“நான் கவர்ஸில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்களிடம் எப்படியாவது இந்தப் போட்டியை வென்றுவிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன்.”

RCB Vs MI

உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான முதல் போட்டியை கடைசி பந்து வரை சென்று த்ரில்லாக வென்ற சமயத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசியவை இவை. அந்த முதல் போட்டி என்றில்லை. இந்த சீசன் முழுவதும் பல போட்டிகளில் ஸ்மிருதி பிரார்த்தனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பல போட்டிகளை த்ரில் கூட்டி கடைசி வரை சென்றுதான் வென்றார்கள். நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியிலும் அப்படித்தான் வென்றிருக்கிறார்கள். நடப்பு சாம்பியனான மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றிருக்கிறார்கள்.

ஆண்கள் பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் முன்பே பெண்கள் அணி வெல்லப்போகிறது. ‘ஈ சாலா கப் நமதே’ என்பதை நிஜமாக்கப்போகிறது என இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

மும்பை அணி வலுவான அணி. கடந்த சீசனின் சாம்பியன். எப்படி ஒப்பிட்டாலும் பெங்களுருவைவிட வலிமைமிக்க அணி. அப்படி ஓர் அணியை பெங்களூர் அணி வீழ்த்தியிருக்கிறது. காரணம், இந்த முறை நெருக்கடியான அழுத்தமிக்க சூழல்களில் அந்த அணியின் முக்கிய வீராங்கனைகள் பொறுப்பைச் சுமந்து ஆடிக்கொடுத்திருக்கிறார்கள்.

Ellyse Perry

எலிமினேட்டர் போட்டியில் கூட பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கையில் தடுமாறவே செய்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஓப்பனர்கள் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன் என இருவரும் அவுட் ஆகியிருந்தனர். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பெங்களூர் அணி இழந்திருந்தது. ஆட்டம் முழுவதும் மும்பை அணியின் கையிலேயே இருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் எல்லிஸ் பெர்ரி ஆட்டத்தை மாற்றத் தொடங்கினார். நிலைத்து நின்று ஆடி 50 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். இதன்மூலம் பெங்களூர் அணியும் 135 ரன்களை எட்டியது. ஓரளவுக்குப் போட்டிப் போடும் வகையில் இந்த ஸ்கோரை எட்டியதால்தான் மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முடிந்தது.

மும்பை அணிக்கு எதிராக வென்றே ஆக வேண்டிய கடைசி லீக் போட்டியிலும் எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அதேமாதிரி, த்ரில்லாக சென்ற முதல் போட்டியில் ஆஷா ஷோபனா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.

RCB

இக்கட்டான சமயத்தில் அணியின் முக்கியமான வீராங்கனைகள் முன்நின்று செயல்படுவதுதான் அந்த அணியின் வெற்றி ரகசியமாக இருக்கிறது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை பெங்களூர் எதிர்கொள்ளவிருக்கிறது. `ஈ சாலா கப் நமதே’ நிஜமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.