நாலுமுக்கு எஸ்டேட்- 627427 ….. நாம் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்துவிட்டதன் அறிகுறியாய், இரண்டு அடிக்கோடுகள் தோன்றும் வரையிலும் பரபரப்பாகி விடுகிறோம் பல சமயங்களில்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும், சென்றுசேர சில நாட்கள் பிடிக்கும் கடிதப்போக்குவரத்து மட்டுமே சாத்தியமாகியிருந்தன மாஞ்சோலை பகுதியில். எஸ்டேட் வாசிகளுக்கு அங்கிருந்து வெளியே தகவல் அனுப்புவதற்கும், வெளியிலிருந்து தகவல் பெறுவதற்கும் 2000க்கு முன்பு வரையிலும் சாத்தியமான ஒரே இருவழி தொடர்பு சாதனம் தபால் மட்டுமே. அடர் வனத்துக்குள் இருப்பதால், நகர்புறங்கள் / கிராமப்புறங்களைப் போல எளிதில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இயலாது. குடும்பம் தொடர்பாக மட்டுமின்றி, அரசியல் / உலக செய்திகளும் தாமதமாகவே வந்து சேர்வதன் விளைவாய், எவ்வித பரபரப்புக்கும் இடமில்லாதது எஸ்டேட் வாழ்வு.

எஸ்டேட்டின் துவக்க காலத்தில், கல்லிடைக்குறிச்சியிலிருந்து தபால்களை சேகரித்து மலைக்கு கொண்டுவந்துள்ளனர். கல்லிடைக்கு அருகிலிருக்கும் தெற்கு பாப்பான்குளத்தில் இருந்து மாஞ்சோலைக்கு கழுதையின் மேல் ஏற்றி தபால்களை கொண்டுவந்து சேர்க்கும் பணியில் நியமிக்கப்பட்டவர் இராமையா தேவர். நாளடைவில் குதிரைவண்டிக்கு மாறிய அவர் மாஞ்சோலையில் தங்கியிருந்து தபால் கொடுக்கும் வேலையைப் பார்த்தார். அவருடன் வந்த அவரது வாரிசுகள் நான்கு தலைமுறையாக அங்கு தேயிலை பறிக்கும் வேலைசெய்து வருகின்றனர்.

மாஞ்சோலை வரைக்கும் பேருந்து வருவதற்கு ஆரம்பித்த நாள் வரையிலும் கழுதை / குதிரையின் மீது வைத்துதான் தபால் வந்துள்ளது. மாஞ்சோலைக்கு வந்திருக்கும் தபால்களை, ஊத்து எஸ்டேட்டைச் சேர்ந்த சொல்லமாடனும், அவர் காலத்திற்குப் பின்னர் பாலார் எனும் தொழிலாளியும் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் நடந்துசென்று இதர எஸ்டேட் பகுதிகளுக்குக் கொண்டுசேர்த்தனர். நாலுமுக்கில் கேண்டீனில் இருக்கும் ஒரு மரப்பெட்டியில் தபால்களை போட்டுவிடுவார்கள். தபால் வருவதற்குச் சாத்தியமிருக்கும் ஒவ்வொருவரும் நமக்கு தபால் இருக்கிறதா என அங்கு வந்து உறுதிசெய்து கொள்வார்கள்.

தபால் நிலையம் 1960களின் பிற்பகுதியில் மாஞ்சோலைக்கும், 1971ஆம் ஆண்டில் நாலுமுக்குக்கும் வந்தது. பின்கோட் 627420 மாஞ்சோலைக்கும், 627427 நாலுமுக்குக்கும் கொடுக்கப்பட்டது. காக்காச்சிக்கு மாஞ்சோலையில் இருந்தும், ஊத்து, குதிரைவெட்டிக்கு நாலுமுக்கில் இருந்தும் எஸ்டேட் லாரியில் தபால்களை பிரித்து கொடுத்துவிடுவார்கள். தபால் நிலையம் இயங்கிட எஸ்டேட் கடை ஒன்றினை ஒதுக்கிக் கொடுத்தது கம்பெனி. 2000ன் துவக்கத்தில் ஊத்து எஸ்டேட்டிலும் தபால் நிலையம் வந்தது.

1971ஆம் ஆண்டு நாலுமுக்கு தபால் நிலையத்தில் வேலைக்கு ஆள் எடுத்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்த எஸ்டேட் வாசிகள் எல்லோரும் மனு செய்தனர். அந்த சமயத்தில் பழைய பத்தாம் வகுப்பு முடித்திருந்த அம்மாவும் விண்ணப்பித்திருந்தார். அதற்காக அம்பை சென்று சித்ரா ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படம் இன்றளவும் வீட்டில் உள்ளது. அப்போது தபால் நிலைய ஊழியருக்கு மாத ஊதியம் 2 ரூபாயாக இருக்க, எஸ்டேட்டில் தினக்கூலியாக ரூ.2.5௦/- கொடுக்கப்பட்டு வந்தது. குறைந்த சம்பளத்தில் என் மகள் வேலைபார்ப்பதா என்று சொல்லி, அம்மாவின் அப்பா ஆறுமுகம் தாத்தா அந்த வேலையை வேண்டாமென சொல்லிவிட்டார். அவ்வளவுதான் கூலி வேலைக்கும், அரசு வேலைக்கும் வேறுபாடு தெரியாத எஸ்டேட் மக்களின் உலக அனுபவம். கடைசி வரையிலும் எஸ்டேட்டில் கூலி வேலைபார்த்து ஓய்வுபெற்றார் அம்மா.

எஸ்டேட்டில் பெரும்பாலும் எல்லோரும் 5ஆம் வகுப்பு வரை படித்துவிடுவோம். 6ஆம் வகுப்பு படிக்க எஸ்டேட்டை விட்டு வெளியே பலரும் செல்வோம். பள்ளி விடுமுறையில் எஸ்டேட் வந்துவிட்டு திரும்பச் சென்றபிறகு உடனே வீட்டுக்கு கடிதம் எழுதுவர் பலர். விடுதியில் இருக்கும் “பெட்டிச் சாவியை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், உடனே அனுப்பி வைக்கவும்” என கடிதம் எழுதாதவர்களின் எண்ணிக்கை சொற்பமே.

1௦ வயதிலேயே எஸ்டேட்டுக்கு வெளியே படிக்கச்சென்று விடுதியில் தங்கியிருக்க ஆரம்பித்து விடுவதாலும், பள்ளிக்கூடங்கள் நெடுந்தொலைவில் இருக்கும் காரணத்தாலும், எங்களுக்கும் பெற்றோருக்கும் இருக்கும் ஒரே இணைப்புப் பாலம் கடிதப் போக்குவரத்து மட்டுமே. செலவும் குறைவு. வாரந்தோறும் தவறாமல் வீட்டிற்கு கடிதம் எழுதிவிடுவோம். அடுத்த கடிதம் வரும் வரையிலும் முந்தைய கடிதமே துணையாக இருக்கும்.

எஸ்டேட்டில் வேலைபார்த்துவந்த மலையாளி குடும்பங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற சில ஆண்கள், அங்கிருந்து ஏர் மெயிலில் கடிதம் அனுப்புவர். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற தங்களது கணவரின் கடிதங்களுக்காய் மாதக்கணக்கில் காத்திருப்பர் அவர்களது மனைவிமார்கள். வாசிக்கத் தெரியாத சில பெண்கள் சிறுவர்களான எங்களை அழைத்து வாசிக்கச்சொல்லி கண்ணீர் மல்க அதனை கேட்டுக்கொண்டிருப்பர்.

பள்ளி தேர்வு முடிவுகள், வேலைக்கான நேர்காணல் அறிவிப்புகள் என எல்லா கடிதங்களும் பேருந்து வாயிலாகவே எஸ்டேட்டுக்கு வந்துசேரும். பேருந்து சரியாக இயங்காத சில நாட்களில் தாமதமாக வந்துசேர்ந்த தபால்களின் காரணமாக கிடைக்கவேண்டிய வேலை இல்லாமல் போனவர்களும் உண்டு..

தபால்களை எப்போதும் வீட்டில் போட்டுவிட்டு போகும் தபால்காரர், தந்தி வந்தால் மட்டும் அந்த தொழிலாளி வேலைபார்க்கும் தேயிலைக்காட்டினை விசாரித்து, மழையோ / குளிரோ, பக்கத்துக் காடோ / தூரத்துக் காடோ, எதையும் சட்டை செய்யாமல், வேலைத்தளத்திற்கு நடந்துவந்து உரியவரிடம் சேர்ப்பார்.

அவ்வாறான தருணங்களில் காட்டில் தொலைவில் தபால்காரரைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான், அவர் அருகில் வந்து நம் பெயரைச் சொல்லி அழைக்கப் போகிறாரோ என்ற கிலி அங்கிருக்கும் எல்லோரையும் தொற்றிக்கொள்ளும். தந்தி வந்திருக்கும் தொழிலாளியின் பெயரைச் சொல்லி சத்தமாக அழைப்பார். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டபடி, அந்த தொழிலாளி தபால்காரர் நிற்கும் இடம்நோக்கி பதற்றத்துடன் ஓட்டமும் நடையுமாக வந்துசேர்வார். என்ன செய்தி வந்திருக்கிறது என தெரிய வருவதற்குள், ஊர்நாட்டில் வாழும் நெருங்கிய உறவினர்கள் எல்லோருடைய முகமும் ஞாபகத்துக்கு வந்துபோகும்.

எஸ்டேட் தவிர்த்து, நாலுமுக்கு அருகே அமைந்துள்ள மேல் கோதையாறு பகுதியிலும் தபால் நிலையம் உள்ளது. மாஞ்சோலைக்கு வருவதற்கு முன்னதாகவே அங்கு தபால் நிலையம் வந்துவிட்டது. மேல் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் இருந்தாலும், எஸ்டேட் சாலை வழியாகவே அங்கு செல்லமுடியும். கோதையாறு பகுதியில் உள்ள அணைக்கட்டு, அங்கிருக்கும் மின்வாரியம், அதற்கான பாதுகாப்பில் இருக்கும் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றனர். தனியார் குடியிருப்பு எதுவும் அங்கில்லை.

நாலுமுக்கிற்கு பேருந்தில் வந்திறங்கும் தபால்களை சேகரித்து, அவைகளை சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோதையாறுக்கு அன்றாடம் பேருந்திலும், பேருந்து இல்லாத நாட்களில், அடிக்கடி புலி, யானைகள் வந்துபோகும் அடர் காட்டுக்குள் தனி ஒருவராக நடந்தபடியும் கொண்டு சேர்ப்பவர் பாத்திமா ராணி. கால் நூற்றாண்டு காலமாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். வெளியூரில் இருந்து யாராலும் இப்படி அடிக்கடி விலங்குகள் நடமாடும் எஸ்டேட் பகுதிக்கு வந்து தங்கியிருந்து தபால் வேலை பார்ப்பதென்பது நினைத்துக்கூட பார்க்கயியலா செயல்.

தபால் நிலையத்தில் பணிபுரியும் அலுவலகர்களுக்கு தனியே வீடு ஒதுக்கும் கம்பெனி. ஆயினும், சுமார் நாற்பது ஆண்டுகாலம் நாலுமுக்கில் வேலைபார்த்த பால் தாத்தா, சமுத்திரம் அண்ணன் மற்றும் பாத்திமா ராணி அக்கா போன்றோரின் இணையரும் எஸ்டேட்டில் வேலை பார்த்ததால் அவர்கள் தங்களுக்கென தனி குடியிருப்பு வேண்டாமெனச் சொல்லி தொழிலாளர் குடியிருப்பிலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கென அங்கு சீருடையும் இல்லை. மக்களோடு மக்களாகவே இருப்பர்.

எஸ்டேட்டில், கம்பெனி அலுவலகம் தவிர்த்து, 2000 ஆண்டு வாக்கில் தபால் நிலையங்களுக்குத் தான் முதலில் தொலைபேசி இணைப்பு வந்தது. அடிக்கடி பெய்யும் மழை மற்றும் பெரும் வேகத்தில் வீசும் காற்றில் அவ்வப்போது தொடர்புகள் அறுந்துபோகும் நிலையிலும், அந்த தொலைபேசி வழியாகவே எஸ்டேட் முழுக்க உரியவர்களுக்கு அவசரச் செய்திகள் சேர்க்கப்பட்டன.

எஸ்டேட்டில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி பெரும்பாலும் எஸ்டேட் மேலாளர் சம்பளம் போடுவார். 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் வங்கி மூலமாகவே சம்பளம் வழங்கும் வழக்கம் நடப்புக்கு வந்தது. எஸ்டேட்டில் வங்கி எதுவும் இல்லாத காரணத்தால், தபால் நிலையம் மூலமாக சம்பளம் வழங்கப்பட்டது. கைநாட்டோ, கையெழுத்தோ வைத்து கையில் சம்பளப் பணத்தை வாங்கி, ரூபாய் நோட்டினை தடவும்போது, அந்த மாதத்தில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைவில் வந்துபோனாலும், இதற்காகத்தானே அட்டைக்கு இரத்தம் சிந்தி இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்ற நினைப்பு மேலோங்கும்.

என்னதான் தபால் நிலையத்தில் போய் நம் பணத்தை நமது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டாலும், கம்பெனியிடமிருந்து சம்பளப் பணத்தை நேரிடையாக கையில் தொட்டு வாங்கும்போது கிடைக்கும் திருப்தி பலருக்கும் இல்லை. ஆயினும் சம்பளத்தை முழுமையாக வாங்கியபோது அதனை அப்படியே செலவழித்தனர். ஆனால் தபால் நிலையத்திலிருந்து சம்பளம் வாங்க ஆரம்பித்த பின்னர், தேவைக்கு மட்டும் பணம் எடுத்துப் பழகி, சேமிக்க ஆரம்பித்தனர் பலரும்.

2005ஆம் ஆண்டில் எஸ்டேட்டுக்கு தொலைபேசி இணைப்பு கிடைத்தது விட்டாலும், இன்றளவும் எம்மக்களின் வாழ்வில் நெருக்கமான பிணைப்பு கொண்டது தபால் நிலையம். நவீன தொழில்நுட்பக் கருவிகளின் துணையுடன், உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடிகிற காலமிது.

ஆயினும், நம் அன்புக்குரியவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தை, காத்திருந்து வரப்பெற்று, அது தரும் அணுக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பினை இந்த தலைமுறையினர் இழந்துதான் போயுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.