பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குச் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார் என்று ஒரு வதந்தியானது செய்தி போலவே பரவிய மார்ச் 11 திங்கள் கிழமை மாலை நேரம். மோடி அப்படி உரையாற்றவில்லை. ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திவிட்டதாகச் செய்தி வெளியானது.

கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த கையோடு, அதே ஆண்டு டிசம்பரில் மோடி அரசு நாடாளுமன்றத்தில் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அதை அமல் செய்ய முடியாதபடி கடுமையான போராட்டங்கள் வெடித்தன.

அதற்கு முன்பு இருந்த குடியுரிமைச் சட்டம், 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் சட்டவிரோதக் குடியேற்றம் தடை செய்யப்பட்டிருந்தது. பாஸ்போர்ட், விசா போன்ற தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ஒருவர் இந்தியாவுக்குள் நுழைந்தாலோ, அல்லது விசாவில் குறித்திருந்த காலக்கெடு தாண்டியும் இந்தியாவில் இருந்தாலோ, அந்த வெளிநாட்டவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். அவருக்கு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் தகுதி கிடையாது.

Constitution of India

அதே சமயத்தில், சட்டப்படி இந்தியாவில் குடியேறி, குறைந்தது 11 ஆண்டுகள் வசித்த ஒருவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். தகுந்த ஆவணங்கள் இருந்தால் அவருக்குக் குடியுரிமை வழங்கப்படும். இதிலும்கூட, ‘குறிப்பிட்ட மதத்தினருக்கே குடியுரிமை’ என்று விதி வகுக்கப்படவில்லை. ஆனால், பா.ஜ.க அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இந்தியாவுக்குள் அகதிகளாக நுழையும் இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறித்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்கப்படும். அவர்கள் 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி, குறைந்தது ஐந்து ஆண்டுகள் இங்கு வசித்திருந்தாலே போதுமானது. அவர்கள் முறையான ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சட்டவிரோதமாகக் குடியேறியதாக அவர்கள்மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுவும் இனி ரத்தாகி விடும்.

இப்படி இஸ்லாமியர்களை ஒதுக்கிவிட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்ததைப் பலரும் எதிர்த்தனர். ஆனால் மத்திய அரசு, ‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். மற்ற மதத்தினர் சிறுபான்மையினராக இருக்கின்றனர். அவர்களுக்கு அடக்குமுறை நிகழ்கிறது. அதனால்தான் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது’ என்று இதை நியாயப்படுத்தியது. கூடவே, சர்ச்சைக்குரிய ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்’ அமல்படுத்த முடிவெடுத்தது. இந்தியாவில் வசிப்பவர்களையே தங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்கும் நடைமுறை இது. அஸ்ஸாமில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறித்த இந்தப் பதிவேட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.

எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் சட்டத்தை 2020 ஜனவரியில் அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. போராட்டங்கள் தீவிரமானதாலும், கொரோனா வந்ததாலும் இது அப்போது அமலாகவில்லை. எந்த ஒரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தபிறகு ஆறு மாத காலத்துக்குள், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும். அல்லது நாடாளுமன்ற துணை விதிகள் கமிட்டியில் அந்தச் சட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு ஒப்புதல் வாங்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆறு மாதம் முடியும்போதும் இப்படி காலக்கெடுவை நீட்டித்து ஒப்புதல் வாங்கிக்கொண்டே இருந்தது. மார்ச் 11-ம் தேதி முறைப்படி குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளை வெளியிட்டதால், அன்றுமுதல் இது அமலுக்கு வந்துவிட்டது.

CAA-க்கு எதிரான போராட்டங்கள்

எனினும், இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் 13 மாவட்டங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்ட நடைமுறைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அமலாகிவிட்டன. குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த 13 மாவட்டங்கள் இருக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறிப்பிடும் மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்கள் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை தரும் அதிகாரம் இதன்மூலம் மாவட்ட கலெக்டர்களுக்குத் தரப்பட்டது. இங்கெல்லாம் 1,414 பேருக்கு இதன்மூலம் குடியுரிமை தரப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் சில பகுதிகளில் அமல்படுத்தப்படாது என்று அரசே அறிவித்திருக்கிறது. பழங்குடிகளால் நிர்வாகம் செய்யப்படும் அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் மலைப்பகுதிகளில் வேறு யாருக்கும் நிலங்கள் வாங்க உரிமை இல்லை. இங்கெல்லாம் பழங்குடிகளைத் தாண்டி, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வசித்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை பெறுவதற்குத் தகுதி கிடையாது. இதேபோல அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், லட்சத்தீவுகள் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு இந்தியர்களே சென்று வருவது என்றாலும், இன்னர் லைன் பர்மிட் என்ற அனுமதி வாங்க வேண்டும்.

வெளிநாடு போக விசா வாங்குவது போல, பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளுக்கு மற்றவர்கள் சென்று வர இப்படி பர்மிட் வாங்கும் நடைமுறை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருக்கிறது. இப்படி பர்மிட் வாங்கினால் மட்டுமே செல்ல முடியும் என்றிருக்கும் பகுதிகளிலும் வெளிநாட்டினர் குடியேறி இந்தியக் குடியுரிமை வாங்க முடியாது. இதன்மூலம் இந்தப் பகுதிகள் எல்லாவற்றுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோதே அதைக் கடுமையாக எதிர்த்தும், திரும்பப் பெறக் கோரியும் பல மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்போதும்கூட, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால், அப்படி எந்த ஒரு மாநிலமும் தடுக்க முடியாது என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணைப்படி ‘குடியுரிமை’ என்ற விஷயம் மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வருகிறது. குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது. அந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் தவிர்க்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை’’ என்கிறார்கள் அரசியல் சட்ட நிபுணர்கள்.

எனினும், ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் சட்டப்படி செல்லுபடியாகக்கூடியதா’ என்பது பற்றிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சட்டம் வந்த 2020-ம் ஆண்டே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்த வழக்கைப் போட்டது. அதன்பின் ஓவைசி, மஹுவா மொய்த்ரா, ஜெய்ராம் ரமேஷ் போன்ற அரசியல்வாதிகளும் வழக்கு தொடுத்தனர். தி.மு.க., காங்கிரஸ், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு போட்டன. இப்படி போடப்பட்ட சுமார் 200 வழக்குகளை ஒன்றாக்கி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. 2022 அக்டோபரில் அப்போதைய தலைமை நீதிபதி லலித் ஓய்வுபெற்ற பிறகு இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரிக்கப்படவில்லை. இப்போது இது உயிர் பெறக்கூடும்.

இரண்டு வாதங்கள் இந்த வழக்குகளில் முக்கியமாக வைக்கப்படுகின்றன. ‘மத அடிப்படையில் குடியுரிமையைத் தருவதும் நிராகரிப்பதும், அரசியல் சட்டத்தின் பிரிவு 14 சொல்லும் அடிப்படை உரிமையை மீறுவது. எல்லோரும் சமம் என்ற கருத்துக்கு எதிரானது. இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் சமமாக பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, குறிப்பிட்ட சிலரை மதரீதியாகப் பாகுபடுத்தி ஒதுக்கக்கூடாது’ என்பது ஒரு வாதம். அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இஸ்லாமியர்களையே வஞ்சிக்கிறது என்பதையும் இந்த வாதத்திற்கு ஆதாரமாக வைக்கிறார்கள்.

அஸ்ஸாம் என்.ஆர்.சி

இரண்டாவதாக, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை தரும்போது, இலங்கையில் சிறுபான்மையினர் என்பதால் பாதிக்கப்பட்ட இந்துக்களான இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை தரவில்லை என்ற கேள்வி. மியான்மரிலிருந்து தாக்குதலுக்கு ஆளாகி தப்பிவந்த ரோஹின்யா முஸ்லிம்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி உயிர் பிழைத்துவந்த அஹமதியா மற்றும் ஹஸாரா போன்ற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினருக்கு ஏன் இந்த சலுகை தரவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.  

உச்ச நீதிமன்றம் இந்த வாதங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் எதிர்காலமும் இருக்கிறது, தேசத்தின் எதிர்காலமும் இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.