ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பு வரை அங்கு நிரந்த குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். இருப்பினும் அரசாங்கம் தரப்பில் தொழில் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் 99 வருடங்கள் வரை நிலங்களை குத்தகைக்கு விடமுடிந்தது.

இந்த நிலையில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குப் பிறகு, ஜாமம்-காஷ்மீரில் இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் நிலம் வாங்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் நிலம் வாங்குவதில்லை. சில வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மற்ற மாநிலங்களின் அலுவலகங்கள் காஷ்மீரில் இல்லை. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாவிற்கு வரும் பயணிகளுக்கு உதவ மற்ற மாநிலங்கள் காஷ்மீரில் தங்களது அலுவலங்களைத் திறக்க முயன்றுவருகின்றன.

ஜம்மு – காஷ்மீர்

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கு ஆளுநர் மனோஜ் சின்ஹாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது காஷ்மீரில் `மகாராஷ்டிரா பவன்’ கட்டுவது குறித்து ஷிண்டே ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா பட்ஜெட் உரையிலும், ஸ்ரீநகர் மற்றும் அயோத்தியில் `மகாராஷ்டிரா சதன்’ கட்டப்படும் என்று நிதியமைச்சர் அஜித் பவார் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக பட்ஜெட்டில் 77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும், குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கவும் உதவும் நோக்கத்தில் மகாராஷ்டிரா பவன் (அரசு விருந்தினர் இல்லம்) கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டத்திலும், ஜம்மு காஷ்மீரில் மகாராஷ்டிரா அரசின் விருந்தினர் இல்லம் அல்லது மகாராஷ்டிரா பவன் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஸ்ரீநகரில் விமான நிலையம் அருகில் அதை அமைக்க 2.5 ஏக்கர் நிலத்தை 8.16 கோடி ரூபாய்க்கு வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா அரசுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக காஷ்மீர் நிர்வாகம் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் தங்களது விருந்தினர் மாளிகையை காஷ்மீரில் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.