட்டதுடன், அவரது அப்போதைய தினக்கூலியான ரூபாய் 72/-ஐ அடிப்படையாகக் கொண்டு ரூபாய் 1,33,548/- ஐ இழப்பீடாக கம்பெனி வழங்க வேண்டுமென்றும், தொழிலாளர்களுக்காக கம்பெனி காப்பீடு எடுத்திருந்ததால் இழப்பீட்டினை காப்பீட்டு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்றும் 18.9.2006ல் உத்தரவிட்டார் தொழிலாளர் துணை ஆணையர். கம்பெனியின் மேற்கண்ட வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு, 2007ஆம் ஆண்டு அந்த உத்தரவுக்கு எதிராக காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆயினும், 11.03.2013 அன்று அந்த வழக்கினை தள்ளுபடி செய்து இழப்பீட்டினை உறுதி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சீருடை என்று எதுவுமில்லை. தேயிலைத் தொழிற்சாலையில் 1999 வரையிலும், பெண்களுக்கு நீல நிற சேலையும், வெள்ளை சட்டையும், ஆண்களுக்கு காக்கி வண்ண சட்டையும், கால் சட்டையும் சீருடையாக இருந்தது. 2000க்குப் பின்னர் இருபாலருக்கும் பச்சை நிற சீருடையாக மாறியது. அப்போது ஆண்களுக்கு முழுக்கால் சட்டை சீருடையாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் அப்பா போன்ற பல ஆண் தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாளில் முதல்முறையாக அப்போதுதான் முழுக்கால் சட்டை அணிய ஆரம்பித்தார்கள். எஸ்டேட்டில் அங்குள்ள மருத்துவமனை தவிர்த்து வெளியே துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஆண்களே. துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பச்சை வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. அந்த சமயத்தில், கையுறை, தொப்பி, கால் முட்டு வரை நீளமிருக்கும் ஷூ-வும் கொடுத்தது கம்பெனி.

ஒவ்வொரு லயனின் ஓரத்திலும் சிமெண்டால் உருவாக்கப்பட்ட வட்டமான பெரிய குப்பைத்தொட்டி வைத்தது கம்பெனி. பெரும்பாலும் தொழிலாளர்கள் குப்பைகளை அந்த குப்பைத்தொட்டியில் போடுவார்கள். இருப்பினும் ஆங்காங்கே சிலர் வீட்டின் பின் பகுதிகளில் உள்ள ஓடைகளில் குப்பைகளை போட்டு விடுவார்கள்.

கழிவுநீரில் அந்த குப்பைகள் பக்கத்து வீட்டிற்குப் பின்னால் வந்து கிடக்கும். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கிடையே குடுமிப்புடி சண்டையும் அவ்வப்போது எழும். அவைகளையும், தினமும் லயன்களில் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்துவிடுவர். அதனால் எஸ்டேட்டில் குயிருப்புப் பகுதிகள் எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும்.

“மனித கழிவுகளை அகற்றுவதற்கான பணியாளர்களை அமர்த்துவதையும், உலர் கழிவறைகளைக் கட்டுவதையும் (தடை செய்யும்) சட்டத்தை”, 1993 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து “கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டத்தை”, 2013 ஆம் ஆண்டிலும் இயற்றியது ஒன்றிய அரசு. ஆண்டுகள் பல கடந்தும், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இந்த இரு சட்டங்களும் இன்னமும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 330 பேர் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இறந்துபோனார்கள் என்பதே இதற்குச் சான்று. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் மட்டும் 50 பேர்.

ஆனால் அரசு அதிகாரிகளின் எவ்வித கண்காணிப்பும் இல்லாத, வனத்துக்குள் இருக்கும் எஸ்டேட் பகுதியில், அந்த சட்டங்கள் குறித்த எவ்வித அறிமுகமும் இல்லாத காலம் தொட்டே கையால் மலம் அள்ளும் பணி கைவிடப்பட்டது.

படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், இராபர்ட் சந்திர குமார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.