தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் சின்னத்தாய். தி.மு.க சேர்மனான இவர், இலஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவரும் செயல் அலுவலர் சுதா என்பவரை தரக்குறைவாக பேசும் வீடியோ, சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் பரவியது. இது குறித்து பேரூராட்சி அலுவலர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “செயல் அலுவலர் சுதா கடந்த வியாழன் அன்றுதான் செங்கோட்டை புதூர் பேரூராட்சியிலிருந்து பணியிட மாறுதலாகி இலஞ்சி பேரூராட்சிக்கு வந்தார். இந்தநிலையில் இலஞ்சி பேரூராட்சியில் முன்னாள் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் செயல் அலுவலர் சுதாவை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக பேசிவிட்டு சென்றனர்.

சேர்-ஐ எடுக்கும் காட்சி

இதைக்கேள்விப்பட்ட பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், ‘தலைவர் என்கிற முறையில் என்னை பார்க்க வருபவர்களிடத்தில் என் அனுமதியில்லாமல் எப்படி பேசலாம்’ எனக்கூறி செயல் அலுவலரிடம் கடுமையாக பேசினார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அலுவலகத்தில் இருந்த சேர்-ஐ எடுத்து அடிக்க பாய்ந்ததோடு, மட்டுமல்லாமல் செயல் அலுவலரை ஒருமையில் பேசியதும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பேரூராட்சி தலைவரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பியதன் பேரில்தான் இந்த விஷயம் வெளியே தெரிந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

ஆவேசத்தில்…

செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் என இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதன்பேரில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் என இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து பேரூராட்சி தலைவர் சின்னத்தாயிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ‘தலைவர் சின்னத்தாய் மருத்துவ காரணங்களுக்காக வெளியே சென்றிருக்கிறார். பேரூராட்சியில் நடந்த குழப்பம் சுமுகமாக முடிக்கப்பட்டு விட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் எந்த பிரச்னையும் இல்லை” என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.