எல்லிஸ் பெர்ரி பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார். அவர் வெல்லாத கோப்பைகளே இல்லை எனுமளவுக்கு சாதித்தருக்கிறார். இப்போது பெங்களூர் அணிக்காக ஆடி வுமன்ஸ் பிரீமியர் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறார்.

RCB

“ஒரு முழு கேன்வாஸினையே வண்ணமயமாக்கக் கூடிய திறன் படைத்தவரை ஒரு போஸ்ட் கார்டில் `முடிந்ததை செய்’ என்று அடக்குவது போன்றதுதான் எலிஸ் பெர்ரிக்கு பெண் கிரிக்கெட்டில் வழங்கப்படும் வாய்ப்பு”, பிரபல எழுத்தாளர் ஜெஃப் லெமன், எலிஸ் பெர்ரி பற்றி ஒருமுறை கூறிய வாசகம்தான் இது. பெண் கிரிக்கெட்டிற்கான வசீகரமும், வாணிபமும் இங்கே குறைவு என்ற அவரது மனத்தாங்கலையே அவர் அப்படி வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உண்மை என்னவெனில், பெருங்காற்றை சிறு குடுவைக்குள் அடைக்க முடியாது. அது இருப்பிடத்தை உடைத்து சுற்றியுள்ள வெளியோடு தன்னை இணைத்து பரந்து விரியும். 33 வயதாகும் எலிஸ் பெர்ரியும் அதைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ElLyse Perry

தற்சமயம் ஆர்சிபி WPL-ல் (Women’s Premier League) வென்றிருக்கும் சாம்பியன் கோப்பை மட்டுமல்ல, அடுக்கி வைக்கவே அலமாரி பத்தாத அளவு கோப்பைகளும் புகழாரங்களும் அவர் வசம் உள்ளன. 6 டி20 உலகக்கோப்பைகள், 2 ஒருநாள் உலகக்கோப்பைகள், காமன்வெல்த்தில் சூடிய தங்கப்பதக்கம் என எங்கெல்லாம் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியதோ அங்கே ஒலித்த வெற்றிப்பறைகள் அத்தனையிலும் எலிஸ் பெர்ரியின் பெயரும் இணைந்தே ஒலித்து வந்துள்ளது. கேப்டனாக இல்லை என்றாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு இல்லாத தருணங்களை மைக்ரோஸ்கோப் அடியில்கூட கண்டறிந்து விட முடியாது, ஏனெனில் அப்படிப்பட்ட தருணங்களே இல்லை என்பதே நிதர்சனம்.

பாண்டிங் தலைமையில் வலம்வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆளுமைக்கும் கம்பீரத்திற்கும் பெண்பால் வடிவம் தந்தால் அது எலிஸ் பெர்ரியாகவே உருமாறும். 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் தொய்வின்றி தொடர்கிறது.

பிரமாண்டங்களாலேயே கட்டமைக்கப்பட்ட கரியர் அவருடையது. பெண்களுக்கான பிக்பேஷ் லீகில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை மிடுக்காக வழிநடத்திக் கொண்டிருப்பார், பந்துகளை வீசி விக்கெட் வாடையும் பார்ப்பார், காட்சிகள் மாறினால் அடுத்த நொடி ஆஷஸ் கிரிக்கெட்டில் அவரது ஆட்சி நடந்து கொண்டிருக்கும், இங்கிலாந்து பௌலர்களைத் துவைத்து எடுத்து 213* ரன்களைக் குவித்தும் ஆட்டமிழக்காமல் அதிரவைப்பார், பின் சற்றும் சளைக்காமல் மிட் விக்கெட்டில் நின்று பந்துகளை சரணடைய வைத்து பவுண்டரி லைன்களில் ரன் வறட்சியை நிலவவிடுவார். 13 டெஸ்ட்களில் 39 விக்கெட்டுகள் கிலோமீட்டர் கணக்கில் ஓடிய அவரது கால்கள் களவாடியவை.

Perry

டெஸ்ட் பிளேயர் என்ற கோட்டுக்குள்ளோ, டி20 என்ற டெம்ப்ளேட்டுக்குள்ளோ திணிக்க முடியாத வானம் அவருடையது. குத்துச்சண்டையின் முதல் கோல்டன் விதி, `Be Unpredictable, in Offense and Defense’ எனச் சொல்லப்படுவது உண்டு. அதாவது கணிக்கமுடியாதவராக இருத்தல் அவசியம், தாக்கும் போதும், தற்காத்துக் கொள்ளும் போதும்! எலிஸ் பெர்ரியின் ஆட்டமுறை அப்படிப்பட்டதுதான். WPL-ல் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த சிக்ஸர், ஸ்பான்சர் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதே பேட், டெஸ்ட் களத்தில் பந்துக்குப் பணிந்து போவது போல் பாவனை செய்து அதற்கே தெரியாமல் 61.86 ஆவரேஜிலும் ரன்களையும் குவித்துள்ளது. 4000 ரன்களை நெருங்கும் ஒருநாள் போட்டிக் களமும் 50.57 ஆவரேஜ் எனும் பதாகையை ஏந்திப் பிடித்து அவர் தனக்கு எத்தனை பிரியமானவர் என்பதை பதிவேற்றுகிறது.

2020-ல் `Women Of The Decade’ விருதினைத் தந்து கௌரவப்படுத்திய ஐசிசிக்கே தெரியும், இது நூற்றாண்டுக்கு ஆனது என்று.

2000-ன் தொடக்கத்தில் பேட்டிங்கில் கோலோச்சிய சார்லோட் எட்வர்ட்ஸின் சாரங்களையும், இப்போது தனக்கான சாம்ராஜ்யத்தை பௌலிங்கில் நிறுவியுள்ள சோஃபி எக்லெஸ்டோனின் சாயலையும் அவரிடம் ஒருங்கே காணலாம். அனுபவமும் துடிப்பும் ஒன்றாகச் சந்திக்கும் ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் அவர். ஆரஞ்சுக் கேப் தற்சமயம் அடித்துச் சொல்லி இருப்பதும் அந்த உண்மையைத்தான். வருடக்கணக்காக தூதுவனுக்காகக் காத்திருந்த ஆர்சிபிக்கு WPL-ல் அது எலிஸ் பெர்ரியால் சாத்தியம் ஆகியிருக்கிறது. ஒன்பது போட்டிகளில் 347 ரன்களை அதுவும் 69.4 ஆவரேஜில் குவித்திருந்தார். அதிகமான தனிப்பட்ட ஸ்கோர் எடுத்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் டாப் 12-ல் பெர்ரியின் பெயரில்லை. ஏனெனில் ஒரு போட்டியில் அல்ல, ஒவ்வொரு போட்டியிலும் அவரது இன்னிங்ஸின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பு இருந்தது‌.

Perry

`வாழ்வா, சாவா?’ என மலை உச்சியின் விளிம்பில் ஆர்சிபி தொங்கிக் கொண்டிருந்த கடைசி லீக்போட்டியில், நடப்பு சாம்பியனாக இருந்த மும்பைக்கு எதிரான அவரது ஆறு விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சேர்த்த 40 ரன்களும்தான் அடைக்கப்பட்ட எலிமினேட்டருக்கான வாயிற்கதவை உடைத்துத் திறந்தது. அதிலிருந்து இறுதிப்போட்டிக்குள் எட்டிப்பார்க்க வைத்ததும் அதே மும்பைக்கு எதிராக 50 பந்துகளில் குவிக்கப்பட்ட அவரது 66 ரன்கள்தான். இறுதிப்போட்டியிலும் கடினமான பிட்சில் ரிச்சா கோஸுடனான அவரது பார்ட்னர்ஷிப்தான் வரலாற்றுப் பெருமை மிக்க முதல் கோப்பையை ஆர்சிபிக்கு சாத்தியம் ஆக்கியுள்ளது. வெல்ல வேண்டிய மூன்று சவால்களிலும் வரிசையாக அணிக்கு தோள் கொடுத்து தூக்கிவிட்டு சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறார் எலிஸ் பெர்ரி. அதிக ரன்களை ஒரு WPL சீசனில் அடித்த வீராங்கனை என்ற பெருமையோடு, அதிக விக்கெட்டுகளை (6) ஒரு போட்டியில் எடுத்த சாதனையையும் இந்த சீசனில் எலிஸ் பெர்ரி நிகழ்த்தி இருக்கிறார்.

`Ace in the hole’ என்பது அஜந்தா மெண்டீஸை 2008-ல் இலங்கை பயன்படுத்தியதைப் போல் மறைத்து வைத்து ஒரு பேராயுதத்தை தகுந்த சமயத்தில் உபயோகிப்பது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா கடைசி மூன்று போட்டிகளில் தாங்கள் வென்றதைப் பற்றிக் குறிப்பிடும் போது, “We saved our best for the last”, என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அவர்களது பேராயுதம் அப்படி இறுதியில் வெளிப்படவில்லை. எலிஸ் பெர்ரி எனும் பெயரில் லீக் சுற்று முழுவதும் மும்பை, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலேயே கோப்பையை நோக்கி அவர்களை மறைமுகமாக எடுத்துச் சென்று கொண்டேதான் இருந்தது என்பதுதான் உண்மை. நாக்அவுட் போட்டிகள் அதனை முழுவதுமாக வெளியே கொண்டு வந்துள்ளன.

Ellyse Perry

இங்கே பெண் கிரிக்கெட்டர்கள் தங்களுக்குள் மட்டும் மோதிக் கொண்டால் போதாது, கொண்டாடப்படும்

ஆண் கிரிக்கெட்டர்கள் நிகழ்த்துவதற்கு பத்து மடங்காக சாதித்தால் மட்டுமே ரசிகர் உலகம் திரும்பியாவது பார்க்கும். எலிஸ் பெர்ரி ரசிகர் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து கரவோசை எழுப்பவும் வைத்துள்ளார்.

`Hail The King’ என்று வழக்கமாக உரக்க ஒலிக்கும் ஆர்சிபியின் ரசிகர்களின் மூளை அடுக்குகளுக்குள் தற்போது `Hail The Queen’ என எலிஸ் பெர்ரியின் பெயரும் ஓங்கிக் கேட்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.