தேர்தல் பத்திரங்களை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

‘தேர்தல் பத்திரம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்திருத்தங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. “கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் எஸ்.பி.ஐ, இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

‘தேர்தல் பத்திர  விவரங்களை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க முடியாது. 4 மாத காலம் (ஜூன் மாதம் வரை) அவசாகம் வேண்டும்’ எனக் கோரி எஸ்.பி.ஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி மனு அளித்தது. கடந்த மார்ச் 11-ம் தேதி அன்று இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, “வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் மார்ச் 12-ம் தேதி மாலைக்குள்ளேயே, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பிரதமர் மோடி – தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

அப்படி சமர்ப்பிக்காவிட்டால், வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகக் கருதி எஸ்.பி.ஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் நீதிபதிகள் கூறினர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 26 நாள்களில் இந்த தகவல்களை இணைப்பது தொடர்பாக எவ்வளவு வேலை செய்தீர்கள்? இதை ஏன் உங்கள் மனுவில் குறிப்பிடவில்லை? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலை எதையும் நாங்கள் கொடுக்கவில்லை.

ஏற்கெனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அப்படியெனில் அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன்?” என்று கேட்டார். இதை தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கியது. அந்த விவரங்களை மார்ச் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.

‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் ஒரு சில திருத்தங்களைச் செய்ய வேண்டும்’ எனக் கோரி, தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு கடந்த மார்ச் 15-ம் தேதி விசாரித்தது. 

அப்போது நீதிமன்றம், “தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள்? அவர்களது பெயர் என்ன? எந்த தேதியில் வாங்கினர்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் அந்த தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றினார்கள்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவு பிறப்பித்து இருந்தோம். எங்கள் உத்தரவு மிக தெளிவாக உள்ளது. இதில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தல் பத்திர எண்களை மட்டும் எஸ்.பி.ஐ வெளியிடாதது ஏன்?

தேர்தல் பத்திரத்தின் எண்கள்தான் நன்கொடை பெறுபவரையும், அதனை வாங்குபவரையும் இணைக்கக்கூடிய ஒன்று. அப்படி இருக்க, தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் வங்கி குறிப்பிடவில்லை? மேலும் இந்த விவகாரத்தில் எஸ்.பி.ஐ தரப்பினர் இங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை. விரைவில் முழு விவரத்தினை எஸ்.பி.ஐ வங்கி தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்பதையும் எஸ்.பி.ஐ வங்கி மார்ச் 18-ம் தேதி-விளக்கமாக அளிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.

திரௌபதி முர்மு – SCBA தலைவர் அதிஷ் அகர்வாலா

குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (SCBA) தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடந்த மார்ச் 13-ம் தேதி  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘குடியரசு தலைவர் தனது சிறப்பு  அதிகாரத்தை(ARTICLE 143) பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்க வேண்டும். அவ்வாறு கருத்து கேட்கும் வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்’ என கோரி இருக்கிறார்.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த கடிதம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் லெட்டர் பேடில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனுமதி பெறாமல் எழுதப்பட்ட இக்கடிதத்தையும் அதன் கருத்துகளையும் மறுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  

இதனை உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் பொதுச்செயலாளர் ரோஹித் பாண்டே கடந்த 13-ம் தேதி மாலையே அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கிறார். 

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) தலைவர் அதிஷ் அகர்வாலா தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AIBA) லெட்டர் பேடில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், அகர்வாலா, ‘தேர்தல் பத்திரம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்யும்  நடவடிக்கைகளைத் தொடங்குமாறு தலைமை நீதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், “நன்கொடை அளித்த போது, தன் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பதை கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் முழுமையாக அறிந்திருந்தார். நன்கொடையாளர் திட்டத்தின் கீழ் நன்கொடை அளிக்காத வேறு எந்த அரசியல் கட்சியாலும் நன்கொடையாளர் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் தொடர்புடைய திட்டத்தில் இந்த ரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது…

கார்ப்பரேட் நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் நன்கொடையின் அளவு ஆகியவற்றை வெளிப்படுத்துவதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த அதிஷ் அகர்வாலா தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி, “சக வழக்கறிஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்” என தெரிவித்தார். 

“அடிப்படை ஜனநாயகமில்லை.., ராஜினாமா செய்கிறேன்”

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்  தலைவருக்கும் அதன் செயற்குழுவிற்கும் இடையே நிலவும் மோதல்களின் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மூத்த வழக்கறிஞர் ரஞ்சி தாமஸ், கடந்த மார்ச் 15 அன்று செயற்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் அதிஷ் அகர்வாலாவுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் “தலைவரும், செயலாளரும் எடுத்த பல்வேறு முடிவுகளைப் பற்றி நான் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். முறைப்படி செயற்குழு கூட்டத்தை கூட்டாமல், மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி, செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்போல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

ஆனால், உண்மையில் அவை செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளாகும். மேற்கூறிய சூழ்நிலையில், செயற்குழுவாகப் பின்பற்ற வேண்டிய அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கத் தவறி விட்டீர்கள். வழக்கறிஞர்களின் கண்ணியத்தைப் பேணுவதில், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதால், உங்கள் தலைமையிலான செயற்குழுவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரஞ்சி தாமஸ்

புதிதாக தேர்தல் நடத்தி செயற்குழுவை தேர்ந்தெடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக ( அரசியல் உள் நோக்கத்துடன் போராடுகிறார்கள்) உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதிக்கு ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதினார். அப்போது 150-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பொதுக்குழுவை கூட்டி SCBA தலைவரை நீக்க வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.