தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் வாழை ஏல மையத்திற்கு 8 அடி உயரம் கொண்ட கற்பூரவள்ளி ரக வாழைத்தாரை (Banana) விவசாயி ஒருவர் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். தாரின் உயரத்தை பார்த்த பலரும் ஆச்சர்யமாகி அதன் அருகே நின்று போட்டோ எடுத்து கொண்ட சுவராஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது.

வாழை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு கடந்து செல்லக்கூடிய பகுதி. இதனால் காவிரிப்படுகை என இப்பகுதி அழைக்கப்படுகிறது. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக வாழை அதிகளவில் பயிரிடுகின்றனர். அதில் பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, செவ்வாழை, மொந்தன், பச்சை நாடன் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு விளையும் வாழைத்தார் மற்றும் வாழை இலை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இப்பகுதியில் விளையும் வாழைத்தார்கள் திருக்காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஏல மையத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது வாழை விவசாயிகளின் வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை விவசாயி ஒருவர் ஏல மையத்திற்கு 8 அடி உயரம் கொண்ட வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன் உயரத்தை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்தனர். அந்த வாழைத்தார் ரூ. 500 க்கு விலை போனதாக ஏல மையத்தில் தெரிவித்துள்ளனர்.

எட்டு அடி உயரம் கொண்ட வாழைத்தார்

இது குறித்து மஹாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வாழை விவசாயி சுந்தரத்திடம் பேசினோம், “2010-ம் ஆண்டு திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினரால் உதயம் என்ற வாழை ரகம் அறிமுகப்படுத்தபட்டது. மேம்படுத்தப்பட்ட கற்பூரவள்ளி ரகம் என்றே இதனை குறிப்பிட்டனர். வாழை விவசாயிகளிடம் அந்த உதயம் ரக வாழைக்கன்றை கொடுத்து ஊன்ற சொன்னார்கள். அப்போது நானும் ஆர்வமுடன் அந்த ரகத்தை ஊன்றினேன். அந்த வாழை எட்டு அடி உயரம் வரை தார் போட்டது.

அந்த சமயத்தில் என்னுடய வாழைத்தோட்டத்தில் விளைந்த 8 அடி உயரம் கொண்ட மூன்று வாழைத்தார்களை திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு எடுத்து சென்றேன். இவ்வளவு உயரம் கொண்ட வாழைத்தாரை இது வரை நாங்கள் பார்த்ததில்லை என பலரும் அதிசயமடைந்தனர். அதனுடைய காய் நீட்டமாகவும், திரட்சியாகவும் இருக்கும். அந்த சமயத்தில் ஊன்றப்பட்ட கன்றுகளில் தற்போது வரை ஐம்பது வாழை மரங்கள் வாழையடி வாழையாக இருந்து பலன் கொடுத்து கொண்டிருக்கிறது.

உதயம் ரகம் வாழை

இது போல் இப்பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் தோட்டத்தில் எஞ்சியிருக்கும் வாழையில் 8 அடி உயரம் கொண்ட வாழைத்தார் போடுகிறது. அது விற்பனைக்கு எடுத்து செல்லும் போது அது என்ன ரகம் என்று விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தெரிவதில்லை. இந்நிலையில் உதயம் ரகம் குறித்து வாழை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதை என்னுடைய கோரிக்கையாகவும் வைத்திருக்கிறேன்” என்றார்.

தொடர்புக்கு,
இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம்,
தோகமலை ரோடு,
தாயனூர் (அஞ்சல்)
திருச்சிராப்பள்ளி – 620102
தொலைபேசி எண்: 0431 2618125

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.