தமிழக அரசு, தகுதி வரையறைக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ரூ.1000 ஊக்கத்தொகையை, ‘பிச்சை’ என்று பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பேசியிருப்பது, கடுமையான கண்டனங்களுக்கு உரியது. ‘இந்த குஷ்பு பயப்படமாட்டா’ என்று அடிக்கடி பன்ச் பேசிக்கொள்ளும் அவருக்கு, ஊக்கத்தொகை திட்டம் பற்றி கொஞ்சம் கற்பிக்க வேண்டியிருக்கிறது. இதுவரையிலான அவரது அரசியல் பயணம் பற்றி நிறைய நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நிதானமாகப் படிப்பார் என்று நம்புவோம்.

தி.மு.கழகத்தில் பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக், ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக போலீஸார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க அரசு துணை போகிறது என்று குற்றம்சாட்டி, பா.ஜ.க மகளிரணி சார்பில் உங்கள் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தினீர்கள். அப்போது நீங்கள், ’தி.மு.க அரசு தாய்மார்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை பிச்சை போட்டால்…. அவர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா?’ என்று பேசியிருப்பது, அனுமதிக்க முடியாதது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட உதவி மையம்.

இரு கட்சிகளுக்கு இடையேயான காரசார விவாதங்கள் முதல் கொச்சை பேச்சுகள் வரை மக்கள் எல்லாம் பார்த்துள்ளோம், பார்த்து வருகிறோம். ஆனால், இதில் மாநிலத்தின் பெண்களை ‘பிச்சை’ எடுப்பவர்களாக உள்நுழைத்துப் பேசுவது, அரசியல் நாகரிகமும் அல்ல, அடிப்படை நாகரிகமும் அல்ல. பொன்முடி கட்டணமில்லா பேருந்தை ‘ஓசி’ என்று சொன்னபோது கடுமையாக குரல்கொடுத்த அதே சமூக அக்கறையுடனும், கோபத்துடனும், உங்களுக்கான கண்டனங்களையும் அவள் குரலாகப் பதிவு செய்கிறோம் திருமிகு குஷ்பு.

உரிமைத்தொகை பற்றி ‘பிச்சை’ என்று குறிப்பிட்ட உங்களுக்கு, அதுகுறித்த ஒரு சமூக அரசியல் வகுப்பு. பெண்களின் குடும்ப உழைப்பை அங்கீகரிக்க தமிழக அரசு தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், வீட்டுக்காக ஊதியமற்ற உழைப்பை வழங்கும் பெண்களுக்கு பொருளாதார ஆதரவு தரும் விதமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்குகிறது. பெண்களின் சுயமரியாதைக்கும், சார்பின்மைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் மிக முக்கியமான திட்டமான இது, தமிழகத்தில் 2023-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டத்தை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.

சமீபத்தில் டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

குஷ்புவுக்கு, இந்த மூன்று அரசுகளின் பெண்களுக்கான நலத்தொகை திட்டத்தைவிட முக்கியமாகத் தெரியப்படுத்த வேண்டிய, மற்றொரு மாநில அரசின் நலத்தொகை திட்டமும் உள்ளது. அது, அவர் சார்ந்த பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச அரசு. ம.பியில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம், அன்றைய முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க அரசு, ’லாட்லி பெஹ்னா யோஜனா’ என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. பெண்களின் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார சுயசார்பை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 23 வயதுக்கு மேற்பட்ட 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1000 நலத்தொகை வழங்கப்பட்டு, பின்னர் அது ரூ.1250 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. விரைவில் இன்னும் உயர்த்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியான மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட, நலக்கொள்கைகளில் கைகோத்து நிற்பதே நல் அரசியல். ஆனால், நீங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஓவர் விசுவாசம் காட்ட நினைத்து, பெண்களுக்கு எதிராக நிறுத்தப்படும் ஒரு பெண்ணாக இருப்பதைக்கூட உணராத அளவுக்கா அறியாமையில் உள்ளீர்கள்? தாங்கள் சார்ந்துள்ள கட்சி தங்களுக்கு வழங்கும் பணம், பதவி உள்ளிட்ட ஆதாயங்களுக்காக, அவர்களது அஜண்டாவுக்கு உழைக்கும் உங்களுக்கு, உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயனடையும் சுமார் 1.065 கோடி தமிழகப் பெண்களை ’பிச்சை’ எடுப்பதாகச் சொல்ல என்ன தகுதி உள்ளது?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

போதைப் பொருள் கடத்தலை கண்டிப்பது, டாஸ்மாக் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்வது உள்ளிட்டவற்றை தி.மு.க அரசுக்கு வலியுறுத்த எத்தனையோ வார்த்தைகள், வாதங்கள் இருக்கும்போது, பெண்களை தொடர்புபடுத்தி ’பிச்சை’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்தது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருக்கு உரிய செயலா?

நீங்கள் உங்கள் அநாகரிக வார்த்தையால் தரம் தாழ்ந்தது இது முதல் முறையல்ல. அதற்கு, உங்கள் அரசியல் வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கிப் பார்போம்.

2005-ம் ஆண்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் குறித்து நீங்கள் சொன்ன கருத்துகள், ‘தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கேவலமாகப் பேசுகிறார்’ என்று திரிக்கப்பட்டுப் பரப்பப்பட்டபோது, உங்களுக்காக நின்றவர்கள் பலர். பின்னர், 2010-ல் தி.மு.கவில் இணைந்த நீங்கள், 2014-ல் காங்கிரஸில் இணைந்து, 2020-ல் பா.ஜ.கவில் இணைந்தீர்கள்.

திருமாவளவன்

அரசியல் தேர்வு, கட்சி மாறுதல் எல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம், உரிமை. ஆனால், ’கற்பு’ சர்ச்சையில் ’திரிக்கப்பட்ட’ வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவராக நீங்கள் நின்றபோது உங்களுக்கு என்ன நடந்ததோ, அதையே பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்தபோது, தேர்ந்த அரசியல்வாதி ஆகி இருந்தீர்கள். 2020-ம் ஆண்டு, ‘மனுவில் பெண்கள் பற்றி இவ்வாறு எல்லாம் இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு, ‘திருமாவளவன் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்’ என்று பரப்பப்பட்டது. நீங்கள் திருமாவளவனை, ‘பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா?’ என்று கேட்டீர்கள். திருமாவளவன், தன் கருத்துகளாகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதற்கும், ‘மனுவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது’ என்று சொல்வதற்குமான வித்தியாசம் அறியாமல் இல்லை நீங்கள். ’கற்பு’ சர்ச்சையால் எந்த ’சித்திரிப்பு, கத்தரிப்பால்’ நீங்கள் பாதிக்கப்பட்டீர்களோ, அதையே நீங்களும் செய்தது அதிர்ச்சி.

பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சைகளில், கேடயமாக ஒரு பெண்ணையே நிற்க வைக்கும் அரசியல் நரித்தனத்துக்கு ஏற்ற நபராக அப்போது ’புரொமோஷன்’ பெற்றீர்கள்.

அரசியல் களத்துக்கு வரும் பெண்கள் அரிது. அப்படி வருபவர்களும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் எதிர் நிலைப்பாடு எடுப்பது, அவலம். அதைவிட கொடுமை, பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய பிரச்னைகளில் எல்லாம் குரல் கொடுக்காமல் இருப்பது. குறிப்பாக, தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரான உங்களது மௌனம்.

மணிப்பூர் வன்முறை

2023-ம் ஆண்டு, மணிப்பூரில் பெண்கள் சகிக்க முடியாத பாலியல் வன்முறைக்கு உண்டாக்கப்பட்டபோது, தேசிய பெண்கள் ஆணையத்தில் நீங்கள் வகிக்கும் பொறுப்புக்காகவாவது, பெயருக்காககூட கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும், அந்தப் பிரச்னை குறித்த பிரதமர் மோடியின் மௌனத்தையும், ‘பிரதமர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கத் தேவையில்லை’ என்று வக்காலத்து வாங்கினீர்கள்.

2023 நவம்பரில், நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், எக்ஸ் தளத்தில், ’மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டபோது ஏன் குரல் கொடுக்கவில்லை?’ என்ற கேள்வியை அநாகரிக வார்த்தைகளில் கேட்டிருந்த பதிவருக்கு, நீங்கள் கொடுத்த பதிலிலும் அநாகரிகமான, ஆதிக்கமான வார்த்தைப் பிரயோகமே இருந்தது. ’உங்களைப் போல ’சேரி’ மொழியில் என்னால் பேச முடியாது’ என்று நீங்கள் கூறிய வார்த்தைகளில் இருந்த சாதிய ஆதிக்கம் விமர்சனத்துக்கு உள்ளானபோது, தவற்றை உணர்ந்தோ, அல்லது பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல பெயருக்காகவோகூட மன்னிப்புக் கேட்டிருந்தால், குறைந்தபட்ச டேமேஜ் கன்ட்ரோல் ஆகியிருக்கும். ஆனால், ‘ஃப்ரெஞ்ச் மொழியில் சேரி என்றால் அன்பானவர் என்று பொருள்’ என்று நீங்கள் கொடுத்த விளக்கம்… உங்கள் சுயத்தை இன்னும் மோசமாக வெளிப்பட வைத்தது.

குஷ்பு

அதைப் பற்றிய கவலைகூட உங்களுக்கு இல்லை. ‘நான் என் தவற்றை ஒப்புக்கொள்ள மாட்டேன், ஒரு சமுதாயத்தையே காயப்படுத்தும்படி பேசியிருந்தாலும் அதற்காக மன்னிப்பைக் கேட்க மாட்டேன்’ என்பது, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல தைரியத்தின் அம்சம் அல்ல குஷ்பு. அதன் பெயர், அரசியல் ஆதிக்கத் திமிர்.

‘சேரி’, ‘பிச்சை’ என நாவடக்கம் இல்லாத உங்களது வார்த்தைகளுக்கு இதுவரை நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு, சமீபத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள தி.மு.க-வினருக்கான உங்கள் வீடியோவில், ‘நேருக்கு நேரா பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கு’, ‘குஷ்பு பேசினா அவ்வளவு பயமா? குஷ்பு உண்மையை பேசுவா, தைரியமா பேசுவா’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், உங்களது ‘பிச்சை’ என்ற வார்த்தையால் தமிழகப் பெண்களின் சுயமரியாதையை அவமானப்படுத்தியதற்காக அவர்களிடம் வருத்தம், மன்னிப்புக் கேட்க வேண்டிய நாகரிகமோ, சுயஉணர்தலோ, பண்போ எதுவுமே உங்களிடம் கடைசிவரை வெளிப்படவில்லை. அதற்குப் பெயர் உங்கள் ’ஆட்டிட்யூட்’ அல்ல குஷ்பு… பேதைமை. ஆம்… அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.

குஷ்பு

பொதுவாக, பெண்களை முன்வைத்து உருவாகும் இதுபோன்ற சர்ச்சைகளில், சபைக்காககூட மன்னிப்புக் கேட்காத அரசியல்வாதிகளையும், அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லாத கட்சித் தலைமைகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது, நீங்களும் அந்த ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாகவே நிற்கிறீர்கள் குஷ்பு.

ஆழ்ந்த பரிதாபங்கள்!

– அவள்

#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்’. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.